சிறுபான்மை மக்களை ராஜபக்ச தரப்பு எவ்வாறு கவரும்?


கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
னாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறுபான்மை மக்களின் பிரதேசங்களில் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றதனையும், பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதனையும் எல்லோரும் தெளிவாக அறிவர். அடுத்த கட்டமாக ராஜபக்ச தரப்பு சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுண கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, பிரதேச அமைப்பாளர்களுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை வழங்குவார்கள். கணிசமான தொழில் வாய்ப்புக்களை வழங்குவார்கள். இதன் மூலம் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களிலும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியினை அவர்கள் கட்டியெழுப்பலாம் என்று முயற்சிப்பர். SLPP இனருக்கு வெற்றி பெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்படவில்லை என்று சொன்னாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் யாப்பு சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த அவர்களுக்கு குறைந்தது மூன்றில் இரண்டு (150/225) பெரும்பான்மை தேவையாகும்.
அதற்காக அவர்கள் மேற்கூறியவாறு சலுகைகளை சிறுபான்மை மக்களுக்கு வழங்கி அவர்களது வாக்குகளையும் அதிகம் பெற்று தனித்து மூன்றிலிரண்டு பலத்தை பெற முயற்சிப்பர். ஆனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளால் மாத்திரம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கணிசமான அளவு கவர முடியுமா என்பது பிரதான கேள்வி. இதற்கு முன்னர் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவேற்றப்பட்ட போதும் அவர்களின் மூலமாகவே அந்த அரசாங்கம் வெளியேற்றப்பட்ட நிகழ்வு நினைவு கூறத்தக்கது.

முக்கிய காரணம், அந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானமையே! அத்துடன் கிறிஸ்தவர்களுக்கெதிரான பிரச்சாரங்களும் தாக்குதல்களும் கூட அதே காலப்பிரிவில் சில இடங்களில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

எம்மவர்களும் அவர்கள் பக்கம் கணிசமாக இருக்க வேண்டும் என்ற கருத்து நூறு வீதம் நியாயமானதே. ஆனால் அது சரணாகதியாக இடம்பெறக் கூடாது. எம்மவர்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆளுந்தரப்பு பாரபட்சங்கள் காட்டும் போது அல்லது விசமப்பிரச்சார மதவாத அமைப்புக்களுக்கு நேரடி அனுசரணை வழங்கும் போது, தாக்குதல்களில் அவர்களது மக்கள் பிரதிநிதிகள், பதவிகளில் இருப்பவர்களே நேரடியாக ஈடுபடுவது தெரிந்ததும் மனச்சாட்சியுள்ள எந்த மானிடனும் ஆதரவளிக்க முன் வருவானா?
ஆளும் தரப்பின் பங்குதாரராக, ஆதரவாளர்களாக கணிசமான சிறுபான்மையினர் மாற்றம் பெறுவது ஆட்சியாளர் அவர்களுக்கு அளிக்கும் நியாயமான உரிமைகள், நீதி, பாதுகாப்பிலேயே தங்கியிருக்கிறது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -