அத்தோடு, தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலனை செய்து ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு ஆவன செய்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழர் பகுதிகளில் உள்ள வீதிகளின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்ஷ குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து, அதன் எதிர்காலப் பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் அரசமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுடன் அமைதியாக வாழ்வதற்கும் அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுவதற்கும் ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் தேர்தல் முடிந்தவுடன், தமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்திடக் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி, ஈழத்தமிழர் பிரச்சினையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நியாய வழிப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.