இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஊவா மாகாண கல்வி அமைச்சருமான செந்தில் தொண்டமான் அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மலையக மக்களை இழிவுப்படுத்தி பேசினார் என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்துள்ளனர் எனவே இப்பிரச்சினை தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி தீர்வுகாணவேண்டும் என்ற நோக்கில் செந்தில் தொண்டமான் அவர்களுடன் மக்கள் நேரடியாக கேள்விகளை கேட்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகின்றேன் எனவே உண்மையான சமூக அக்கறையுள்ளவர்கள் நீங்கள் விரும்பினால் அன்றைய தினம் அவரிடம் கேள்விகளை கேட்கமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
எதிர்வரும் புதன்கிழமை 27.11.2019 மாலை கொட்டக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சீ.எல்.எப் மண்டபத்தில் முன்னாள் ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான்; அவர்களுடன் மக்கள் நேரடியாக கேள்விகளை கேட்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளேன். முன்னாள் ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான்; அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிந்தேன். குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது அரசியல் பின்புலத்தோடு இடம்பெறவிருப்பது யாவரும் அறிந்ததே. குறித்த சம்பவம் தொடர்பாக மக்களுக்கும் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான தவறான புரிதலே காரணமென எண்ணியே நான் அமைதியாக இருந்தேன். ஆனால் தற்போது இச்சம்பவம் அரசியல் விஸ்வரூபம் எடுத்து தவறான பாதையில் செல்வதால் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகிய நான் கடமைப்பட்டுள்ளேன். யாருக்கும் யாரையும் எதிர்க்கவும், கேள்விகளைத் தொடுப்பதற்கும் உரிமையுள்ளது. ஆனால் எமது இலக்கை அடைவதற்காக நாம் தெரிவுசெய்யும் அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். இப்பிரச்சினையை திரிபுப்படுத்தி அரசியல் இலாபம் பெற சிலர் முனைகின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்கு நாங்கள் ஓரிடத்தில் சந்தித்து பேசினால் மாத்திரமே இதற்கான புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். ஆகவே அதற்கான சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தியிருக்கின்றேன் என்றார்.