தங்கப்பதக்கம் பெற்ற வீரர் ஏ.எம்.எம்.றிஸ்வானுக்கு தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் மாகாண பணிப்பாளரினால் அநீதி

எஸ்.எம்.அறூஸ்-
துளையில் இடம்பெறவுள்ள 45வது தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ள கிழக்கு மாகாணத்தின் 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவில் மிகச்சிறந்த ஓட்ட வீரரான ஏ.எம்.எம்.றிஸ்வான் என்பவரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்எம்.அறூஸ் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அட்டாளைச்சேனையில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் திகதிகளில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 4X400 மீற்றர்அஞ்சல் ஓட்டத்தில் அம்பாரை மாவட்டம் முதலாமிடத்தைப் பெற்றிருந்தது. அந்தக் குழுவில் எமது லக்கி விளையாட்டுக் கழக வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான் தலைமைதாங்கி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
4X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் எமது லக்கி விளையாட்டுக் கழகம்தான் பிரதேச மட்ட சம்பியனாகத் தெரிவாகியிருந்தது.
லக்கி விளையாட்டுக் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமான ஏ.எம்.எம்.றிஸ்வான் கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம் மற்றும் 4X 100, 4 X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டக் குழுவில் இடம்பெற்று ஓடியதுடன் தங்கப்பதக்கத்தினையும் பெற்றிருந்தார். அத்தோடு அஞ்சல் ஓட்டக்குழுவிற்கு தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
4X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் மிகச்சிறந்த ஓட்டப்பெறுதியையும், ஆர்வத்தையும் கொண்டுள்ள ஏ.எம்.எம்.றிஸ்வான் தேசிய விளையாட்டு விழாவிற்கான அஞ்சல் ஓட்டக் குழுவில் இடம்பெற்று நமது கிழக்கு மாகாணத்திற்கு தங்கப்பதக்கத்தினை வென்று கொடுப்பார் என பெரிதும் நம்புகின்றோம்.
இந்நிலையில் எமது லக்கி விளையாட்டுக் கழக வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான் 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு தகுதியும்,உரிமையும் இருந்தும் அந்த நிகழ்ச்சியில் அவரது பெயர் இடம்பெறவில்லை என தெரியவருகின்றது - இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி, மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி என்பவற்றில் 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் ஓடி தங்கப்பதக்கம் பெற்ற வீரருக்கு தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஏ.எம்.எம்.றிஸ்வானுக்கு வாய்ப்பு வழங்காமல் அவரைவிட திறமை குறைந்த வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வெற்றி பெற்ற அஞ்சல் ஓட்டக்குழுவில் இடம்பெறாத வீரா்கள் சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தைப் பெற்ற 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகமே பங்குபற்றியது. இந்த அணியில் மாவட்டத்தின் சிறந்த வீரா்களும் இணைக்கப்பட்டிருந்தனர்.
கூடுதலான நிதி செலவழிக்கப்பட்டு நடத்தப்படுகின்ற கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுகின்ற விளையாட்டு வீரா்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமான செயற்பாடாகும்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் 4X400M அஞ்சல் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்த எமது கழக வீரர் றிஸ்வான் தலைமையிலான குழுவினர் வெற்றி பெற்ற போதிலும், திட்டமிட்ட வகையில் எமது கழக வீரரை தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் 4X400M அஞ்சல் ஓட்டக்குழுவில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான திட்டமிட்ட சூழ்ச்சியாகவே இதனை நாம் நோக்குகிறோம்.
4X 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் றிஸ்வான் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் புதிய சாதனையையும் ஏற்படுத்தினர். 3 நிமிடம் 30 செக்கன் 00 மில்லி செக்கன்களில் ஓடியே புதிய சாதனையை றிஸ்வான் குழுவினர் படைத்தனர். கடந்தகால சாதனையாக 3நிமிடம் 31 செக்கன் 01 மில்லி செக்கன்களாக இருந்தது.
45வது தேசிய விளையாட்டு பெருவிழாவிற்கான சுற்றறிக்கையின் பிரகாரம் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் தேசிய மட்டம் என நான்கு மட்டங்களைக் கொண்டு தேசிய விளையாட்டுப் பெருவிழா நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மூன்றாம் கட்டமான மாகாண மட்ட விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்று வெற்றி பெறுகின்ற வீர,வீராங்கனைகள் தேசிய மட்டப் போட்டிக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாகாண மட்டப் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்ற வீரா்கள் தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பிலிருந்து நீக்கிவிட முடியாது.
இதற்கு மேலதிகமாக தேசிய அணியைப்பிரதிநிதித்துவப்படுத்தும் வீர,வீராங்கனைகள் நுளைவு அடைவுமட்டத்தின் அடிப்படையில் மாத்திரம் தேசிய விளையாட்டு பெருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இது இவ்வாறு இருக்கத்தக்கதாக 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற எமது லக்கி விளையாட்டுக்கழக வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான் என்பவரை தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் கிழக்கு மாகாண 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவில் நீக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும்.
எனவே, 4X400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற ஏ.எம்.எம்.றிஸ்வான் தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் கிழக்கு மாகாண அஞ்சல் ஓட்டக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் போட்டி நிகழ்ச்சியில் ஓடுவதற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -