மட்டக்களப்பு- உறுகாமம் குளத்தில் சக நண்பர்களுடன் உல்லாசமாய்க் குளிக்கச்சென்றவேளை நீரில்மூழ்கிய பாடசாலை மாணவனின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது.
வந்தாறுமூலை பிரதேசத்தைச்சேர்ந்த 16 வயதுடைய தங்கராசா ஜெயசீலன் என்ற இளைஞனே நீரில் மூழ்கி உயிரிந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விளைஞன் தனது நண்பர்கள் மூன்றுபேருடன் திங்கட்கிழமை பிற்பகல் உறுகாமம் குளத்தில் குளித்துக்கொண்டு உல்லாசமாக தோணியில் சவாரிசெய்துள்ளார். அவ்வேளை அங்கு வீசிய கடும் காற்றினால் அத்தோணியின் பாகம் உடைந்ததையடுத்து தோணி கவிழ்ந்துள்ளது. அனைவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதன்போது மீனவரது உதவியுடன் மூன்றுபேர் காப்பாற்ப்பட்டனர். ஒருவர் காணாமற்போயிருந்தார்.
இவரை மீனவர்கள் தேடியபோதிலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.
இவர் வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தின் கபொத சாதாரணதர வகுப்பு மாணவராவார்.
கரடியனாறு பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.