திருகோணமலை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் காணாமல் போன ஒரு பிள்ளையின் தந்தை சிறுபிட்டி வயல் பகுதியில் சடலமாக நேற்றிரவு (27) மீட்கப்பட்டுள்ளதாக நிலாவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை தம்பலகாமத்தை பிறப்பிடமாகவும் நிலாவௌி இலுப்பைக்குளம் பகுதியில் திருமணமான நிலையில் வசித்து வரும் ஒரு பிள்ளையின் தந்தையான ராசரட்ணம் பிரபு (33வயது) என்பவருடையது எனவும் நிலாவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வழமை போல் அதிகாலை நான்கு மணிக்கு சீமெந்து கல் செய்யும் இடமொன்றிற்கு வேலைக்கு செல்வதாகவும் மனைவி நேற்றைய தினம் வழமை போல காலை 10.00மணியளவில் வீட்டுக்கு வருபவர் வீட்டுக்கு வரவில்லையெனவும் அதே நேரம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிறந்த பிள்ளை சுகயீனமுற்ற நிலையில் மனைவி வைத்தியசாலையில் இருக்கின்ற நிலையில் கணவர் வைத்தியசாலைக்கு பார்ப்பதற்றகாக நேற்று மதியம் செல்லவில்லையெனவும் மனைவி தனது தாயிடம் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை மருமகன் வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லையென தெரியப்படுத்திய போது உறவினர்களின் உதவியுடன் தேடியுள்ளார்.
இதனையடுத்து கன்னியா இலுப்பைக்குளம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானித்ததையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதேநேரம் அப்பகுதிக்கு ஆடு மேய்ப்பதற்காக சென்றவர் சிறுபிட்டி ஓடைக்கு அருகில் சடலமொன்று கிடப்பதாகவும் கிராமமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்த நிலாவௌி பொலிஸார் சடலத்திற்கு அருகில் சென்று இரவு நேரம் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது,
மேலும் சடலத்தை பார்வையிடுவதற்காக நேரில்
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் சென்று பார்வையிட்துடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
குறித்த நபரை கொலை செய்துதான் இவ்வாறு வயல் பகுதியில் போட்டிருப்பதாகவும் உறவினர்கள் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.
ஆகையால் பிரேத பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறும் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் கட்டளையிட்டார்.