சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் நிச்சயம் கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. வெயிலில் வியர்த்து, மழையில் நனைந்து போராட்டங்களை முன்னெடுத்த அந்த சமான்ய மக்களின் தனித்துவமான கோரிக்கையை நிச்சயமாக அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான். இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக சிறை சென்ற செம்மல்களையும் நாம் மறந்து விடக் கூடாது.
இது புறமிருக்க, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றப் போராட்டம் அல்லது அதற்கான இலக்கு இன்று சிலரால் தவறான வழிகளில் திசை திருப்பப்படுகிறதோ என்ற நியாயமான சந்தேகங்களும் எனக்குள் எழுகின்றன. சாய்ந்தமருதுவில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் அடிப்படையிலேயே இவ்வாறான சந்தேகங்கள் எழுந்துள்ளன
ஒரு தரப்பாருக்கு வெறுப்பையும் கசப்பையும் ஏற்படுத்தும் சம்பவங்கள் அங்கு தொடர்ச்சியாக இடம்பெறுவதாக அறிகிறேன். இதன்மூலம் கைக்கு எட்டக் கூடியதான ஒன்றை தொலை தூரதத்துக்கு நாங்களே கொண்டு சென்று விடுவோமோ என்ற அச்சமும் எனக்குள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான விரும்பத்தகாத நடவடிக்கைகளை ஒருபுறம் அரங்கேற்றிக் கொண்டு, மறுபுறம் ஒரு புனிதமான கோரிக்கைக்காக போராடுவது என்பது எமது போராட்டத்தை நாமே கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.
இந்த விடயத்தில் நமது சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் தன்னிடமிருந்து கடிவாளத்தின் இறுக்கத்தை தளர்த்தி விட்டதா அல்லது கடிவாளத்தையே கைவிட்டதா இன்றேல் பிறரிடம் அந்தக் கடிவாளத்தைக் கையளித்து விட்டதா என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது.
இங்கு நாம் ஒரு விடயத்தை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். எமது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான முழுமையான ஒத்துழைப்பும் அங்கீகாரமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர், எம்.எச்.எம். ஹாரீஸ் ஆகியோரிடமிருந்தே கிடைக்க வேண்டும். இது தவிர, ஜனாதிபதி மாளிகையினாலோ அலரி மாளிகையினாலோ ஏன் வெள்ளைமாளிகைக்குச் சென்று விண்ணப்பம் செய்தாலுமோ அது கிடைக்கப் போவதில்லை. இதுதான் யதார்த்தம். இந்த உண்மை பலருக்குத் தெரிந்தாலும் ஜீரணிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் எம்மால் விரைவாக எதிர்பார்க்கப்பட்ட சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனமைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டும் இன்னும் கீழே வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையை எம்மால் பேச முடியாது. போலி கௌரவ போர்வைகளுக்குள் எத்தனை காலம் எம்மால் வாழ முடியும்?
இவ்வாறான நிலையில்……,
1.சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் கல்முனை மாநகர மேயருடன் சாய்ந்தமருதுக்கு சென்ற குழுவினரை திருப்பியனுப்பியது.
2. சுகாதார அமைச்சர் ராஜி சேனாரத்ன கல்முனைக்கு வருவது தொடர்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்தமை.
3.பிரதியமைச்சர் ஹாரிஸ், சட்டத்தரணி ரஸாக் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டை நிராகரித்தமை என்று பட்டியல் இட்டுச் சொல்லக் கூடிய விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டிருந்தமை கவலை தருகிறது. ‘குளத்தோடு கோபித்துக் கொண்டு எதனையோ கழுவாதன் கதை’ போன்றல்லவா இவைகள் உள்ளன?
அரசியல்வாதிகளின் நிதிகளைப் பெறக் கூடாது, அவர்கள் அங்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடாது என்பதெல்லாம் கொள்கைகளாக, பிரகடனங்களாக தொடர்ந்தும் காணப்பட்டால் சாய்ந்தமருதுவின் எதிர்கால தலைவிதியை தலைகீழாக எழுதியவர்களாக நாமே ஆகிவிடுவோம்.
இதேவேளை, மேற்சொன்ன மூன்று விடயங்களையும் அங்கு அடுத்தடுத்தாக அரங்கேற்றி விட்டு கொழும்புக்கு வந்து இங்குள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு ஹக்கீமையும் ஹாரீஸையும் சந்திக்க முயல்வது நீண்ட காற்சட்டை அணிந்தவர்கள் கட்டைக் காற்சட்டைகளை மாற்றிக் கொண்ட மாதிரித்தான். தொடையைக் காட்ட கொஞ்சம் வெட்கமாகத்தானே இருக்கும்?
மேலும், இந்த விடயத்தில் சிலர் " பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையையும் காட்டும் விலாங்குத்தனத்துடன் செயற்படுவதும் ஏனோ தெரியாது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம், பிரதியமைச்சர் ஹாரீஸ் ஆகியோரின் மனநிலையை இறைவன் மாற்றி அவர்களாகவே முன்வந்து அதனை வழங்க விரும்பினாலும் இவ்வாறான செயற்பாடுகள் சாய்ந்தமருதுவில் தொடர்ந்தால் இறைவனே எம்மில் கோபப் பார்வையை இறக்குவதுடன் அவர்களிடம் உதிக்கக் கூடிய நல்ல எண்ணத்தையம் இல்லாமல் செய்து விடுவான். (இறைவன் எம்மைக் காப்பானாக)
மேலும், சாய்ந்தமருதுவில் முபாரக் டெக்ஸடையில் திறப்பதற்கு கல்முனை மேயர் ரக்கீப் வரலாம். ஆனால், வபா பாறூக்கின் வீட்டுக்கு அவரது உறவினரான ஜவாத் வரக்கூடாது. என்னடா நீதி? என்னடா தர்மம்? அரசியல் கலக்காத தனிப்பட்ட விடயங்களிலும் இந்தப் பாகுபாடா?
இது ஒரு புறமிருக்க, கொழும்பில் வாழும் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுப்பது குறித்தும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹக்கீம், ஹாரீஸ் உட்பட பலரைச் சந்திப்பது பற்றியும் பேசப்பட்டது. சிலரைச் சிலர் சந்திக்க முயற்சித்தும் உள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களில் வந்த செய்தி ஒரு பக்கம் மட்டுமே. அங்கு பேசப்பட்ட ஏனைய விடயங்கள் மறுபக்கமாகவும் எனக்குத் தெரிந்தவையாகவும் இருந்து போகட்டும்.
எனது மிக நெருக்கமான, நான் மதிக்கின்ற நண்பர் சிறிகொத்தா கபூர் (அமீர்) அவர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளனர். அவரிடமும் சில அமைச்சர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டுள்ளனர். அவரும் மறுக்க முடியாமல் செய்வோம்.. செய்வோம் என்று கூறியுள்ளார். ஆனால், அவரது மனதுக்குத் தெரியும் ஹக்கீமும் ஹரீஸும் இணங்காவிடில் எவராலும் இந்த விடயத்தில் எதனையும் செய்ய முடியாது என்று.
இவ்வாறானதொரு நிலையில், சாய்ந்தமருதுவில் எதிர்ப்பு அரசியலையும் கொழும்பில் இணக்க அரசியலையும் சிலர் செய்ய முயற்சிப்பதால் பாதிக்கப்படப் போவது சாய்ந்தமருது சாமான்யர்களே தவிர, கொழும்பில் குளு.. குளு அறைகளில் இருப்போர் அல்லர்.
மாதம் ஒரு தடவை கொழும்பில் கூடி சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஆராயப் போகிறார்களாம்… ஓ….. இது பெரிய மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டம் போல்… ‘ மட்டக்களப்பு கோச்சியில் ரின்கோமலை கொம்பாட்மண்ட்’ இணைந்த மாதிரித்தான் இந்த வியடமும் உள்ளது. கடைசியில கல்லோயாவில் கழற்றி விட வேண்டியதுதான்.
மேலும், இது தொடர்பில் நான் நேற்று பதிவிட்ட விடயம் ஒன்றுக்கு Arafath Cassim என்பவர் இவ்வாறு பின்னோட்டம் விட்டிருந்தார்.
‘நீங்கள் மயில் சாா்ந்த கட்சி என்றானதால் உங்களின் மேலிருந்த அபிமானத்தை திசை திருப்ப வைத்துவிட்டீா்கள்’ என்று.
ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிய உரிமை. அதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், மரத்துக்கும் மயிலுக்கும் கொடும்பாவி எரித்தவர்களும் நாங்கள்தான் என்பதனை இந்த நபர் மறந்து விடக் கூடாது .
ஒருவன் மயில் கட்சியையும் ஆதரிக்கலாம் மரக் கட்சியையும் ஆதரிக்கலாம் ஏன் பொதுபல சேனா அமைப்பிலும் சேரலாம். அது குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் இல்லை. சரி நான் மயில் கட்சி என்பதால் அபிமானத்தை திசை திருப்பியதாக என்மீது குறை கூறும் உங்களுக்கு மரக்கட்சி மீது ஏனோ திடீரென இந்த அபிமானம்?
இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டுதான் இன்று நாம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்காக போராடுகிறோம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை (என்னை) நியாயத்துக்கு அப்பால் வெறுத்து இறைவனின் கோபப் பார்வையை தன்மீது இறக்கிக் கொள்ளும் சிலர்தான் இன்று சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்கான போராளிகளாகவும் தியாகிகளாகவும் புறப்பட்டுள்ளனர்.
இதுதான் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் புதிய யாப்புத் திருத்தமா? எத்தனையாவது திருத்தச் சட்டமோ? துறைசார் புத்தி ஜீவிகள் வாழ்க!
Arafath Cassim அவர்களே! உங்களை விட நான் சாய்ந்தமருது மக்களின் வலிகளை, ரணங்களை நன்குணர்ந்த சாதாரண ஊடகவியலாளன். அதேபோன்று ஒரு முட்டைக்காக கொக்கரிக்கும் பெட்டைக் கோழி நான் அல்ல. ஆனால், அமைதியான ஆமை. நான் நடிகனும் அல்ல.. மகா நடிகனும் அல்ல.. நீங்கள் நேரடி விவாதம் ஒன்றுக்கு வாருங்கள். நீங்கள் விரும்பியோரை அழைத்து வரலாம் நான் தனித்தவனாக வருகிறேன். அந்த விவாதம் பகிரங்கமாக இருக்க வேண்டும். விவாதித்துப் பார்ப்போம்.
கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமை நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டுமென்றால் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் சென்றால் மட்டுமே சந்திக்கலாம் என்ற நிர்ப்பந்த நிலைமையை இன்று தோற்றம் பெறச் செய்தவர்கள் நீங்களும் Jiffry Marzook போன்றவர்களுமே.
விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களான முழக்கம் மஜீத், ஏ.ஸி. யஹியாகான், பிர்தௌஸ் போன்றவர்களின் பிரசன்னத்தின் மத்தியிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் உங்களால் பேச முடியுமென்ற தொங்கி வாழல் நிலைமையை நீங்களே இன்று உருவாக்கி விட்டீர்கள்.
இன்னும் பல விடயங்களை என்னால் அம்பலப்படுத்த முடியும். ஆனால் நாவடக்கத்தைப் பேணவே விரும்புகிறேன். இருப்பினும் சீண்டினால் தீண்டுவேன்.
சாய்ந்தமருது சாமான்ய மக்களின் உணர்வுகளுடன் விளையாடி
Twinkle, twinkle, little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky பாடாதீர்கள்.