"மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களே அதனை அடகு வைக்கும் நிலைக்கு சென்று விட்ட பிறகு தமது உரிமையைப் பாதுகாப்பதற்காக நீதி மன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக அரசியலில் இது ஒரு மோசமான பிற்போக்கு நிலையாகும். மக்கள் பிரதிநிதிகளே மக்களுக்குத் துரோகம் செய்வதாக மாறுவதும் அவர்களின் அநியாயங்களுக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதும் ஆரோக்யமான நிலையல்ல. இது தொடர்வதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது."
என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
“20ஆவது திருத்தம்: என்ன நடக்கிறது?" என்ற தலைப்பில் விசேட மக்கள் சந்திப் பொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடியில் நேற்று (15.09.2017) நடாத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
"மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேர்தல்களில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி தமது பிரதிநிதிகளைத் மக்கள் தெரிவு செய்கிறார்கள். எனவே, ஒவ்வொரு விடயங்களிலும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தியதாகவே நடந்து கொள்ள வேண்டியது அரசியல் பிரதிநிதிகளின் கடமையாகும். ஆனால், துரதிஸ்டவசமாக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசியல் வாதிகளில் பெரும்பாலானோர் மக்களின் நலன்களைப் புறக்கனித்து விட்டு தமது சொந்த இலாபங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். மேலதிக பதவிகள், வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் என்ற சொந்த இலாபங்களை வைத்தே அரசியல் வாதிகளும், கட்சிகளும் தீர்மானங்களை மேற்கொள்ளுகின்ற நிலை என்றுமில்லாத அளவு தற்போது அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில் 20 ஆவது திருத்த விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல் வாதிகளும் மீண்டுமொரு முறை மக்களுக்கு விரோதமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் முஸ்லிம் உறுப்பினர்களும் 20 அவது திருத்த விடயத்தில் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் சமுகத்தை ஏமாற்றமடையச் செய்திருப்பதோடு ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை பெயரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. தமது பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படப் போகிறது என்ற ஒரே காரணத்திற்காக மக்களின் அடிப்படை வாக்குரிமையைக்கூட அடகு வைப்பதற்கு இவர்கள் துணிந்திருக்கிறார்கள்.
செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் நிறைவடையும் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிக்கப்போவதாக இந்த 20 ஆவது திருத்த சட்டம் சொல்கிறது. இது மக்களின் அடிப்படை வாக்குரிமையை பறித்தெடுக்கின்ற ஒரு பாரதூரமான விடயமாகும். ஏனெனில் எமது அரசியல் யாப்பின் அடிப்படையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை தமது மாகாண சபை பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற வாயப்பு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது யாப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை, தமக்கிருக்கும் பாராளுமன்ற பெரும்பாண்மையாக வைத்துக்கொண்டு சில சட்ட திருத்தங்கள் மூலமாக அரசாங்கம் பறித்தெடுக்க முயற்சிக்கிறது. இதற்கு கண்களை மூடிக்கொண்டு கிழக்கு மாகாண சபை ஆதரவு தெரிவித்திருக்கிறது.
தமக்கு வாக்களித்து பதவிகளில் அமர்த்திய மக்களின் வாக்குரிமையையே தமது சொந்த இலாபங்களுக்காக அடகு வைக்கின்ற ஒரு துரோகத்தன செயல் இதுவாகும். கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த வரையில் மக்களின் உரிமைகளை அடகு வைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதற் தடவையுமல்ல. உதாரணமாக, கடந்த 2012 மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதலாவது சபை அமர்விலேயே மக்களுக்குத் துரோகமான இவ்வாறான காரியம் ஒன்றை இவர்கள் செய்திருக்கிறார்கள்.
'திவிநெகும' சட்ட மூலமானது மாகாண சபைகளின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந்திருக்கிறது என உச்ச நீதி மன்றம் மிகத் தெளிவாக கூறிய பின்னரும் கூட மக்களின் நலன்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அந்த சட்ட மூலத்திற்கு இவர்கள் ஆதரவு வழங்கினார்கள்.
'மக்களுக்காக இதனை சற்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது, எனவே கால அவகாசம் தாருங்கள்' என்று கோருகின்ற குறைந்த பட்ச துணிச்சலோ நேர்மையோ கூட இவர்களிடம் இருக்கவில்லை. சபை கூடிய முதல் நாளிலேயே இவ்வாறு மக்களுக்குத் துரோகம் செய்கின்றோமே என்ற கவலைகூட இவர்களிடம் இருக்கவில்லை. இவ்வாறு மக்களின் நலன்களை அடகு வைத்ததற்காக மஹிந்த அரசாங்கத்திடமிருந்து பல சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் கூச்சமின்றிப் பெற்றுக் கொண்டுமுள்ளார்கள். இப்போது சபையின் பதவிக்காலம் முடிகின்ற சந்தர்ப்பத்திலும் மக்களின் வாக்குரிமையை அடகு வைக்கின்ற மோசமான காரியத்தைச் செய்கிதிருக்கிறார்கள்.
மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களே அதனை அடகு வைக்கும் நிலைக்கு சென்று விட்ட பிறகு தமது உரிமையைப் பாதுகாப்பதற்காக நீதி மன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக அரசியலில் இது ஒரு மோசமான பிற்போக்கு நிலையாகும். மக்கள் பிரதிநிதிகளே மக்களுக்குத் துரோகம் செய்வதாக மாறுவதும் அவர்களின் அநியாயங்களுக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதும் ஆரோக்யமான நிலையல்ல. இது தொடர்வதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான், எந்த சூழ்நிலையிலும் மக்களுக்குத் துரோகம் செய்யாத, என்றென்றும் மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உழைத்து வருகிறது. மக்களுக்குத் துரோகம் செய்யத் துணிந்து விட்ட கட்சிகளையும் நபர்களையும் நிராகரித்து விட்டு மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய அரசியல் சக்தியை கட்டியெழுப்புவதே தற்போது நமக்கு முன்னாலுள்ள ஒரே தெரிவாகும்."
NFGG காத்தான்குடி பிராந்திய சபையின் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் அவ்ரகளும் உரையாற்றினார்.