உயர் நீதிமன்ற முடிவினால் முசலி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது - அஸ்வர் பெருமிதம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முசலிப் பிரதேச மக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமையானது அநீதிக்கு இடமில்லை. நீதியையே இறைவன் விரும்புகின்றான். என்பதை நன்றாகப் பறைசாற்றுவதாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற மனு தள்ளுபடி குறித்து வெளியிட்டுள்ள செய்தியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அநீதி இழைக்கப்பட்டவர்கள் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த முசலி உட்பட ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 1990ஆம் ஆண்டு காட்டு மிராண்டித் தனமாக புலிகளால் விரட்டப்பட்ட போது அவர்கள் புத்தளம் கற்பிட்டி கரையோரத்திற்குத்தான் வந்து சேர்ந்தார்கள். அவர்களை கரை சேர்த்து பலவந்தமாக தென்னந்தோப்புக்களை எடுத்து தற்காலிக ஓலைக் குடிசைகளை, நீர் வசதிகளை ஏன் தொழுகைக்குரிய வசதிகளைக் கூடச் செய்வதற்கு அல்லாஹ் எனக்கு அந்தப் பாக்கியத்தை வழங்கினான். நான் அன்று புத்தளம் தொகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினராகவும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் செயலாற்றினேன்.

எனவே இந்தச் செய்தி அநீதி இழைக்கப்பட்ட முசலிப் பிரதேச முஸ்லிம் மக்களுக்கு சார்பாக நீதி, நியாயம் இப்போது கிடைத்துள்ளது என்பதைக் கேட்கும் போது என் மனம் மகிழ்ச்சியடைகின்றது.

எனவே இதற்கு விரோதமாக யார் யாரெல்லாம் செயற்பட்டார்களோ அதாவது நீதிக்குப் புறம்பாக செயற்பட்டார்களோ அவர்கள் கை சேதப்பட்டவர்களாக ஆவார்கள்.

ஏனென்றால் நபி (ஸல்) கூறியிருக்கின்றார்கள். “எனக்குப் பின்னர் ஆட்சியாளர்கள் வருவார்கள். அவர்கள் பொய்யுரைப்பர்; அநீதி இழைப்பர். யார் அவர்கள் கூறும் பொய்யை உண்மைப்படுத்தி அவர்கள் செய்யும் அநீதிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றாரோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்லன்; நான் அவரைச் சார்ந்தவன் அல்லன்.”

எனவே இந்த விடயத்தில் இறைவன் பக்கம் சார்ந்தவர்கள், இந்த வழக்கை மன்றில் நன்றாக வாதாடிய சட்டவல்லுனர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆரம்பம் முதல் மக்களின் பக்கம் சார்ந்து அதாவது நீதியின் பக்கம் சார்ந்து மிகவும் தைரியமாக போர் தொடுத்ததையும் நாம் மறந்துவிடவில்லை. அவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நல்லவர்களுக்கு இறைவன் நீதியைச் செலுத்தியுள்ளான். இவ்வேளையில் புத்தளம் நகர பிதாவாக இருந்த வடமேல் மாகாண உறுப்பினர் எம். ஐ. பிஸ்ருல் ஹாபி, கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச் முஹம்மத் மற்றும் அவருடைய ஆதரவாளர்களையும் மீண்டும் நினைத்துப் பார்த்து அவர்கள் ஆரம்பத்தில் செய்த தியாகங்களுக்காக என்னுடைய பராட்டுக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றேன். - என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -