அளுத்கம பிரச்சினைக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு முன் இந்த பிரச்சினையின் சூத்திரதாரிகள் யார்? என்று கண்டறிவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் பின்னிற்பதன் நோக்கம் என்ன? அளுத்கம பிரச்சினைக்கு பின்னால் இருந்து செயல்பட்டது மஹிந்த அரசுதான் என்று கூக்குரலிட்டு ஆட்சியை கைப்பற்றியவர்கள், பின்னாலில் ஆட்சிக்கு வந்தவுடன் அளுத்கம பிரச்சினையை விசாரணைக்கு எடுத்து அந்த பிரச்சினைக்கு பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யார் என்று இனம்காட்ட வாய்ப்புகள் இருந்தும், இன்றுவரை இந்த நல்லரசாங்கம் அதனைச் செய்யாமல் பின்னடிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.
நீதியான விசாரணையொன்று நடைபெற்றால் உண்மைநிலை வெளிச்சத்துக்கு வருவது மட்டுமல்ல, அதன் சூத்திரதாரிகள் இந்த நல்லரசாங்கத்துக்குள்ளும் உள்ளார்கள் என்ற உண்மையும் வெளிவரும் என்ற காரணத்தினால், இந்த விசாரணையை நடத்தாமல் நஸ்டஈடு வழங்குவதற்கு மட்டும் முன்வந்துள்ளார்கள் என்றால் இதன் உள்நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ளலாம்.
மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முஸ்லிம்கள் முன்வந்தது இந்த காரணத்துகாகத்தான் என்று தெறிந்து கொண்டும், இந்த நல்லாட்சிகாரர்கள் மேடைக்கு மேடை இந்த பிரச்சினையின் சூத்திரதாரிகளை எங்கள் அரசாங்கம் வந்தால் விசாரணை நடத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம், அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்குவோம் என்றவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களை ஏமாற்றி ஆட்சியை அமைத்துக்கொண்ட இவர்கள் கொடுத்த வாக்கை இதுவரை காப்பாற்ற முன்வரவில்லை.
உண்மையில் மஹிந்த அரசுதான் இதற்கு பின்னால் இருந்தார்கள் என்றால், அதனை விசாரணை மூலம் நிரூபித்து காட்டியிருந்தால், நிரந்தரமாகவே மஹிந்த என்பவர் முஸ்லிம்களின் எதிரியாகவே மாறியிருப்பார், அதன் பிறகு நல்லாட்சியை கொண்டுசெல்வதற்கு அது உறுதுணையாகவும் அமையும் என்ற நல்ல சந்தர்ப்பம் இருந்தும், ஏன் அவர்கள் விசாரணை நடத்துவதற்கு இன்றுவரை முன்வரவில்லை என்ற ஐயமும் ஏற்படுகிறது.
எனவே, ஆட்சியமைத்து இரண்டரை வருடங்களின் பின் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஸ்டஈடு கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று இந்த நல்லரசாங்கம் நினைக்குமாக இருந்தால், அது முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கும் விடயமாகவே கருதவேண்டியிருக்கும்.
சிறுபாண்மையிரான எங்களுக்கு தேவை நஸ்டஈட்டுடன், இதற்கு பின்னாலிருந்த சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படவேண்டும் என்பதேயாகும். காரணம் இனிமேலும் இப்படியான கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்பதனால்.
இந்த பிரச்சினையின் சூத்திரதாரிகள் இன்று சட்டநடவடிக்கைக்குள் அகப்படாமல் சுதந்திரமாக செயல்படும் விடயமானது, எதிர்காலத்தில் சிறுபாண்மையின மக்களுக்கு பாதகமான விடயமாகவே அமையும்.
என்னதான் இருந்தாலும், முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கும், அதன் மூலம் பலம்வாய்ந்த மஹிந்த அரசை வீழ்த்துவதற்கும் ஏற்கனவே திட்டம் தீட்டி செயல்பட்டவர்கள் இந்த நல்லரசாங்கத்துக்குள்ளும் உள்ளார்கள் என்ற காரணத்துக்காகவே, அளுத்கமை பிரச்சினையை விசாரிப்பதற்கு இந்த நல்லரசாங்கம் பின்நிற்கின்றது என்ற வாதமும் முஸ்லிமக்களின் மத்தியிலே இப்போது பரவலாக பேசப்பட்டுவருகின்றது என்ற விடயத்தையும் நாம் கவணிக்கத் தவறக்கூடாது.
இந்த நல்லாட்சியின் மீது முஸ்லிம்கள் சந்தேகப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அரசியல் ரீதியாக மஹிந்தவை ஓரம்கட்டிவிட வேண்டும் என்ற என்னத்தில் பல விடயங்களை முன்னெடுக்கும் இந்த அரசாங்கம், அளுத்கம விடயத்தில் மஹிந்தவும் அவரது சகோதரர்களும்தான் சூத்திரதாரிகளாக செயல்பட்டார்கள் என்பது உண்மையாக இருக்குமாக இருந்தால், இந்த விடயத்தை இவர்கள் சும்மா விட்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழுவதில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதனால்தான் விசாரணை என்று வந்தால் தாங்களும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே, இவர்கள் இதற்கு இடம் கொடுக்காமல் காய்நகர்த்துகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
அப்படியில்லாது விட்டால், முஸ்லிம்களாகிய எங்களுக்கு நஸ்டஈடு தறுவது மட்டும் பரிகாரம் ஆகாது, மாறாக இந்த பிரச்சினையின் சூத்திரதாரிகளும் நீதியினால் இனம்காணப்பட்டு தண்டணை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் அவாவாகும். அப்படி செய்யாது விட்டால், இந்த பிரச்சினையின் சூத்திரதாரிகள் நல்லாட்சிக்குள்ளும் இருக்கின்றார்கள் என்றவாதம் உண்மையாகி விடும் என்பதே எங்கள் கருத்தாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்முனை.