இப்போது அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா..?
என்ற கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் உள்ளதா...?
என்று பார்த்தால் பதில் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.
அந்த கேள்விக்கு பதில் தெறிந்திருந்தால், இந்த கட்சியை வழிநடத்துபவர்களும், இதிலிருந்து பிரிந்து கட்சி நடத்துபவர்களும் இந்தளவுக்கு ஆட்டம் போடுவதற்கு மக்கள் அனுமதித்து இருக்கமாட்டார்கள்.
இலங்கை நாட்டில் சிறுபாண்மையாக வசிக்கும் நாங்கள் பெறும்பாண்மை சமூகத்துடன் முரண்டு பட்டுக்கொள்ளாமல், இனங்கிய அரசியல் மூலம் நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சிறந்த வழி என்று அன்றய முஸ்லிம் தலைவர்கள் சிந்தித்து செயல்பட்டார்கள்.
அந்த செயல்பாட்டில் நண்மைகளும், அதே நேரம் தீமைகளும் இருந்தது என்னமோ உண்மைதான், இருந்தாலும் சிங்களம் முஸ்லிம் என்ற பேதங்கள் பெரிதாக காணப்படவில்லை, சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு வாக்களிப்பதும், முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு வாக்களிப்பதும் என்ற ஒரு வகையான ஒற்றுமையொன்று இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இனங்கிய அரசியல் செய்து வந்தவர்களினால் சிலநேரங்களில் பூரணசுதந்திரமாக செயல்பட அவர்கள் தவறியிருந்தார்கள், தாங்கள் சார்ந்த கட்சி சில பிழைகளை செய்தால் அதனை பகிரங்கப்படுத்தி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பேசா மடந்தைகளாக இருந்தார்கள் என்பதும் உண்மைதான்.
அதேநேரம், இனங்கிய அரசியல் மூலம் இன ஒற்றுமை, அபிவிருத்தி போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு நண்மையான விடயங்களாக அவர்களின் செயல்பாடுகள் இருந்து வந்தது என்பதில் உண்மை இல்லாமலும் இல்லை.
அந்த நேரம்தான் தமிழ் மக்களின் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியிருந்தது, அதன் காரணமாக ஏற்பட்ட முஸ்லிம்களின் உயிர் உடமை இழப்புக்கள், அதோடு வந்த தீர்வு திட்டங்களில் எல்லாம் இனங்கிய அரசியல் செய்து வந்த நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக குரல் கொடுத்து தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமல் இருந்தது.
அந்த காரணங்களை முன்வைத்துத்தான் முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி அவசியம் என்ற கோசத்தை முன்வைத்து, மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் தலைமையில் ஒரு போராட்டம் வெடித்தது.
அந்த போராட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் இயன்றளவு ஆதரவு தெறிவித்திருந்தனர்.
பெரும்பாண்மை கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களிக்க முன்வந்தார்கள், அதனால் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பிரிந்து அந்தந்த இனம் அவரவர் இனத்துக்ககே வாக்களிக்கும் நிலையேற்பட்டது.
அதனால் சிங்களவர் முஸ்லிம்களுக்கு வாக்களிப்பதும், முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் வாக்களிக்கும் வழமையான நடவடிக்கை இல்லாமல் செய்யப்பட்டது, இதனால் முஸ்லிம் சமூகத்துக்குத்தான் பாரிய நஸ்டத்தை ஏற்படுத்தி கொண்டுவருகின்றது என்பதை நாம் இன்று கண்கூடாகவே கண்டுவருகின்றோம்.
இதனை அன்றிருந்த முஸ்லிம் தலைவர்கள் எச்சரிக்கையாகவே கூறியிருந்தனர், அதனையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத்தான் முஸ்லிம் சமூகம், முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க முன்வந்தார்கள்.
அந்த நேரம் மு.காங்கிரசின் கோசங்கள் முஸ்லிம்களை நன்றாகவே சிந்திக்கதூண்டியது காரணம், இனங்கிய அரசியலில் ஈடுபட்ட நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியோடு இருந்து கொண்டு பேசாமல் இருந்த விடயமாகும்.
இதற்கு மாற்றமாக நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக குரல் கொடுப்போம், எங்களுக்கு செருப்புக்கள் தேவையில்லை கால்கள்தான் தேவை, அதாவது அபிவிருத்திகளும்,பதவி பட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உரிமைதான் வேண்டும் என்றுதான் கோசங்களை முன்வைத்தார்கள்.
அந்த நேரத்தில் அதுதான் சரியாகப்பட்டது, முஸ்லிம் சமூகத்துக்கு என்ன இழப்புக்கள் வந்தாலும் தனித்து குரல் கொடுக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரே எங்களுக்கு தேவை என்று மக்கள் சிந்தித்ததில் தவறேதும் இல்லை என்றே கூறலாம்.
அதனால்தான் மு.காங்கிரஸை முஸ்லிம்கள் ஆதரித்தார்கள்.
அந்த வழியில் வந்த மு.காங்கிரசும், அதனை விட்டு பிரிந்து சென்றுள்ள, அதேநேரம் அஸ்ரப்பின் கொள்கைதான் எங்கள் கொள்கையும் என்று பிரிந்து சென்றுள்ள மற்ற கட்சிக்காராக்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அந்த கொள்கையை பின்பற்றுகின்றார்களா? என்பதே கேள்வியாகும்.
அன்று இனங்கிய அரசியல் செய்து கொண்டுவந்தவர்களை விடவும், இப்போது இவர்கள் மிக மோசமாக அரசாங்கங்களிடம், பதவிக்கும் பட்டத்துக்கு சோரம் போய் கிடக்கின்றார்கள் என்பதைத்தான் நாம் கண்களால் கண்டுகொண்டிருக்கின்றோம்.
இவர்களுக்கு, ( நாய்க்கு எழும்புத்துண்டை போட்டுவிட்டு கள்ளன் களவெடுப்பதைப்போல்) இவர்களுக்கு பட்டங்களையும் பதவிகளையும் கொடுத்துவிட்டு, முஸ்லிம் சமூகத்தை பின்னால் வந்து பந்தாடுகின்றார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திக்கத் தவறுகின்றார்கள் என்பதே யதார்த்தமாகும்.
ஆகவே, இப்படி இவர்கள் நடந்து கொள்வதை நாம் அனுமதிப்பதாக இருந்தால், முன்னர் இனங்கிய அரசியல் செய்தவர்களை பிழை என்று கூறமுடியாது.
அப்படியென்றால் இவர்களை விட அவர்கள்தான் இன உறவையும் பாதுகாத்துக்கொண்டு அபிவிருத்திகளையும் செய்து கொண்டு வந்தவர்கள் ஆவார்கள்.
இப்போது இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகின்றது, இதற்கு எந்த தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் திண்டாடும் இவர்கள் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிராமல் எதிரக்கட்சியிலிருந்து கொண்டு குரல் கொடுக்கவும் தயங்குகின்றார்கள்.
அப்படியில்லாது விட்டால் தழிர்களை போல் ஐ.நா சபைவரையும் சென்று தீர்வை பெற முயற்சிக்கின்றார்களா? என்றால் இல்லை யென்றே கூறவேண்டியும் உள்ளது.
அப்படியென்றால் இதற்க்குத்தானா முஸ்லிம்களை ஏமாற்றி இவர்கள் வாக்குகளை பெற்றது என்று கேட்கவேண்டியுள்ளது.
நாங்கள் வெளியேறினால் அவர்களுக்கு ஒருதாக்கமும் ஏற்படபோவதில்லை, அவர்களிடம் அறுதிப் பெரும்பாண்மை உள்ளது என்று நொண்டி சாட்டை கூறிக்கொண்டு அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டு கிடக்கின்றார்கள்.
இவர்களின் இந்த கூற்று அரசியலில் அனுபவம் இல்லாத பாமர மகன் கதைப்பதைப்போன்றுள்ளது.
காரணம் அவர்களின் பலம் அவர்களுக்கே தெறியாமல் இருப்பதாகும்.
உண்மையில், எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அடுத்த நிமிடமே அரசாங்கம் நமது காலில் விழும் என்ற சிறிய விடயத்தைக்கூட அறியாதவர்களாக இருக்கின்றார்களா? அல்லது தெறிந்து கொண்டு பதவி பட்டத்தை பாதுகாப்பதற்காக நாடகமாடுகின்றார்களா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்த அரசாங்கம் அறுதிப் பெரும்பாண்மையோடு ஆட்சி செய்தாலும் சிறுபாண்மையினரின் ஆதரவும் அவர்களுக்கு கட்டாயம் தேவைபடும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஏன்னென்றால் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் விடயத்தில் உலகத்திடம் மாட்டிக்கொண்டு திணருகின்றது, அதேநேரம் இன்னொரு சிறுபாண்மையான முஸ்லிம்களையும் அவர்கள் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.
அப்படி அவர்கள் எம்மையும் பகைத்துக்கொண்டால் சிறுபாண்மை மக்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கும் ஆட்சி என்ற கெட்ட பெயரை சம்பாதிக்கவேண்டிவரும். அதனால் தான் எம்மை அவர்கள் அரவணைத்துச் செல்வதை போல் நடிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
முஸ்லிம் சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு வாதாடுவதைப்போல் நடித்துக்கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்லும் போது இங்கே ஒரு பிரச்சினையும் இல்லை என்று, அரசாங்கத்தை காப்பாற்றும் கூலிப்படையாகத்தான் இவர்கள் செயல் படுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
பாங்கீமூன், மன்னர் ஹுசைன், ஐசாக் ரீட்டா போன்றவர்கள் இலங்கைக்கு வந்தபோதெல்லாம் ஓடி ஒழிந்தவர்கள்தான் இவர்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டோம்.
ஏன் ஓடி ஒழித்தார்கள் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்கிறார்கள் சிங்கள சமூகம் கோபித்துக் கொள்ளுமாம். இப்படி சிந்திக்கும் இவர்களா? முஸ்லிம் சமூகத்துக்கு தீர்வை பெற்றுத்தறப் போகின்றார்கள்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள், வீதியில் அநாதைகள் போல் நின்று கொண்டு மன்னர் ஹுசைனிடம் மனுக்கொடுக்க முயன்றதை பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும். அந்த நேரம் இந்த தலைவர்கள் வெளிநாடுகளில் உல்லாசம் அனுபவிக்க சென்றுவிட்டார்கள். சிலபேர் உள்நாட்டில் இருந்து கொண்டு படுத்து தூங்கிக் கொண்டார்கள்.
இவர்களா முஸ்லிம்களுக்காக சுதந்திரமாக குரல் கொடுக்கவந்த போராளிகள்?
முஸ்லிம்களே சிந்தியுங்கள்...!
அப்படியென்றால் இந்த கட்சிகள் எந்த நோக்கத்துக்காக வந்தது என்று கூறமுடியுமா?
இவர்கள் மூலம் முஸ்லிம் சமூகம் எந்த பிரயோசனத்தையும் அடையமுடியாது என்பதே கசக்கும் உண்மையாகும்.
மாறாக அவர்களுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டும், அவர்களுடைய சொந்த தேவைகளுக்காக ஜால்ரா அடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் இவர்களுடைய செயல்பாடு சரியாகப்படலாம்.
ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் இவர்களுடைய செயல்பாடுகள் சாவுமணிதான் என்பதை எத்தனைபேர் உணர்ந்தார்களோ தெறியாது.
ஆகவே இந்த முஸ்லிம் கட்சிகள் வந்த நோக்கத்தை மறந்து விட்டு, வேறு திசையில் பயணிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இவர்களுடைய செயல்பாட்டை முழுவதுமாக அறிந்தவன் இறைவன் ஒருவனே அவனை ஒருகாலும் ஏமாற்ற முடியாது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
அதே நேரம் ஒரு சமூகம் திருந்தாதவரை நான் திருத்தமாட்டேன் என்று இறைவன் கூறியுள்ளதையும் நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.
ஆக, சமூகம் சிந்திக்க வேண்டும், சிந்திக்க தவறினால் பாதிக்கப்படபோவது நாம்தான்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை....