கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் இருந்தும் திருகோணமலை குச்சவெளி இலந்தைக்குள வித்தியாலயத்தின் ஓலைக்குடிசை என்ற பரிதாப நிலைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் நிர்வாக திறமை அற்றவர் என்பதும் முஸ்லிம் காங்கிரசால் கிழக்கை கட்டியெழுப்ப முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது;
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தோற்றம் பெற்ற ஆரம்பத்திலிருந்து அச்சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு காலத்தில் ரவூப் ஹக்கீம், பசீர் போன்றவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தும், ஹக்கீம் கிழக்கு உட்கட்டமைப்பு அமைச்சர் பதவி உட்பட பல அமைச்சு பதவிகளை மத்தியில் கொண்டிருந்தும் கிழக்கு மிக மோசமாக பின்தங்கியுள்ளதன் மூலம் இக்கட்சி இம்மாகாண மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது என்று தெரிகிறது.
குச்சவெளியில் உள்ள மேற்படி பாடசாலையில் 126 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையை திருமலை மாவட்ட அரசியல் அதிகாரம் கொண்டோர் ஏன் இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. இத்தனைக்கும் குச்சவெளியையும் பிரதிநிதித்துவ படுத்தும் மு. கா பிரதிநிதியும் ஆளும் தரப்பில் இருக்கின்றார்.
மத்தியிலும் மாகாணத்திலும் ஆட்சியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கெபினட் அமைச்சராக இருந்தும் இந்தப்பாடசாலை விடயத்தில் தலையிட்டு தீர்க்க முடியவில்லை. மாகாண முதலமைச்சர் ஊடக கதாநாயகனாக மட்டுமே வலம் வருகிறாரே தவிர மக்கள் பிரச்சினைகளை தீர்த்ததாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் வண்ணிக்குச்சென்று அங்கு சேவைகள் பல செய்யப்போவதாக கதை அளக்கிறார்.
ஆகவே மக்கள் பணிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் இப்பாடசாலைக்கு அவசரமாக கட்டடம் ஒன்றைக் கட்டிக்கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவர் கட்சியான முஸ்லிம் காங்கிரசும் முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறு முடியாவிட்டால் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் போராட்டம் செய்ய வேண்டி வரும் என உலமா கட்சி எச்சரித்துள்ளது.