க.கிஷாந்தன்-
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற தாதியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதால் மத்திய மாகாண சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது :
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் போதுமான அளவு பௌதிக வளங்கள் உள்ளபோதும் ஆளணி வளங்கள் இல்லாத காரணத்தினால் இந்த வைத்தியசாலையின் சேவையை மஸ்கெலியா பிரதேச மக்களுக்கு உரியவகையில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா வைத்தியசாலையில் சிற்றூழியர்களைத் தவிர்த்து மருத்துவ அதிகாரி ஒருவரும் பல்வைத்தியர் ஒருவரும் தாதியர் இருவருமே சேவையாற்றுகின்றனர். மஸ்கெலியா பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்களும் சிவனொளிபாதமலைக்கு வருகின்ற யாத்திரீகர்களும் மஸ்கெலியா வைத்தியசாலையையே தமது வைத்திய சேவைகளுக்காக நம்பியுள்ளனர். எனினும் இந்த வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் மட்டுமே சேவையாற்றுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக நான் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தெரிவித்த போது கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மூன்று தாதியர்களை மஸ்கெலியா வைத்தியசாலைக்குத் தற்காலிகமாக இணைப்புச் செய்யவுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். எனினும் இதுவரை அந்த விடயம் நடைமுறைக்கு வரவில்லை. எனவே இவ்விடயத்தில் மத்திய மாகாணசுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே வேளை மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கடந்த காலங்களில் இந்தச்சபையில் நாம் சுட்டிக்காட்டிய விடயங்கள் பலவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத்தந்துள்ளார். மத்திய மாகாணத்திலுள்ள பல வைத்தியசாலைகளைப் புனர்நிர்மாணம் செய்துள்ளார்.
சிற்றூழியர்களை நியமித்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.இந்த நிலையில் மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவுகின்ற வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவரத்தி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துலயாலேகம பதிலுரை வழங்கும் போது :
கடந்த வருடம் மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் பலவற்றை எனது அமைச்சின் ஊடாக புனர்நிர்மாணம் செய்துள்ளேன். சிற்றூழியர்களை நியமித்துள்ளேன். இந்த நிலையில் இவ்வருடம் மாகாணசபை உறுப்பினர்களுடன் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சென்று அந்த வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற ஏனைய குறைபாடுகள் பற்றி அறிந்து கொண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். மேலும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
