க.கிஷாந்தன்-
இறைச்சிக்காக பசு மாட்டை அனுமதிப்பத்திரம் பெறாமல் கொண்டு சென்ற ஒருவரை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். போபத்தலாவ மெனிக்பாலம கால்நடை வளர்ப்பு பண்ணையில் இருந்து பால் கறப்பது நிறுத்தப்பட்ட இரண்டு பசு மாடுகள் இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது,
போபத்தலாவ - அக்கரப்பத்தனை பிரதான வீதியில் ஹோம்வூட் தோட்ட பகுதியில் வைத்து 22.02.2017 அன்று தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது அனுமதி பத்திரம் இல்லாமல் மாடுகளை கொண்டு செல்வதாக தெரியவந்துள்ளது.
இதன் பின் மாடுகளை கொண்டு சென்ற சந்தேக நபரையும் லொறியையும் கைது செய்து அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, பறிமுதல் செய்த லொறியையும் சந்தேக நபரையும் 23.02.2017 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாடுகளில் ஒரு மாடு உயிரிழந்துள்ளதாகவும், இது உணவின்றியே உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.