சொல்லில் மட்டும் குடிகொள்ளும் நல்லாட்சியா இது?

பர்ஸான்.ஏஆர்-

பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் ஒன்று 'மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்' என முடியும். அவ்வாறானதொரு மக்கள் கூட்டத்தின் அதிகார வன்முறைக்கு எதிரான கிளர்ந்தெழுகை நடைபெற்று ஒரு வருடம் இந்தப் பொழுதுடன் எம்மைக் கடந்து சென்றிருக்கின்றது.

2014 நவம்பர் 21ம் திகதியும் 2015 ஜனவரி 08ம் திகதியும் இலங்கை வரலாற்றில் குறிப்பாய் அதிகாரத்திற்கெதிரான குரல்களை எப்போதும் எழுப்பிக் கொண்டிருப்போரால் மறந்திட முடியாத தினங்களாகும்.

அதிகார வன்முறைக்கெதிரான கிளர்வு

அகோர யுத்தத்தின் பிடியிலிருந்து இந்த நாடும் மக்களும் அழிவுடனும் ஆறாத வடுக்களுடனும் மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை வந்த போது அன்றைய ஆட்சியாளர்களால் மக்களின் திடமான இந்த நம்பிக்கைகள் காவு கொள்ளப்பட்டன. மஹிந்த என்ற அரசியல்வாதி ஒரு சர்வதிகாரத்திற்கான அனைத்து ஆடைகளையும் ஈவிரக்கமற்ற மனோ நிலையினையும் தன் உருவாமாக உருமாற்றிக் கொள்ள இந்த யுத்தவெற்றியும் சிங்கள இனத்துவவாதிகளின தேசியக் கனவுகளும் விம்பங்களை உருவாக்கிக் கொடுத்தன.

அடக்கு முறைகள் நிறைந்த ஆட்சியாளனாய் தன்னை வரிந்து கட்டிக் கொண்ட மஹிந்தவினை ஆட்டம் காண வைத்திடவே முடியாது என்று நமக்கும் அரசியல் பாடம் புகட்டிக் கொண்டிருந்த வரலாற்றுக்கு நாமே சாட்சியாளர்களாய் இருந்திருக்கின்றோம். அரசின் நிறுவனங்கள் மக்கள் சேவகம் செய்வதினை விடுத்து மஹிந்தவிற்கான ஊதுகுழல்களாய் மாறியிருந்தன. மஹிந்த என்ற மானுட விரோதியின் ஆட்சியில் எவ்வித தாயவு தாட்சன்யமுமின்றி குட்டி நிலச்சுவாந்தர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இந்த அரசியல் கதைகளினை பாடங்களாய் இறுமாப்புடன் பறைசாற்றித் திரிந்தனர். 

மரணம் என்ற ஒன்றை மறந்திருந்த மஹிந்தவினை ஒரு மன்னராகவும் அதற்கு வரலாற்று ஆதரங்களையும் கூறிய இந்த தேசவிரோத சக்திகளின் ஜால்ரா அறிவுரையினை ஏற்றிருந்தவர்களில் அதிகமானவர்கள் படித்த மேல்தட்டினராய் இருந்தனர். எந்தக் கலக்குரல்களையும் ஏற்படுத்த திரானியற்றிருந்த இந்தக் கூட்டம் மானுட விரோதிகளின் பாசறையினைச் சுற்றி தவம் கிடந்தனர்.

தொழில் நிமிர்த்தம் மஹிந்தவினை எதிர்ப்பது தவறென புரிய வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அதிகமான அரச ஊழியர்கள் வழமை போல ஆழும் தரப்பினரை ஆதரிக்கும் தவறினை மிக வெளிப்படையாய் செய்து கொண்டேயிருந்தனர். ஊழல் தலைவிரித்தாடி போதிலும் அதனை செய்கின்றவர்கள் யார் யார் எனத்தெரிந்திருந்த போதிலும் அவற்றின் மீது எந்த வகையான முறைப்பாடுகளையும் முன்வைக்காது தங்களின் உயிர்ப் பாதுகாப்பினையே அரச ஊழியர்களால் செய்ய முடிந்தது.

அகோர ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மஹிந்தவினையும் அந்த தேச விரோத வலையமைப்பினையும் முடியுமான சந்தர்ப்பங்களில் எல்லாம் எதிர்த்தவர்களில் இளைஞர்களின் பங்காற்றல் முக்கியமானதாகும். சில வேளைகளில் இந்தப் பங்காற்றல் ஒரு தூர நோக்குடன் இல்லாதவிடத்தும் தவறினை எதிர்க்கும் குரலாய் பதிவாகிக் கொண்டேயிருந்தது.

இவ்வாறான சூழலில் தர்கா நகர் வன்முறை வெறியாட்டம் பெரும்பான்மை முஸ்லிம் பிராந்தியங்களை செயழிலக்கச் செய்த போது பூனைக்கு மணி கட்டும் படலம் வெளிப்படையாய் அரங்கேறத் துவங்கியதற்கு நாம்தான் சான்று.

அடித்தட்டு மக்களும் கலகக் குரல்காரர்களும் குரல்வலை நசுக்கப்பட்ட போதிலும் மஹிந்த என்ற மானுட விரேதியுடன் ஜால்ராவிற்காய் கூட்டுச் சேர்ந்திருந்தவர்களை எதிர்க்கவும் கிளர்ந்தெழவும் இந்த நிகழ்வு வழிகோலிக் கொடுத்தது.

ஜனாதிபதித் தேர்தல் என்ற அறிவிப்பு இந்த கிளர்ந்தெழுகையினை முடுக்கி விட்டதுடன் ஒரு வகை பலத்தினை நவம்பர் 21ம் திகதி வழங்கியது என்றால் அது மிகையாக முடியாது.

நல்லாட்சி பற்றிய கதையாடல்களும் அதன் தொடர்களும்

மஹிந்தவின் முக்கிய சகாவாக இருந்து அவரின் அனைத்து விரோத நடவடிக்கைகளையும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்க்க முடியாது இருந்தவர் என்ற அடையாளங்களுடன் மைத்ரிபால சிறிசேனாவின் 'பொது வேட்பாளர் நானே' என்ற அறிவித்தலுடன் நல்லாட்சி பற்றிய கதையாடல் தேர்தல் களத்தில் நகர்த்தப்பட்டது. நல்லாட்சி என்ற சொல் அரசியல் புரிந்து கொள்ளப்படாதவர்களால் கூட நல்லாட்சி என்பதற்கான தேர்தலாய் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்போது இந்தப் பத்தியின் பிரதான புள்ளிகளை விபரிக்க முயல்கின்றேன். நல்லாட்சி என்பது முழுக்க முழுக்க மக்கள்சார் ஆட்சியாகும். மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்த ஆட்சியில் இருக்கவே முடியாது என்பதாகும்.

மக்கள் சார் அரசாங்கம் என்ற வகையில் இந்த அரசாங்கத்தின் போக்குகள் ஏன் அரசியல் மயப்பட்டதாய் இருக்கின்றது. எந்த ஆட்சியின் பாதகங்களை எதிர்த்து மாற்று தலைமையினை உருவாக்கினோமோ அது பழைய பானத்தினை புதிய குடுவையில் இட்டது போல் ஆகிவிடுகின்ற நிலை காணப்படுகின்றது. ஒரு கட்டத்தில் சுகாவினை பாதுகாக்கும் ஒருவாராக தன்னை அடையாளப்படுத்துகிறார் நல்லாட்சியன் பிரதானி.

தேர்தலில் மக்களால் தேற்கடிக்கப்படும் ஒருவருக்கு வரப்பிரசாதங்களை மக்கள் வரிப்பணத்திலிருந்து எப்படி வழங்க முடியும்? அதுவும் தனது கட்சியினருக்கு கட்சியின் எதிர்காலம் கருதி வழங்கப்படும் பதவிகள் இலஞ்சமாக்கக் கொள்ளத்தக்கதாகும். இது நல்லாட்சியின் பண்புகளாகாது.

ஊழல் மலிந்து போன முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை துரித கதியில் விசாரணை செய்து மக்கள் மன்றில் முன்நகர்த்தும் பணி மீதான இழுத்தடிப்புக்கள் பிழையான முடிவுகளை வழங்கிவிடும் ஆபத்திருக்கின்றது. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்றதன் அடிப்படையில் நல்லாட்சியின் கூறு இங்கு மீறப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்க வேண்டும்.

அரசின் நிருவாகிகள் தங்களை மக்களின் சேவகர்களாக இன்னும் நினைத்துக் கூடப் பார்க்காத போது ஜனாதிபதி மட்டும் தன்னை 'பிரதான மக்கள் சேவகன்' என்று மட்டும் அழையுங்கள் என்பதன் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

நிலைத்து நிற்கக் கூடிய நல்லாட்சிக்கான பெருளாதாரக் கூறுகளை முன்வைப்பதினை விடுத்து ஜேயாரின் முற்றுமுழுதான திறந்த பொருளாதாரக் கொள்கையினை நோக்கிய நகர்வுகள் நல்லாட்சியல்லவே?

ஓராண்டாய் நல்லாட்சி என்ற சொல் சொல்லாக மட்டும் இருந்து வரும் வேதனை இந்த நாட்டை நேசிக்கின்ற யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். நமது அழுத்தங்கள் இல்லாத போது யார் வேண்டுமானாலும் வேண்டியதைச் சொல்லிக் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கலாம் என்பதற்கு நாம் துணையாகவோ சான்றாகவோ இருந்திட முடியாது. ஓராண்டுக்கு முன் எதற்காய் அச்சத்தினைப் பொருட்படுத்தாது வாக்களித்தோமோ அதனை இன்னும் அடைந்து விடாத சூழல் நமக்கு முன் இருக்கின்றது.

நல்லாட்சி என்ற சொல் மட்டும் நமது காதுகளை இனிமையாக்குவதினை விட அந்த சொல்லின் பூரணத்தினை பெறும் வழிகளை முன்நகர்த்த வேண்டியதும் அதற்காய் நமது உள்ளூர் கட்டமைப்பிலிருந்து அதனை வலுப்பெறச் செய்வதும் கடமையாய் இருந்து கொண்டேயிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -