முஸ்லிம் கட்சி அரசியலை கிழக்கிற்கு வெளியில் இருக்கும் முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

எஸ். அஷ்ரப்கான்-
முஸ்லிம் கட்சி அரசியலை கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களில் ஒரு சிறிய பகுதியினரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேசிய அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ.ல.சு.கட்சிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இலங்கையில் 20 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் கிழக்கிலும், மூன்றில் இரண்டு பகுதியினர் கிழக்கிற்கு வெளியிலும் வாழுகின்றார்கள்.

எனவே முஸ்லிம் கட்சி அரசியல் கிழக்கில்தான் உயிர் வாழுகின்றது. என்ற முடிவுக்கு வரலாம். கிழக்கில் இருந்து உதித்த தலைமைதான் முஸ்லிம் கட்சி அரசியலை நாட்டிற்கு அறிமுகப்படுத்திக் காட்டியது என்று கூறுவதில் பிழையில்லை.

அத்தலைமை மறைந்தபோதும் முஸ்லிம் கட்சி அரசியலின் முக்கியத்துவம் கிழக்கில் மறைந்துவிடவில்லை. கிழக்கைப் பொறுத்தவரை எங்கிருந்து தலைமைத்துவம் வருவது என்பதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. காரணம் மஸ்லிம் கட்சி அரசியல் அல்லது தனித்துவ அரசியல் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவசியமானதும் இன்றியமையாததுமாகும் என்ற யதார்த்தத்தை அவர்கள் உள்வாங்கியிருப்பதாகும். 

ஆனால் கிழக்கு மக்களின் ஆழமான இந்த சமூக சிந்தனையை சிலர் தங்களது அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருவதும் தனித்துவ அரசியலில் இருக்கின்ற பற்றின் காரணமாக கிழக்கு மக்கள் இதனை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் துரதிஷ்டவசமாகும்.

கண்டியில் இருந்து தலைமைத்துவம் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டு காலமாக கிழக்கில் நடக்கின்ற அரசியல் கபளீகரம் ஒரு புறமும், இன்று புதிதாக வன்னியிலிருந்து புறப்பட்டு அரசியல் வியாபாரத்திற்கு பொருத்தமான இடம் கிழக்குத்தான் என்று ஆரம்பித்திருக்கின்ற புதிய அரசியல் வியாபாரம் இந்த இரண்டு அரசியல் வியாபாரத்திற்கும் ஏதோ எலும்புத்துண்டு கிடைக்கும் என்பதற்காக ஜால்றா அடிக்கின்ற கூட்டம் ஒரு புறம் இவை எதைப பற்றியுமே சிந்திக்காமல் தேர்தலில் தனித்துவ அரசியல் என்று வருகின்ற எந்தக் கூட்டத்திற்காவது வாக்களித்தவிட்டால் தமது சமூகக் கடமை முடிந்துவிட்டது என்று சிந்திக்கின்ற அப்பாவி கிழக்கு மக்கள் மறுபுறம்.

தேர்தல் முடிந்ததும் அதன் அறுவடையாக கண்டியில் ஒரு அமைச்சுப் பதவி,வன்னியில் ஒரு அமைச்சுப்பதவி வாக்களித்த கிழக்கு மாகாணம் அம்போ ! ஆனால் கிழக்கிலிருந்து ஜால்றா கூட்டம் அமைச்சுப்படிகளில் தவம் இருக்கும் எதையாவது அமைச்சர் ஐயா துாக்கி வீசமாட்டாரா பொறுக்கிக் கொண்டு வரலாம் என்று, கிடைப்பதற்கு முன்பு முழு ஜால்றா கூட்டமும் தலைவர்கள் கிழக்கிற்கு வரும்போது,எங்கள் தலைவர்தான் தங்கத் தலைவர் என்று முகநுாலில் கைகடுக்க குறிப்பு எழுதுவார்கள். 

இதுதான் இன்றைய கிழக்கின் அவல நிலை. அடுத்த தேர்தல் வரை ஏசிக்கொண்டே இருப்பார்கள். எமதுாரில் பாதையில்லை. பாடசாலையில் கட்டிடமில்லை. கற்பிக்க ஆசிரியர் இல்லை. படித்த மகனுக்கு உத்தியோகமில்லை. இப்படி ஒவ்வொரு குறையாகச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார்கள். 

தேர்தல் வந்தால் எல்லாவற்றையும் மறந்து வாக்களிப்பார்கள். இத்தனைக்கும் கிழக்கில் தெருவுக்குத் தெரு டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், பட்டதாரிகள்,கலாநிதிகள் என்று இடரினாலும் ஒரு கற்றவனில்தான் முட்ட வேண்டியிருக்கும். அந்தளவு கற்றவர்களைக் கொண்ட கிழக்கு தனக்கென்று ஒரு தலைமையை உருவாக்க வக்கில்லாமல் இறக்குமதியாகும் வியாபாரத் தலைமைகளை நம்பியிருக்கின்றது. அவ்வாறான இறக்கமதித் தலைமைகளுக்கு கிழக்கைப்பற்றி கவலைகள் ஏன் ? அதனால்தான் கிழக்கு இன்னும் அபிவிருத்தி அடையாமல் அப்படியே இருக்கின்றது.

கற்றவர்கள் நிரம்பி வழியும் கிழக்கு இந்த இறக்குமதித் தலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அத்தலைமைகள் கிழக்கை சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். கிழக்கிலிருந்து ஆற்றல் உள்ளவர்கள், பேச்சுத் திறமை உள்ளவர்கள், நேர்மையாக சிந்தித்து நெஞ்சுரத்தோடு பேசக்கூடியவர்கள் கிழக்கிலிருந்து உருவாகிவிடக் கூடாது அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் சென்றுவிடக் கூடாது. அவ்வாறு சென்றால் தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

இந்த இறக்குமதித் தலைமைகள் கிழக்கிலிருந்து விசயம் தெரிந்தவர்கள் பாராளுமன்றம் சென்றுவிட்டால் தங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள். 2004 ஆம் ஆண்டு வை.எல்.எஸ். ஹமீட், நிஸாம் காரியப்பர் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக கல்முனைத் தொகுதிக்குள் 3 வேட்பாளர்களை நிறுத்தி தலைவருக்கு ஒரு வாக்கு என்று 3விருப்பத் தெரிவு வாக்குகளை நால்வருக்கு போடவைத்து அன்று திட்டமிட்டு காரியம் ஆற்றப்பட்டது.

இதே பாணியில்தான் இன்று வன்னித் தலைமையும் செயற்பட்டிருக்கின்றது. என்பது புலனாகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்புக்களை நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த வை.எல்.எஸ். ஹமீடை 8 தடவைகளுக்கு மேல் றிஷாட் பதியுதீன் நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம். 

தேசியப்பட்டியலில் வந்து தேசிய ரீதியாக பங்களிப்புச் செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றார் என்றால் வை.எல்.எஸ். ஹமீடை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் றிஷாட் பதியுதீனுக்கு நீண்டகாலமாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறாயின் அது ஏன் ?இதனையிட்டு நாம் ஏன் சிந்திக்கக் கூடாது. 

அவர் அவ்வாறு தடுத்ததன் எண்ணம் துாய்மையானதாக இருந்திருந்தால் போலிக்காரணங்கள் கூறாமல் வை.எல்.எஸ். ஹமீடை பாராளுமன்றம் அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்றம் அனுப்பவுமில்லை. தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்றும் தடுத்தும் இருக்கின்றார் என்றால், இதற்கு ஒரு பாரிய பின்னணி இருக்கின்றது. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு தனி நபரின் பிரச்சினையாக அல்லது ஒரு தனி நபர் பாராளுமன்றம் செல்லுகின்ற விடயமாக நாம் பார்க்கக்கூடாது.

இன்றைய அரசியலில் வை.எல்.எஸ். ஹமீட் எவ்வாறு பங்களிப்புச் செய்யக் கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக 19 ஆம், 20 ஆம் அரசியலமைப்புத் திருத்தங்கள் வந்தபொழுது அவர் ஆற்றிய பங்களிப்பு பலருக்குத் தெரியும். குறிப்பாக இன்றைய பாராளுமன்றம் தேர்தல் சீர்திருத்தம், அதிகாரப் பகிர்வு போன்ற முஸ்லிம்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விடயங்கள் உள்ளடங்கியதான புதிய அரசியல் யாப்பு விவாதிக்கப்பட இருக்கின்றது. 

இது தொடர்பாக இன்று இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யக் கூடிய பங்களிப்புக்கள் என்ன ?வை.எல்.எஸ். ஹமீட் அப்பாராளுமன்றில் இருந்தால் எவ்வாறான பங்களிப்பினை செய்வார் என்றும் நம்மில் கற்றறிந்த பலருக்குத் தெரியும். இந்நிலையில் திட்டமிட்டு வை.எல்.எஸ். ஹமீட் பாராளுமன்றம் செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார் என்றால் சோழியன் குடும்பி சும்மா ஆடியிருக்க முடியாது. 

எனவே இது வை.எல்.எஸ். ஹமீட் என்ற தனி நபரின் பிரச்சினையா ? அல்லது கற்றறிந்தவர்கள் நிரம்பிய முழுக் கிழக்கு மாகாணத்தையும் இந்த இறக்குமதித் தலைமைகள் எவ்வாறு ஏமாற்றுகின்றன என்பதன் வெளிப்பாடா ? ஒரு வை.எல்.எஸ். ஹமீட் என்பவருக்கு எதிராக செய்யப்பட்ட சதியினை வைத்து முழுக் கிழக்கு மாகாணத்தையும் இந்த இறக்குமதித் தலைமைகள் எவ்வாறு அரசியல் அடிமைகளாக வைத்திருக்க முற்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

எனவேதான் கிழக்கு மாகாண மக்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் இன்னும் இறக்குமதித் தலைமைகளை நம்பியிருக்கப் போகின்றோமா ? எலும்புத்துண்டுகளுக்காக ஜால்றா அடிக்கின்றவர்களும் யோசிக்க வேண்டும் நீங்களும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கிழக்கு மாகாண மக்களை தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கப்போகின்றீர்களா ? என்று,

தேர்தல் முடிந்துவிட்டது. இறக்குமதித் தலைமைகள் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுவிட்டார்கள். இனி அவர்களின் அண்ணன், தம்பி, உறவினர்களுக்கு முக்கிய பங்குகள் கிடைக்கும். அவர்கள் கோடீஸ்வரர்களாகவும், அதற்கு மேலும் எவ்வாறு வளர்வது என்பதை சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். 

அடுத்த தேர்தலுக்கு உங்களிடம் புதிய கதைகளை கொண்டுவரும்வரை மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை அமைச்சுஇ காலமைச்சு பதவிகளை உங்களுக்கு வீசுவார்கள். அதைத்தான் இப்பொழுது வீசியும் இருக்கின்றார்கள். எனவே சிந்தியுங்கள். 

இந்தக் கற்றறிந்த கிழக்கு மாகாணத்திற்கு தலைமை தாங்க முதுகெலும்புள்ள, கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒருவன் இல்லையா ? அவ்வாறான ஒருவனை எங்களால் அடையாளம் காண முடியாதா ?சிந்தியுங்கள் கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்யாமல் இப்பொழுதே சிந்தியுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -