வடக்கு மாகாண சபையால் மக்கள் குறைகேட்டு தீர்வுகாணும் செயல்த்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது/ முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் விஜயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். இதன்போது மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் கலந்துகொனடமை குறிப்பிடத்தக்கது.
இவ் மக்கள் குறை கேள் வேலைத்திட்டமானது 26-10-2015 திங்கள் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையில் குறித்த பகுதியில் முதலமைச்சர் தலைமையிலான குழுவினரால் இடம்பெற்றது.
இதன்போது வலைப்பாடு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் வலைப்பாடு மக்களை சந்தித்த முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் அப்பகுதி மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது மிக முக்கியமாக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருக்கும் தங்களுடைய பகுதிக்கான அதாவது A 32 பிரதான வீதியில் இருந்து வலைப்பாடு வரையான பிரதான வீதியின் புனரமைப்பு தொடர்பாக உரிய கவனத்தை செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வைத்திய வசதிகள் இல்லாமை தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.
மேலும் இந்திய இழுவை படகுகளை ஒத்ததாக எமது மக்களும் எம்மை துன்புறுத்துகிறார்கள் என்றும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் இழுவை படகுகளாலும் தாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கிராஞ்சி பகுதி மக்களை சந்தித்து முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் கலந்துரையாடினார்.
இதன்போதும் மக்கள் வீதி, மற்றும் வைத்திய வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தினர். தொடர்ந்து முதலமைச்சர் உடல் நலக்குறைவினால் யாழ்ப்பாணம் திரும்ப வேண்டிய நிலையில் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில், வேரவில் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறை மற்றும் வைத்திய வசதி இன்மை, அன்றாடம் செய்திகளை அறிந்துகொள்ளவும் அறிவுசார் நூல்களை தமது பிள்ளைகள் வாசித்து பயன் பெறவும் தமக்கு ஒரு நூல் நிலையம் அவசியமாக உள்ளது என்றும், இன்றைய நாள் தமக்கு தெய்வங்களை நேரில் கண்ட மகிழ்வோடு தெய்வத்திடம் வரம் கேட்பதுபோல உங்களிடம் கேட்க்கின்றோம் என்று குறைபாடுகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கான பிரதான வீதிகள் 2016ம் ஆண்டில் முழுமையாக புனரமைத்துக் கொடுக்கப்படும். என வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உறுதியளித்தார்.
தொடர்ந்து இப்பகுதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடம் 2016.01.01 க்குள் பூர்த்தி செய்யப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் இரவீந்திரன் உறுதியளித்தார்.
மேலும் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குறைபாடுகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதியளித்த முதலமைச்சர், சமகாலத்தில் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அதனடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்தும் வெற்றிகரமானதாக நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.



