உலகில் நாடுகளுடையே ஏற்பட்ட புரட்சிகளும், பிரச்சினைகளும் மக்களை வாட்டி வதைத்ததன் விளைவினால் தலைமைத்துவத்தின் அவசியமும், தீர்வை நாடுகின்ற போக்கும் ஏற்படலாயின. முதலாம் உலகப்போரின் முடிவில் உலகின் சமாதானத்தையும், பொருளாதார சமூக ஸ்திரத்தன்மைகளையும் பேணும் வகையில் சமாதான சங்கத்தின் ஆரம்பமே இன்றைய ஐநா.சபையின் உருவாக்கத்திற்கு வித்திட்டது.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் தேசங்களின் அணிகள் சுதந்திரமாக ஒன்றுசேர்ந்தன் விளைவினால் அழிவுகளுக்கு முடிவுகட்டும் நோக்கில் வலிமை சேர்க்கும் ஒருபுதிய அமைப்பாக தோற்றம் பெற்ற மாபெரும் உலகின் தலைமைச் சபையாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெறலாயின.
மீண்டும் ஓர் உலகப்போர் வெடித்தால் மனிதகுலம் தாங்காது என்பதை கருத்திற் கொண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்டினால் 1939ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பெயர் உச்சரிக்கப்பட்டு 1942.01.01ஆந்திகதி அதிகாரபூர்வமாக முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொண்ட நாடுகளின் சுயமான விருப்புடன் 1945 ஒக்டோபர் 24ஆந்திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உதயமாகியது.
அன்றைய பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், அமெரிக்க அதிபர் ருஸ்வெல்ட் ஆகியோர் இணைந்து உருவாக்கிய அத்திலாந்திக் சாசனத்தின் அடிப்படையில் 50நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இதற்கான சாசனத்தையும், சர்வதேச நீதிமன்ற சட்டங்களையும் அங்கீகரித்தன் விளைவாக உருவாக்கம் பெற்றிருந்த ஐநா.சபையின் வரவானது உலக நாடுகளின் மீதான பார்வையைச் செலுத்தி எங்கெல்லாம் பிரச்சினைகளும், யுத்தமேகங்களும் உருவாகின்றதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தீர்த்து வைக்க முடியும் என்கிற நம்பிக்கையின் பேரில் அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஐநா. சபையினை ஆரம்பிக்க உதவியமைக்காக பலம் பொருந்திய ஐந்து நாடுகள் வீட்டோ எனப்படும் ஏகபோக உரிமையை தனதாக்கிக் கொண்டன.
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளின் மேலாதிக்கமும், ஏனைய நாடுகளின் மீதான யுத்தமேகங்களும், இனரீதியான பிளவுகளும் ஒழிக்கப்பட்டு உலகம் ஒரு சமாதான பூமியாக உருவாக்கப்படவேண்டும் என்கிற கோசத்தை முன்னிலைப்படுத்திய ஐநா.சபை இன்றுடன் 70வருடங்களை பூர்த்தி செய்கின்றது. இருப்பினும் உலகில் முழுமையான சமாதானம் ஏற்பட்டதா?
இனவாதங்களும், மதவாதங்களும் உட்புகுத்தப்பட்டு, நாடுகளையும், தலைவர்களையும் பிடித்து அடாவடித்தனத்தை மேலோங்கச் செய்யும் உலக வல்லரசுகளின் கைபொம்மையாகவே பார்க்கப்படும் நிலைக்கு ஐ.நா.சபையின் செயற்பாடுகள் மாறிவிட்டனவா என்கிற கேள்விகளும் எழாமலில்லை.
பல பிரச்சினைகள் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆதலால்;தான் காலத்திற்கேற்ற நவீன முற்போக்குச் சிந்தனாவாதத்தின் அடிப்படையில் மாற்றம் பெற வேண்டிய கட்டாயத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபை மாற்றம் உருமாற்றப்படவேண்டுமென பலரும் விரும்புகின்றனர்.
எனினும், உலக சமாதானத்தையும், மக்களின் உரிமைகளையும், தேசங்களுக்கிடையிலான நல்லுறவையும், சமூக ரீதியிலான பொருளாதார ஒத்துழைப்பினையும், நாடுகளின் அபிவிருத்தியினை மேம்படுத்துவதிலும் அது பாரிய பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கதாகும்.
அந்த வகையில் மேற்கூறப்படுகின்ற பிரதான நோக்குகளின் அடிப்படையில் தனது பலத்தை பிரயோகித்து வந்தாலும், யுத்தங்களுக்கான தீர்வினை பெறல், மனிதகுலத்திற்கு தீங்குவிளைவிக்கும் ஆயுதங்களை ஒழித்துக் கட்டுதல், பொருளாதாரரீதியாக கீழ்நோக்கிச்செல்லும் நாடுகளுக்கு உதவுதல், சர்வதேச ரீதியாக மனித உரிமைகளை கண்காணித்தல், குடியேற்ற ஆதிக்கத்தை இல்லாமலாக்குதல் போன்ற பல்வேறு சர்வதேச ரீதியான போக்குகளையும் கைக்கொண்டு அமைதி, பாதுகாப்பைப் பேணுதல் போன்ற கொள்கைகளையும்; மேற்கொண்டுள்ளமையானது இன்னொரு உலக யுத்தம் ஏற்படுவதிலிருந்து தவிர்த்தே வந்துள்ளமை அதன் விசேட அம்சங்களாகும்.
மேலும், ஐ.நா. அமைப்பானது கடந்தகாலங்களில் உலகில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தன் மேலாதிக்கத்தைச் செலுத்தி பிரச்சினையற்ற உலகை காணவிளைந்திருந்தன.
அந்தவகையில் ரொடீசியாவின் சிறுபான்மை வெள்ளையரின் ஆதிக்க வெறிக்கு முடிவுகட்டி சிம்பாபே நாட்டை விடுவித்தமை, தென்னாபிரிக்காவின் இனவெறிக்கெதிரான இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து நெல்சன் மண்டேலாவை விடுவித்து அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு வழிகோலியமை, ஈராக் குவைத்தில் படையெடுத்தபோது குவைத்தை மீட்டமை, யூகோஸ்லேவியா பிரச்சினை, கிழக்கு திமோருக்கு சுதந்திரம், சேர்பியாவின் பிடியிலிருந்து கொசோவாவை அங்கீகரித்தமை, பர்மாவின் அடக்குமுறைக்கு ஆங்சாங்சுயியை விடுவித்தமை போன்ற பல்வேறு விடயங்களில் ஐநாவின் பங்களிப்பு பாரிய வெற்றியைக் கொடுத்தது.
உலகின் இன ஒதுக்கல் கொள்கை, பலஸ்தீனப் பூமியை ஆக்கிரமித்துள்ளள இஸ்ரேலின் அடாத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்க்கமான முடிவு எட்டப்படாமை, இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை போன்றவற்றுக்கு இன்றுவரையிலும் முடிகட்டாமல் போனமை ஐ.நா. சபையின் மிகப் பெரும் பலவீனமாகவே பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் உலகின் பொதுமன்றமாகத் திகழும் ஐக்கிய நாடுகள் அமைப்பு அன்று எந்த நோக்கை கருதி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக அடைந்து கொள்ள முடியாது திண்டாடுவதுதான் கவலைக்குறிய விடயமாகும்.
1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் பலஸ்தீனப்பிரச்சினை இன்றும் வரையும் நிரந்தரத் தீர்வை நோக்கிய நடையில் பல்வேறு சறுக்கல்களை ஏற்படுத்தி நிரந்தமான சமாதான பூமியாக்க முடியாமல் போனமை மிகப் பெரிய துரதிஷ்டமே.
இதற்கான பொறுப்பு அமெரிக்காவையும், அதன் நேச நாடுகளையுமே சார்ந்ததாகும் என்கின்றனர் சர்வதேச ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேல், மத்திய கிழக்கில் நீருபூத்த நெருப்பாக காணப்படும் பிரச்சினையை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. மத்திய கிழக்கில் அன்று ஈராக்கையும், அதன் சூழவுள்ள முஸ்லிம் நாடுகளையும் குறிப்பாக ஈரானையும் துவம்சம் செய்து அடி வேரூடன் பிடுங்க எத்தனிக்கும் முயற்சி கவலை தரும் விடயங்களாகும்.
அதுமட்டுமன்றி ஒருகாலகட்டத்தில் அதிகார வெறியை ஈராக் ஈரான் யுத்தங்களின்போது அமெரிக்கா வழங்கியதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தமை உலகமே அறிந்தவிடயமாகும்.
அந்த ஆயுதங்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கின் அதிபராக இருந்த சதாமை படியிறக்கம் செய்வதற்காக அந்தநாட்டையே யுத்தக்காடாக மாற்றிய பெருமை அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையுமே சாரும். இன்று அந்த நாட்டில் குண்டுகள் வெடிக்காத நாளே இல்லை எனலாம். அங்குள்ள மக்கள் பசி பட்டினியால் அழிந்து வருகின்றனர்.
இன்று சிரியாவின் உள்நாட்டுப்போரில் வல்லரசுகளின் தாக்குதல் ஒருபுறம், பயங்கரவாதத்தை விதைத்து மக்களை கொன்று குவிக்கும் ஐஎஸ் போராளிகள் ஒருபுறம் ஐரோப்பிய நாடுகளுக்குள் புதிய குடியேறிகள் அகதிகளாக வந்து குவிவதையே ஐநா சபையினால் எதுவும் செய்ய முடியாதளவுக்கு வீட்டோ அதிகாரம் மத்தியகிழக்கினை துண்டாடிவிடும் என அச்சப்படுத்தி வருகின்றது.
இன்று பலமிக்க ரஷ்யாவினதும், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் போட்டித்தன்மைகள், அணுஉலை விஸ்தரிப்புக்கள், பிராந்திய வல்லரசுகளின் உருவாக்கம் போன்றனவும், கொண்டுவரப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் ஒப்பமிடாது போகும் நிலை போன்றன ஐநா.சபையினால் எடுத்தாளப்பட முடியாத பலவீனத்தையே காட்டிநிற்கின்றது.
பல நாடுகள் உலக மட்டங்களில் மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்படுகி;ன்ற திட்டங்களையும், சர்வதேசப் பாதுகாப்பினையும் வீட்டோ அதிகாரமிக்க ஏகாதிபத்திகள் தங்கள் வசம் உள்ள துரும்பினை பிரயோகிப்பதன் மூலம் நிறைவேறாத சட்டங்களும், திட்டங்களும் கிடப்பில் போடவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதானது முழுமையான தலைமைத்துவத்தையும், அடிப்படையான நோக்கையும் உலகிற்கு வழங்க முடியாத நிலையில் இன்று ஐநா.சபை கொண்டிருக்கின்றதா? என்கிற கேள்வியினையும் கேட்கத் தோன்றுகின்றது.
இத்தகைய மாபெரும் ஐ.நா. சபைக்கு எதிர்நீச்சல் போட்டு தடுக்கும் சக்தியோ, நிரந்தரமாக தீர்க்கும் முயற்சியோ இன்றி அமெரிக்காவின் ஊதுகுழலாக செயற்படுவதே தனது இலட்சியமாக கொண்டுள்ளதைத் தவிர்க்க உலகம் முனையவேண்டிய காலம் கணிந்துள்ளதை ஐநா.சபையின் இன்றைய நினைவுநாளில் நினைவுறுத்தப்பட வேண்டும்.
வீட்டோ அதிகாரமும் பரவாலாக்கப்பட்டு உலகமயப்படுத்தப்படுதல் வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினையில் ஐநாசபையின் பார்வைகள் பலமாகப் பட்டதாகினும் கடந்த முப்பது வருடமாக புரையோடிப்போன யுத்தத்தை ஐநா சபையினால் நிறுத்த முடியாமல் போய்விட்டது.
அப்படியானால் உலகில் முழுமையான சமாதானத்தை கட்டியெழுப்புமா என்கிற சந்தேகமும் எழுகின்றது.
எனவேதான் உலகின் ஆதிக்கவெறியர்களுக்கு உலகம் முடிவுகட்;;டவேண்டும். சமாதான சகவாழ்வுள்ள உலகைக் கட்டியெழுப்பும் மாபெரும் சக்தியான ஐநா.சபையில் மாற்றம் காணவேண்டும். 70வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், வீழ்ச்சிகள் போன்ற நிலைமைகளை ஆராய்ந்து மாற்றம் காணவிளைய வேண்டும்.
அணுஆயுதப் போட்டிகள், வின்வெளியையும் வெற்றிகொள்ளத் துடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா கண்டங்கங்களிலுள்ள பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள், பேரினவாதிகளின் ஒடுக்கு முறைகள், மதசுதந்திரத்திற்கு குழிபறிக்கும் காடைத்தனம், வாழும் சுதந்திரத்தை வழங்காது நிலத்தை அபகரிக்கும் அடக்குமுறை அரசுகள், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் போன்ற அனைத்தையும் கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்று நசுக்குகின்ற நாடுகளின்மீது தலையிட்டு முடிவுகட்டும் ஒரு மாபெரும் தலைமைத்துவத்தை பேணுகின்ற ஒரு சபையாக மீட்சி பெறவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஆண்டுதோறும் பல மகாநாடுகள், பேச்சுவார்த்தைகள், உத்தியோக விஜயங்கள் என்று அரசதலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர். முடிவுகள் எட்டப்படுகின்றன. ஆனால் பிரயோகிக்கின்றபோது அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றது. இந்நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
ஐநா அமைப்பானது பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூகநலன் சபை, நம்பிக்கை பொறுப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், தலைமைச் செயலகம் என்கிற ஆறுபிரதான சபைகளையும் முக்கியமான பாத்திரத்தில் காணப்படும் பாதுகாப்புச்சபையில் 15நாடுகள் அங்கம் வகிக்கின்றதுடன், பிரஞ்சு. அரபு, ஆங்கிலம், ஸ்பானி, ரஷ்யன், மாண்டரின் போன்ற ஆட்சி மொழிகளையும் உள்ளடக்கிய இம்மாபெரும் சபையில் 193 நாடுகள் அங்கம் வகிப்பதுடன், இலங்கையும் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவல அவர்களால் 1955.12.14ஆந்திகதி அன்று ஐநாசபையில் இணைந்து கொண்டன் மூலம் இன்றுவரை இலங்கையின் பல்வேறு செயற்றிட்டங்களிலும், நாட்டின் அபிவிருத்திகளிலும் பாரிய பங்களிப்பினை இவ்வமைப்பு நல்கி வருவகின்றது.
இதன் கீழ் காணப்படும் பல உலக நிறுவனங்களின் ஒத்துழைப்;பு நமது நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகின்றன.
இருந்தாலும், இதுவரை அமையப்பெற்ற உலக அமைப்புக்களில் முதனிலை வகிக்கும் இவ்வமைப்பு பல சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
எனினும் இனிவரும் காலங்களில் உலக சமாதானத்தின் விடியலில் தமது பணி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல புதிய யுக்திகளையும், உலக அரசுகளின் மேலாதிக்க போக்கையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு இதன் அதிகாரம் காணப்படுதல் வேண்டும். அப்போதுதான் அமைதிவழியில் உலகை காணலாம்.
பாதுகாப்பு மற்றும் பொதுச்சபைகளினால் எட்டப்படுகின்ற ஒரு தீர்மானத்தை அமுல்படுத்தாது தன்னாதிக்கமான முடிவினை மேற்கொண்டு உலக வல்லரசுகள் இவ்வமைப்புக்குள் செயல்படுவது தடுக்கப்பட வேண்டும்.
எனவேதான்; சவால்களை வெற்றி கொள்ளவும், யாருக்கும் அடிபணியாத, உண்மையான சமாதானத்தை விளைவிக்கவும் மாற்றம் காணப்பட வேண்டும். சமாதான பூமியாக நாம் வாழும் புவியானது அமைதி வழியில் வாழும் உலக மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் பணியில் ஐநா மாற்றம் காண வேண்டுமென்பதே சமாதானத்தை விரும்பும் உலக மக்களின் தாகமாகும்.
(அட்டாளைச்சேனை மன்சூர்)