ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பாகிஸ்தானில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் தலைநகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கு கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.
காபூல் நகரிலுள்ள பொதுமக்கள், இந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை இதுவரை தாங்கள் உணர்ந்தது இல்லை என்று கூறியுள்ளனர்.
அங்கு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியிலுள்ள ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள ஃபைசாபாத்துக்கு 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 7.7 அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் வீதிகளுக்கு வந்தனர்
இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்துக்கு உணரப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தகவல்தொடர்புகளும், மின்சாரமும் தூண்டிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்டுள்ள பாதுப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
