கல்முனைக்கு விசேட அபிவிருத்தித் திட்டங்கள் அவசியம்; மக்களின் அரசியல் மாற்றத்திற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்”



ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் முபாறக் அப்துல் மஜீத் வழங்கிய விசேட நேர்காணல்

எம்.வை.அமீர்-
கேள்வி:

கல்முனை அபிவிருத்தி தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிப்பதாக கூறுகின்றர். இந்த நிலையில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்:

எங்களைப் பொறுத்தவரையில் நாட்டின் எந்தப் பகுதியிலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் அது அரசாங்கத்தின் ஊடாகவே நடைபெற வேண்டும். எங்களுடைய கட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கட்சியல்ல. அதே நேரத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு, தவறுகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டும் பொறுப்பையும் வகிக்கின்றோம்.

கல்முனை என்பது கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அடையாள நகரமாகவும் விளங்குகின்றது. இருப்பினும் அதன் அபிவிருத்தி பல தசாப்தங்களாக பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் கல்முனையை மையமாகக் கொண்டு அரசியல் செய்யப்பட்டதே தவிர, கல்முனையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இன்று நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களையும் சமமாகக் கருதி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுபவர் என நாங்கள் நம்புகின்றோம். எனவே கல்முனையின் அபிவிருத்தி தேவைகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதேபோல் கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம் பாவா அவர்கள் இந்தப் பகுதியின் அபிவிருத்திக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கடலரிப்பு பிரச்சினை தொடர்பில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் கடலரிப்பு என்பது இன்று அல்லது நேற்று உருவான பிரச்சினையல்ல. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரு பாரிய சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகும்.

கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வுகளை வழங்கவில்லை. சில கற்களை கடற்கரையில் போட்டு மக்களை ஏமாற்றியதே தவிர நிலையான பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இன்று அந்தக் கற்கள்கூட கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் அறிவியல் ரீதியான, நீண்டகாலத் திட்டமிடலுடன் கூடிய நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும்.

கேள்வி:

அரசாங்கம் தற்போது 10 நகரங்களுக்கான விசேட அபிவிருத்தித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் அதில் கல்முனை இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:

அரசாங்கம் பத்து நகரங்களை தெரிவு செய்து விசேட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். ஆனால் மாநகர சபை அந்தஸ்து கொண்ட, கிழக்கு மாகாணத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கல்முனை அந்த பட்டியலில் இடம்பெறாதது எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

கல்முனை ஏன் தவிர்க்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பத்து நகரங்களில் இடம்பெறவில்லை என்றால், பதினொன்றாவது நகரமாகவாவது கல்முனையை இணைத்து விசேட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்முனையில் காணி பற்றாக்குறை போன்ற சில நடைமுறைச் சவால்கள் இருக்கின்றன என்பது உண்மை. மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்வைத்த புதிய நகர அபிவிருத்தித் திட்டமும் பல்வேறு காரணங்களால் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் அதே கனவை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய தேவை உள்ளது.

கல்முனை வளர்ச்சியடைவது கல்முனை மக்களுக்கு மட்டும் அல்ல. முழு அம்பாறை மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் நன்மை தரும். எனவே புதிய நகர அபிவிருத்தித் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி:

கடந்த தேர்தல்களில் கல்முனை மக்கள் அரசியல் ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் அந்த மாற்றத்திற்கான பலன்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் கருத்து?

பதில்:

கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக கல்முனை தொகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வந்தது.

ஆனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் கல்முனை மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவை வழங்கினர்.

இது சாதாரண அரசியல் மாற்றமல்ல. கடந்த பல தசாப்தங்களில் நிகழாத அளவுக்கு பெரிய மாற்றமாகும். மக்கள் தனிநபர்களுக்காகவோ, குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காகவோ வாக்களிக்கவில்லை. நல்லாட்சி, அபிவிருத்தி மற்றும் புதிய அரசியல் கலாசாரம் உருவாகும் என்ற நம்பிக்கையில்தான் வாக்களித்தனர்.

எனவே அரசாங்கம் இந்த அரசியல் மாற்றத்தை ஒரு நேர்மறையான சமிக்ஞையாகக் கருதி, கல்முனைக்கு விசேட அபிவிருத்தித் திட்டங்களை வழங்க வேண்டும். மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

கேள்வி:

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், கல்முனை மாநகர சபையின் எதிர்கால நிர்வாக அமைப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:

சாய்ந்தமருதுக்கான சபை தொடர்பான விவகாரம் தற்போது தீர்வடைந்துள்ளது. இதன் பின்னர் கல்முனை தொகுதிக்குள் உள்ள ஏனைய பகுதிகளின் நிர்வாகத் தேவைகள் தொடர்பாகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எங்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலைப்பாடு என்னவென்றால், ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து தாழவட்டுவான் வரையிலான பகுதி கல்முனை பிரதேச செயலகமாகவும், கல்முனை மாநகர சபையாகவும் இயங்க வேண்டும் என்பதாகும்.

அதேவேளை பாண்டிருப்பு மற்றும் மருதமுனை மக்களுக்கு தனியான நிர்வாக அலகுகள் வழங்கப்படுவதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்ற ஜனநாயக விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

கல்முனை என்பது பல இனங்களும் பல சமூகங்களும் வாழும் தனித்துவமான பிரதேசம். நான் அடிக்கடி கூறுவது போல, கல்முனை ஒரு சிறிய உலகம் போன்றது. சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை.

கடந்த காலத்தில் இவற்றை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கப்பட்டாலும், அது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் தான் இன்று பல்வேறு நிர்வாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கேள்வி:

தமிழ் மக்களின் தனியான பிரதேச செயலகக் கோரிக்கை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:

இன அடிப்படையில் பிரதேச செயலகங்களையோ உள்ளூராட்சி அமைப்புகளையோ உருவாக்க முடியாது என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இது கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த கருத்தாகும்.

கல்முனை பிரதேச செயலகம் என்பது முஸ்லிம்களுக்கான செயலகம் அல்ல. அது தமிழ் மொழியில் சேவையாற்றும் நிர்வாக அலகாகும். அதனை இன அடையாளங்களின் அடிப்படையில் அணுகுவது தவறான புரிதல்களை உருவாக்குகிறது.

கடந்த கால அரசியல்வாதிகள் “முஸ்லிம் செயலகம்”, “தமிழ் செயலகம்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி சமூகங்களுக்கிடையே தேவையற்ற பிரிவினைகளை உருவாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் நிர்வாகத் தேவைகளை நாம் மறுப்பதில்லை. ஆனால் அவற்றிற்கான தீர்வுகள் இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக மற்றும் புவியியல் அடிப்படையில் அமைய வேண்டும். பாண்டிருப்பு மற்றும் மருதமுனை பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய நிர்வாக அலகுகள் உருவாக்கப்படுமானால் அதனைப் பற்றி கலந்துரையாடலாம்.

கேள்வி:

இறுதியாக அரசாங்கத்திற்கு நீங்கள் முன்வைக்கும் முக்கிய வேண்டுகோள் என்ன?

பதில்:

அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால் பல திட்டங்கள் நீண்டகால நோக்கமின்றி அவசர அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.

உதாரணமாக வீதிகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் தொடர்பான பல திட்டங்கள் நிரந்தரத் தீர்வுகளை வழங்காத வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. பழுதுபார்ப்பது மட்டுமே அபிவிருத்தி அல்ல. எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவடிப்பள்ளி பாலம் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. நீரேற்றப் பிரச்சினைகளும் ஒருங்கிணைந்த திட்டங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். அதேபோல் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பகுதியிலுள்ள நீண்டகாலப் பாலப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே அரசாங்கம் அரசியல் தாக்கங்களிலிருந்து விடுபட்டு, நேர்மையான அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் நிபுணர்களை அடையாளம் கண்டு, கல்முனை மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை அறிவியல் ரீதியாகவும், நீண்டகால நோக்கத்துடனும் முன்னெடுக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய பதிலாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :