ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட் விதித்த தண்டனையை இரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 11-ம் திகதி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தவறால் சொத்துக் குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
எனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.(ந)
