2015ன் ஆரம்பத்திலேயே மிக உறுதியான நிலையில் கொமர்ஷல் வங்கி!

கொமர்ஷல் வங்கி 2015ன் ஆரம்ப கட்டத்திலேயே மிக உறுதியான நிலையில் காணப்படுகின்றது. மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் அதன் வரிக்குப் பிந்திய இலாபமாக 2,509 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளது. 

இது கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.1% வளர்ச்சியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடன்கள் மற்றும் பெறுகைகளில் அபிரிமிதமான வளர்ச்சி, வழமையான உறுதியான வைப்புக்கள் மற்றும் குறைந்த நிதிச் செலவு என்பன இந்த வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளன. 

இந்தக் காலப் பகுதியில் தேறிய வட்டி வருமானம் 7.233 பில்லியன்களாக உள்ளது. இது 10.06% அதிகரிப்பாகும். இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

இந்த முதல் மூன்று மாத காலத்திலும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பனவற்றுக்கு முன் இலாபம் 7.88% மாக அதிகரித்து 4,204 பில்லியன்களாக உள்ளது. வரிக்குமுந்திய இலாபமாக காணப்படும் 3,579 பில்லியன் ரூபா 8.77% அதிகரிப்பை குறிப்பிட்ட காலத்தில் பிரதிபலித்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. 

தேறிய வட்டி வருமானம், தரகுகள், வெளிநாட்டு நாணய மாற்று வருமானம், மீளப் பெறுகைகள் மற்றும் ஏனைய வருமானங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய மொத்த செயற்பாட்டு வருமானம் 8.84% த்தால் அதிகரித்து 9.682 பில்லியன் ரூபாய்களாகக் காணப்படுகின்றது. 

மொத்தக் கடன்கள் மற்றும் பெறுகைகள் 2015 மார்ச் 31ல் 498,552 பில்லியன்களாக உள்ளது. இது கடந்த 12 மாத காலத்தில் 19.13% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்த வைப்பானது மாதாந்தம் சராசரியாக ஆறு பில்லியனுக்கும் அதிகமான தொகையால் வளர்ச்சி கண்டுள்ளது. 

2014 டிசம்பர் 31 முதல் பதிவாகியுள்ள இந்த வளர்ச்சி தற்போது மீளாய்வுக்கு உள்ளான காலாண்டில் 549.111 பில்லியன்களாக உள்ளது. கடந்த 12 மாத காலத்தில் வைப்புக்களின் வளர்ச்சி 16.28%மாகும். 

இந்தப் பெறுபேறுகள் பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் தலைவர் தர்மாதீரசிங்க “இந்த முதலாவது காலாண்டில் கொமர்ஷல் வங்கியின் செயற்பாடானது வங்கியின் ஸ்திரப்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட எதிர்வு கூறல்கள் மற்றும் பிரதிபலிப்புக்களோடு இசைவுடையதாகவே காணப்படுகின்றன. 

அநேகமான வங்கித் துறையினர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் வங்கியின் இந்தப் புள்ளி விவரங்கள் மகிழ்வூட்டுகின்றன” என்றார்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெகன் துரைரட்ணம் இதுபற்றிக் கூறுகையில் இலாபங்களைப் பொறுத்தளவில் மீளாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் வட்டி எல்லை குறைந்து வருகின்ற நிலையிலும் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்” என்றார். 

வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி குறிப்பிட்ட காலப்பகுதியில் 800 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது. இது குறிப்பிட்ட காலப் பகுதியில் 807.852 பில்லியன்களாக காணப்படுகின்றது. 

ஆளணி செலவு, பெறுமானத் தேய்வு, கடன்தீர் நிதி திரட்டல் மற்றும் ஏனைய செலவீனங்கள் உள்ளடங்களாக மொத்த செலவினம் 7.82% த்தால் அதிகரித்து 4,148 பில்லியன்களாக உள்ளது. 

ஏனைய பிரதான செயற்பாட்டு குறிகாட்டிகளான கொமர்ஷல் வங்கியின் செயற்பாடுகள் அற்ற மொத்த மற்றும் தேறிய கடன்கள் விகிதம் முறையே 3.40% மாகவும், 1.88% மாகவும் அதிகரித்துள்ளன. இது ஒரு வருடத்துக்கு முன்னர் 4.40%மாகவும், 2.54%மாகவும் காணப்பட்டது. 

வட்டி வீத எல்லைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், 2015 மார்ச் 31ல் இது 3.66% மாகக் காணப்படுகின்றது. வங்கியின் முதல் வரிசை மூலதன சமவிகிதாசாரம் 12.93%த்தில் இருந்து 12.14%மாகக் குறைந்துள்ளது. 

இதனிடையே மொத்த மூலதன சம விகிதாசாரம் மீளாய்வுக்குரிய குறிப்பிட்ட காலாண்டில் 15.97%த்தில் இருந்து 15.03%மாகக் குறைந்துள்ளது. எவ்வாறாயினும் இந்த விகிதங்கள் சட்டப்படி வேண்டப்படும் மட்டத்தை விட மிக அதிகளவிலேயே காணப்படுகின்றன. 

இலங்கையில் அதி உயர் மட்ட சந்தை மூலதன மயமாக்கல் கொண்ட வங்கி என்ற நிலையையும், மீளாய்வுக்கு உள்ளான குறிப்பிட்ட காலாண்டில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய நிறுவனங்களுள் மூன்றாவது இடத்தையும் வங்கி தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -