ஹாசிப் யாஸீன்-
ஒழுக்க ரீதியில் என்னை ஆளுமைப்படுத்தி தலைமைத்துவப் பண்புகளை பயிற்றுவித்த எனது முதன்மை ஆசானும், மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மிலின் மறைவையிட்டு கவலையடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மில் இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவுக்கு செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த வேளை, அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தனது 76வது வயதில் காலமானார்.
இவரின் மறைவையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூhயில் நான் மாணவத் தலைவனாகவும் அவர் பாடசாலையின் ஒழுக்காற்று குழுவுக்கு பொறுப்பான ஆசிரியராகவும் இருந்த வேளை எங்களுக்கு சிறந்த தலைமைத்துவப் பண்புகளை பயிற்றுவித்த முதல் ஆசானாக அவரை பார்ப்பதில் பெருமையடைவதோடு எங்களுக்கு சிங்கள மொழியினை கற்பிப்பதில் அதிக அக்கறை காட்டிய ஆசானுமாவார்.
சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற இவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். எமது பிராந்தியத்தில் பல கல்விமான்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் சிங்கள மொழியினை கற்பித்த பெருமை இவருக்குண்டு.
2001ம் ஆண்டு நான் முதன்முதலாக பாராளுமன்றம் தெரிவான போது மகிழ்ச்சியடைந்தவருள் ஒருவர். எனது அரசியல் பணி தொடரவேண்டும் என்பதற்காக பல ஆசோசனைகளை வழங்கி முன்னின்று உழைத்தவர்.
இவர் ஊடகத்துறையிலும் கால்பதித்து பல சமூகம் சார்;ந்த பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து சமூகத்திற்காக உழைத்தவர். அத்துடன் எனது அரசியல் பணிகளை குறிப்பாக சிங்கள மொழி ஊடகத்தில் கொண்டு வந்த ஒரு மூத்த ஊடகவியலாளருமாவார்.
சாய்ந்தமருதின் சமாதான சபையின் தலைவராகவும், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும் இருந்து ஊருக்காக பணிபுரிந்தவர்.
இவரின் மறைவையிட்டு கவலையுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
.jpg)

0 comments :
Post a Comment