“கடின உழைப்பும் தொடர்ச்சியான முயற்சியும் தான் வெளிவாரி கல்வியின் வெற்றிக் குறியீடு” – பேராசிரியர் எம்.சி. அப்துல் நாசர்



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையம் (CDPL) ஏற்பாடு செய்த 2022/2023 கல்வியாண்டிற்கான கலை இளமாணி (BA External) பட்டப்படிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் வழிகாட்டல் கருத்தரங்கும் 2026 ஏப்ரல் 25ஆம் திகதி ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன், கலை மற்றும் கலாசார பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், வர்த்தக பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, தர உறுதிப்படுத்தல் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். சமீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வு சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.சி. அப்துல் நாசர் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி வரவேற்பு மற்றும் வழிகாட்டல் உரையாற்றினார்.

தனது உரையில் அவர் வலியுறுத்தியதாவது, வெளிவாரி பட்டப்படிப்பு என்பது ஒரு சாதாரண கல்விப் பயணம் அல்ல; அது கடின உழைப்பு, ஒழுக்கம், நேர முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமையும் சவாலான கல்விப் பயணம் ஆகும். வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டங்களுக்கு இடையில் எந்தவித தர வேறுபாடும் இல்லை என்றும், ஒரே தரநிலைகளில் பாடத்திட்டங்களும் மதிப்பீடுகளும் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, இந்தப் பட்டத்தை வெறும் பதிவு செய்வதன் மூலமாகவோ அல்லது கட்டணத்தை செலுத்துவதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்களது தனிப்பட்ட முயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னாட்சி கற்றல் முறைகள் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளின் அனுபவங்களை எடுத்துக்காட்டிய அவர், பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் குறைந்தளவு மாணவர்களே குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பட்டத்தைப் பெறுகின்றனர் என சுட்டிக்காட்டினார். இதனை மாற்றுவதற்கு மாணவர்கள் ஆரம்பத்திலிருந்தே உறுதியான மனப்பாங்குடன் கல்விப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவர்கள் வெற்றியடைய மூன்று முக்கியக் கோட்பாடுகளை அவர் முன்வைத்தார்: கடின உழைப்பு, தொடர்ச்சியான முயற்சி மற்றும் இலக்கில் நிலைத்திருக்கும் மனப்பாங்கு. குறிப்பாக, தற்காலிக நன்மைகள், வேலை வாய்ப்புகள் அல்லது பிற சிதறல்களால் கல்வியில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், குடும்பப் பொறுப்புகள், தொழில் மற்றும் பொருளாதார சவால்களுடன் கல்வியை முன்னெடுக்கும் வெளிவாரி மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் சமநிலையை பேணிக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி, தொழில் மற்றும் குடும்பம் ஆகிய மூன்றையும் சமமாக நிர்வகிக்கும் திறன் வெளிவாரி மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

தான் ஒரு வெளிவாரி மாணவராக சட்டப் பட்டப்படிப்பை (LLB) கற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், குறைந்த நேர வகுப்புகள் மற்றும் சுயகற்றல் முறை இருந்தபோதிலும் உறுதியான முயற்சி மற்றும் தெளிவான இலக்குடன் செயல்பட்டால் வெற்றி கண்டடைய முடியும் என ஊக்கமளித்தார். மேலும், வெளிவாரி பட்டதாரிகள் இன்று விரிவுரையாளர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல உயர்ந்த பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல; அது ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றத்தையும், குடும்பத்தின் பெருமையையும், சமுதாயத்தின் மரியாதையையும் உயர்த்தும் சக்தியாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :