இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் பிரதான உரையாற்றினார். அவர் தனது உரையில், வெளிவாரி பட்டப்படிப்பு என்பது எளிதான பாதை அல்ல; அது ஒழுக்கம், நேர முகாமைத்துவம், சுயமுனைப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை வலியுறுத்தும் தனித்துவமான கல்விப் பாதை எனக் குறிப்பிட்டார்.
மேலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் தொழில் வாழ்க்கையுடன் இணைந்து கல்வியைத் தொடரும் மாணவர்களின் உறுதியை அவர் பாராட்டியதுடன், வழங்கப்படும் கற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி கல்விப் பயணத்தை பொறுப்புடன் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டப்படிப்புகளுக்கு இடையில் தரத் தளத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையெனவும், கடுமையான சேர்க்கை மற்றும் மதிப்பீட்டு முறைகள் மூலம் கல்வித் தரம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மந்தமாக இருந்த இந்த நிலையம் தற்போது பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வி விரிவாக்க நிலையமாக வளர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளராக பணியாற்றிய கலாநிதி சபீனா அவர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
மேலும், பல்கலைக்கழகங்கள் குறைந்த வளங்களுடனும் நிதி கட்டுப்பாடுகளுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்நிலையிலும் சமூகத்திற்கான கல்வி சேவையை விரிவுபடுத்தும் பொறுப்பை தொடர்ந்து ஏற்று வருவதாக தெரிவித்தார். வெளிவாரி மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வெளிவாரி பட்டப்படிப்புகளில் மூன்று ஆண்டுகளுக்குள் பட்டம் பெறும் மாணவர்களின் வீதம் சுமார் 10–15% மட்டுமே உள்ளதெனக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களது முயற்சியால் இந்த வெற்றிவிகிதத்தை உயர்த்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் பாடத்திட்டம் தொடர்பான விரிவான விளக்க உரையாற்றினார். தனது உரையில், இந்தப் பட்டப்படிப்பு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் தர உறுதிப்படுத்தல் செயல்முறைகளின் அடிப்படையில் மீள வடிவமைக்கப்பட்டு தரநிலைக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய பாடத்திட்டம் தொழில்சார் தேவைகளுடன் இணங்க மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், basket system, செயன்முறை கற்றல் மற்றும் internship training போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். கலைத்துறை மாணவர்களுக்கே உரிய internship வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பட்டப்படிப்பின் கல்வித் தரம் UGC மதிப்பீட்டின் அடிப்படையில் “B” தரநிலையைப் பெற்றுள்ளதாகவும், இது நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடத்தக்க நிலையை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் Virtual Learning Environment (VLE), course manual system மற்றும் தனிப்பட்ட server வசதிகள் போன்ற நவீன கற்றல் வளங்கள் வழங்கப்படுவதாகவும், வெளிவாரி மாணவர்களுக்கான நூலக வசதிகளை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற seminar களில் கட்டாயமாக பங்கேற்பதும், assignment களை நேரத்தில் சமர்ப்பிப்பதும், சுய ஒழுக்கத்துடன் படிப்பை முன்னெடுத்துச் செல்லுவதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.சி. அப்துல் நாசர் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கி வரவேற்பு மற்றும் வழிகாட்டல் உரையாற்றினார். வெளிவாரி பட்டப்படிப்பு என்பது கடின உழைப்பு, ஒழுக்கம், நேர முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றை வலியுறுத்தும் கல்விப் பயணம் என அவர் குறிப்பிட்டார். வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டங்களுக்கு இடையில் எந்தவித தர வேறுபாடும் இல்லையெனவும், ஆனால் பட்டத்தை வெறும் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் பெற முடியாது; மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறைந்தளவு மாணவர்களே குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டம் பெறுகின்றனர் என்பதையும் குறிப்பிட்ட அவர், இந்த நிலையை மாற்ற மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குடும்பப் பொறுப்புகள், தொழில் மற்றும் பொருளாதார சவால்களுடன் கல்வியை முன்னெடுக்கும் வெளிவாரி மாணவர்களுக்கு சமநிலை பேணும் திறன் மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்கள் வெற்றியை அடைய மூன்று முக்கியக் கோட்பாடுகளையும் அவர் முன்வைத்தார்: கடின உழைப்பு, தொடர்ச்சியான முயற்சி மற்றும் இலக்கில் நிலைத்திருக்கும் மனப்பாங்கு. தற்காலிக சிதறல்கள் கல்விப் பயணத்தை பாதிக்கக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தான் ஒரு வெளிவாரி மாணவராக கல்வி கற்ற அனுபவத்தையும் பகிர்ந்த அவர், உறுதியும் முயற்சியும் இருந்தால் வெளிவாரி பட்டப்படிப்பிலும் வெற்றி பெற முடியும் என மாணவர்களை ஊக்குவித்தார். கல்வி தனிப்பட்ட முன்னேற்றத்திற்கே அல்லாது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தின் பெருமையாகவும் அமைய வேண்டும் எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் முகாமையத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, தர உறுதிப்படுத்தல் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம். சமீம், வெளிவாரி கற்கைகள் மற்றும் தொழில்சார் கற்றல் நிலையத்தின் பிரதி பணிப்பாளர்களான சிரேஷ்ட விரிவுரையாளர் சரீனா யூ.எம்.ஏ. கபூர், கலாநிதி எம்.ஐ.எம். றியாத், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். சரீப்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. பாத்திமா தஹாரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 700 மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வை சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச். நபார் அவர்கள் ஒருங்கிணைத்ததுடன், பொருளியல்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எம்.ரீ. ஆஹிலா ஹனீஹா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.





























0 comments :
Post a Comment