உலக தொழிலாளர் தினம் – சிறப்புக்கட்டுரைசட்டத்தரணி Z.A. அஷ்ரஃப், (M.A.) சர்வதேச உறவுகள், கொழும்புப் பல்கலைக்கழகம்

ன்று நாமனைவரும் உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம், தொழிலாளர் தினம் எவ்வாறு தோன்றியது?, தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் என்பன இங்கு முக்கியம் பெறுகின்றன. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றைக் குறிப்பதாகும். பெரும்பாலான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. பிரேசில், பல்கேரியா, கேமரூன், சிலி, கொலம்பியா, சீனா, கியூபா, சைப்ரஸ், செக் குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, டென்மார்க், டொமினிக் குடியரசு, ஈக்வடார், எல் சல்வடார், எகிப்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கௌதமாலா, ஹைட்டி, ஹோண்ட்ரூஸ், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, மெசடோனியா, மடகாஸ்கர், மலேசியா, மால்டா, மொரூஷியஸ், மெக்சிகோ, மொராக்கோ, மியான்மர் வடகொரியா, நார்வே, பாகிஸ்தான், பனாமா, பராகுவே, பெரு, போலந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்லோவகியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, செர்பியா ஆகிய நாடுகளில் மே 1 தேசிய விடுமுறை தினமாக உள்ளது. . கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

கொரோனாப் பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக எம்மால் வழமை போன்று பெளதீக ரீதியாக இதனைக் கொண்டாட முடியாத போதும் உளரீதியாக எம்மால் முழுமையாகக் கொண்டாட முடியும் என்பதில் ஐயமில்லை. எனவே, உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுதல் என்பதை விடவும் நினைவு கூர்தல் என்ற பதம் சாலப்பொருந்தும் எனலாம். அவரவர் தத்தமது இடத்திலிருந்து கொண்டு தம்மாலியன்ற சேவைகளை உலகுக்கு வழங்குவதன் மூலமே உலகம் இயங்குகின்றது; செழிப்புறுகின்றது. எனவே, உலக இயக்கத்திற்கு தொழிலாளர் அனைவரது சேவையும் தேவையாக உள்ளது. தொழில் செய்வதன் சிறப்புக் குறித்துத் திருக்குறள் இவ்வாறு கூறுகின்றது,
“இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”

“உழவர்கள் தாம் தமது முயற்சியின் மூலம் உழைத்து உண்பதனையே இயல்பாக உடையவர்கள்; பிறரிடம் அவர்கள் இரந்து உண்பதுமில்லை, அத்தோடு தம்மிடம் வந்து இரந்து கேட்பவர்களுக்கு அவர்கள் தேவையானதை வழங்குவார்கள்” என்பது அதன் பொருளாகும்.

“ஒருவர் தனது கரத்தால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவு வேறேதும் இல்லை” என்பது நபிகள் நாயகத்தின் வாக்காகும்.

"கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" என்றும் "ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்ல; என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்ல" என்றும் தற்காலக் கவிஞர்கள் உழவுத் தொழிலைப் போற்றிப் பாடியுள்ளனர்.

உழவுத் தொழில் மற்றும் வணிகம் தொடர்பில் மேற்படி குறிப்பிட்ட அம்சங்கள் அமைந்திருப்பினும் அதனை நாம் ஏனைய தொழிற்றுறைகளோடும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

இவ்வாறு தொழிலினதும், தொழிலாளர்களினதும் சிறப்பைப் பலரும் சிலாகித்துப் பேசியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இச்சந்தர்ப்பத்தில் உலக தொழிலாளர் தினம் கொண்டாடப் படுவதற்கான வரலாற்றுப் பின்னணி முக்கியம் பெறுகின்றது.

உலக தொழிலாளர் தினம் ஏன்?

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்கள் தினமும் 12 அல்லது 18 மணித்தியாலங்கள் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே இந்நிலை தோன்றியது. அப்போது குறைந்த வேலை நேரம் கோரித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டமே உலக தொழிலாளர் தினம் உருவாகக் காரணியாய் அமைந்தது. இங்கிலாந்தில் உருவான சாசன இயக்கம் (Chartists) 10 மணிநேர வேலைக் கோரிக்கை உட்பட முக்கியமான 6 கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தியது. 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்களுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்பது தெரிய வந்தது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. 1834-ல் நிவ் யோர்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். தினமும் அவர்கள் பதினெட்டு, இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளர்களின் சட்டத்தரணி’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பிரான்சில் 15 மணிநேரம் உழைத்து வந்த தொழிலாளர்கள் 1834 ஆம் ஆண்டு அதனை எதிர்த்துப் போராடினர். எனினும் அவர்களது 'ஜனநாயகம் அல்லது மரணம்' என்ற சுலோகத்தைக் கொண்ட இப்போராட்டம் வெற்றியளிக்கவில்லை. அவ்வாறே 1856 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலுள்ள ‘மெல்போர்ன்’ நகரில் கட்டிடக் கலைஞர்கள் 8 மணிநேர வேலை கோரிப் போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

1886 மே மாதம் 03 ஆம் திகதி மெக்கார்மிக் ஹார்வெஸ்டிங் மெசின் என்ற நிறுவனத்தின் வாயிலில் தொழிலாளர்கள் கண்டனக் கூட்டமொன்றை நடாத்தினர். இதனால் கோபம் கொண்ட தேசியப்படையினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ‘ஹே’ சதுக்கத்தில் அமைதியான முறையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அவ்வேளை தேசிய படையினர் மீது குண்டு வீசப்பட்டது. குண்டு வீசியது யாரென்பது எவருக்கும் தெரியாத போதும் தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய 'அனார்கிஸ்ட்' என்ற அமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேர் மீது கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் முடிவில் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜோர்ஜ் ஏங்கல், அடொல்ஃப் பிட்சர் ஆகியோர் 1887 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

1889 ஜூலை 14 ஆம் திகதி பாரிசில் சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேர வேலைக்கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதென்றும் 1890 மே 01 ஆம் திகதி உலகெங்கும் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே இன்றுவரை மே மாதம் 01 ஆம் திகதியை உலக தொழிலாளர் தினமாகக் கொண்டாட வழியமைத்தது எனலாம். 1896 ஏப்ரலில் லெனின், ரஷ்யத் தொழிலாளர் களின் நிலைமை குறித்து விரிவாகப் பேசினார். மேற்படி தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து உருவாக்கப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது.


தொழிலாளர் தொடர்பான சட்டங்கள்

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாகும் வகையில் இலங்கையில் பல சட்டங்கள் காணப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (Employees’ Provident Fund Act), 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் (Employees’ Trust Fund Act), 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டம் (Payment of Gratuity Act), 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழிற் பிணக்குச் சட்டம் (Industrial Dispute Act), 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் பணி முடிவுறுத்தற் சட்டம் (Termination of Employment of Workmen Act) என்பன முக்கியமான சில சட்டங்களாகும். ஒரு தொழிலாளி தனக்கு இழைக்கப்படும் தீங்கு தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கும், தீர்ப்பினைப்பெறுவதற்கும் தொழில் நியாய சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, உலக தொழிலாளர் தினமாகிய இன்று தொழிலாளர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நாம் மதிப்பதோடு மட்டுமன்றி கொரோனாத் தொற்றுப் பரவலினால் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, நலிவடைந்த அவர்களது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நாம் முன்வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :