பிரபாகரன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், கீழ் சாதிக்காரன் என்று நினைப்பது சரியா..?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெள்ளாளரல்லாதவர் என்பதால் அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற தவறான கருத்து பல தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் நிலவி வருகிறது. 

ஈழத்தில் கரையார் சமூகம், தாம் பெரும்பான்மையாக‌ வாழும் பகுதிகளில் இலங்கை வெள்ளாளர்கள் எவ்வாறு மோசமாக பஞ்சமர்களை நடத்தினார்களோ அது போலவே தமக்குக் கீழிருந்த ஏனைய திமிலர், பரம்பர், பரவர், முக்குவர், போன்றவர்களை நடத்தி வந்துள்ளனர். 

சைவ வெள்ளாளர்களுக்கும் கரையாருக்கும் தொழில் சார்பிலான போட்டியில்லாததால், பெரும்பான்மையான கரையோரக்கிராமங்களில் அவர்களும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டி சாதி வெறிபிடித்தவர்களாகவே நடந்து கொண்டனர்.

பிரபாகரன் அவர்களின் சொந்த ஊராகிய வல்வெட்டித்துறையிலிருந்து இலங்கைக்கும் தமிழ்நாடு மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கிடையிலான கடத்தல் தொழிலில் பணக்காரர் ஆனவர்களும் பரம்பரைப் பணக்கார்ரகளும், படித்து அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்கள் எல்லோரும் தம்மை மேலோங்கி கரையார் எனவும், மீன்பிடித் தொழில் செய்யும் மற்றவர்களைக் கரையார் என அழைக்கும் வழக்கமுண்டு.

இலங்கையின் பிரபலமான எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ், விடுத‌லைப்புலிக‌ளின் த‌லைவ‌ர் பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சாதியில் நம்பிக்கையுள்ள பழமைவாதி ம‌ட்டும‌ல்ல‌, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பிரிவினர், வல்வெட்டித்துறையில், பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளின் முன்னோர் கட்டிய வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அனுமதிக்குமாறு வற்புறுத்திய போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைவதற்கு மறுப்புத் தெரிவித்து, தமது பரம்பரை தர்மகர்த்தா (எசமான்) பதவியை விட்டு விலகியவர் என்கிறார். 

அதற்காக பிரபாகரனிடம் சாதிப்பிடிப்பு இருந்ததாக அல்லது அவர் அதை ஆதரித்ததாக கருத்தல்ல.

ஈழத்திலுள்ள சாதியடிப்படையில் அவர் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதார பலமற்ற நலிந்த சமூகத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் சாதி என்ற பேயை முற்றாக ஒழிக்க தன்னால் முடிந்ததை செய்தாரே தவிர, தனது சாதிக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை. 

இலங்கை நிலவரம் சரியாகப் புரியாத சிலர் விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டம் திராவிட இயக்கங்கள் போன்று சாதியொழிப்புக்காக உருவாக்கப்பட்டது அல்லது அந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது போன்றும், பிரபாகரன் இலங்கையில் பெரும்பான்மை வெள்ளாளர்களை வெறுத்தார் என்பது போன்றும் கட்டுரைகளையும், கதைகளையும் அவிழ்த்து விடுவதைக் காணலாம். ஈழத்திலுள்ள பெரும்பான்மை வெள்ளாளர்களின் ஆதரவில்லாமல் ஈழ விடுதலைப் போராட்டம் இவ்வளவு காலம் தாக்குப் பிடித்திருக்க முடியாதென்பது தான் உண்மை.

பிரபாகரன் அவர்களின் சாதி ஈழவிடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை. அவரது நோக்கம் பெரும்பான்மை வெள்ளாளர்களுக்கெதிரான சாதி ஒழிப்புப் போராட்டமாக இருந்திருந்தால் நிச்சயமாக, அவரும் அவரது சாதியினருக்காக ஒரு சாதிக்கட்சியைத் தொடங்கியிருப்பாரல்லவா? ஆனால் அவரது நோக்கம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் நோக்கமும் சிங்கள ஆக்கிரமிருப்பிலிருந்து தமிழர்களின் மண்ணைக் காப்பதும், சாதி வேறுபாடற்ற தமிழ்ச்சமுதாயத்தை உருவாக்குவதும் தான். 

அதைப் புலிகள் தமது நடைமுறையிலும் உருவாக்கிக் காட்டினார்கள். அதனால் பிரபாகரனை தலைவராகச் சகோதரனாக உரிமையோடு அண்ணாந்து பார்க்கும் அல்லது பிரபாகனை தனது வழிகாட்டியாகக் கொள்ளும் எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் சாதிக்கட்சிகளில் இருந்து கொண்டு சாதியற்ற தமிழ்ச்சமுதாயத்தை உருவாக்கலாம் எனக் க‌ன‌வு காண மாட்டான்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருமேனியர் வேங்கடம் வேலுப்பிள்ளை அவரது குடும்பத்தில் தனியொரு வாரிசாக இருந்ததால் அவரின் பரம்பரையினரால் கட்டப்பட்ட வல்வெட்டித்துறை சிவன் அல்லது வைத்தீஸ்வரன் கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா பதவி அவரின் மீது திணிக்கப்பட்டது. ஆழ்ந்த பக்திமானாகிய அவர் பயபக்தியுடன் தனது கடமையைச் செய்து வந்தார்.

1970 களின் பின்பகுதியில் வேலுப்பிள்ளை அவர்கள் தனது தர்மகர்த்தா பொறுப்புகளிலிருந்து விலகி தனது ஒன்று விட்ட சகோதரன் சின்னத்தம்பியிடம் வல்வெட்டித்துறை சிவன் கோயிலை நிர்வாகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

திரு. வேலுப்பிள்ளை அரசாங்கத்தில் வகித்த பதவி தர்மகர்த்தா பொறுப்புகளையாற்ற இடைஞ்சலாக இருந்ததால் தான் அவர் தனது தர்மகர்த்தா பதவியிலிருந்து விலகினார் என நான் முன்பு நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான காரணம் முற்றிலும் வேறு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை சாதியில் நம்பிக்கையுள்ள பழமைவாதி. 

ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஆலயப் பிரவேசத்தை அவர் முற்றாக எதிர்த்தார். இலங்கைத் தமிழர் முன்னணியின் முற்போக்கு இளைஞர்கள் கோயிலை அனைவரும் நுழையும் வகையில் திறந்து விடுமாறு கேட்ட போது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

அவர் கூறியது என்னவென்றால், “எதற்கும் ஒரு எல்லையுண்டு. நான் தான் கோயிலைக் கட்டிய சொந்தகாரனாக இருந்தாலும், என்னால் கூட கருவறைக்குள் நுழைய முடியாது. பூசகர் மட்டும் தான் நுழைய முடியும். அதே போல் பொதுமக்களில் சிலரும் கோயிலுக்குள் நுழைய முடியாது.

 அதனால் ஆத்திரமடைந்த இளைஞ்சர்கள் வேலுப்பிள்ளை பசமைவாதம் நிறைந்தவராக இருப்பதைகே கண்டித்ததுடன், அந்தக் கோயிலின் கதவுகள் எல்லாச் சாதியினருக்கும் விரைவில் திறந்து விடப்படும் என அவருடன் சவால் விட்டனர். இயற்கையில் சாந்த குணங்களைக் கொண்ட வேலுப்பிள்ளை கோபமுற்று அப்படி இந்தக் கோயில் அனைவருக்கும் திறந்தது விடப்பட்டால், நான் கோயிலின் எசமானாக (பரம்பரை தர்மகர்த்தா) இருக்க மாட்டேன் என்றார்.

அந்த சம்பவத்துக்குப் பின்னர், தமிழர் ஐக்கிய முன்னணியின் இளைஞர் பிரிவு அனைவருக்கும் ஆலயப் பிரவேசத்தை வேண்டி ஆலயத்தின் முன்னால் வன்முறையற்ற போராட்டம் நடத்தினர். ஆனால் வல்வெட்டித்துறை சண்டியர்களின் கூட்டம் ஒன்று அந்த இளைஞர்களை நையப்புடைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது. ஆனால் கடைசியில் பொலீஸ் காவலுடன் வல்வெட்டித்துறை சிவன் கோயில் சாதி வேறுபாடின்றி எல்லோருக்கும் திறந்து விடப்பட்டது. “

கதிரவன் 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :