இந்த நிகழ்வு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – சாய்ந்தமருது கிளைத் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம்.சலீம் (சர்கி) அவர்களின் தலைமையிலும், கிளை செயலாளரும், கதீப் முஅத்தீன் நலன்புரி சம்மேளனத் தலைவருமான அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி), சம்மேளன செயலாளர் அஷ்ஷேய்க் எம்.சி. முகம்மது பாஹிர் (தப்லீகி) ஆகியோரின் நெறிப்படுத்தலிலும், அஷ்ஷேய்க் ஏ.கே.எம். ஸமீர் (பாலாகி) அவர்களின் தொகுப்பிலும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். சலீம் (சர்கி) அவர்கள், அதான் என்பது சாதாரண அழைப்பு அல்ல; அது இஸ்லாமிய சமுதாயத்தின் அடையாளச் சின்னமாகவும், தௌஹீத் கொள்கையை உலகறியச் செய்யும் உயரிய அறிவிப்பாகவும் இருப்பதை வலியுறுத்தினார். முஅத்தீன்கள் சமூகத்தில் மிகப் பொறுப்பான பங்கு வகிப்பவர்கள் என்றும், அவர்களின் குரல் வழியாக அல்லாஹ்வின் மகத்துவமும் நபி (ஸல்) அவர்களின் தூதர்துவமும் தினமும் அறிவிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அதானை சரியான உச்சரிப்புடனும் தஜ்வீத் விதிகளுக்கிணங்கவும் வழங்குவது இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்தார். அதானின் சொற்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட அதன் அர்த்தத்தையும் மரியாதையையும் பாதிக்கக்கூடும் என்பதால், முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் அவசியம் எனவும் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில், “இஜாஸா” எனும் மரபுவழி அங்கீகாரக் கற்றல் முறையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
அதேவேளை, முஅத்தீன்களின் குரல் இனிமையாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அதான் மக்கள் மனங்களை தொழுகைக்குத் திருப்பும் ஆன்மீக அழைப்பாக இருப்பதால் உணர்வுடனும் பக்தியுடனும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முஅத்தீனின் குரல் கேட்கும் எல்லா உயிரினங்களும் அவருக்கு சாட்சியளிக்கும் என்ற நபிமொழியையும் நினைவூட்டினார்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, அப்துர் ரஹ்மான் இஸ்லாமிய அகடமியின் அதிபரும், நூருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான அபூ அப்திர் ரஹ்மான் M.B.M முர்ஸித் (அர்ரஸாதி) அவர்கள் “அல் பயான் பீமா வரத பில் அதான்” என்ற தலைப்பில் விரிவான உரையாற்றினார். அவர் தனது உரையில் அதானின் வரலாறு, மார்க்க அடிப்படை, அறிவிக்கும் முறைகள் மற்றும் ஆன்மீக சிறப்புகளை ஆழமாக விளக்கினார்.
அதான் என்பது தொழுகைக்கான அழைப்பை மட்டுமல்லாது, அல்லாஹ்வின் மகத்துவத்தையும் நபி (ஸல்) அவர்களின் தூதர்துவத்தையும் உலகிற்கு அறிவிக்கும் உயரிய அறிவிப்பாகும் என்றும், அதன் ஒவ்வொரு சொலும் தௌஹீத் கொள்கையை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதானை தஜ்வீத் முறைகளுடன், இஜாஸா மரபின் கீழ் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கதீப் முஅத்தீன் நலன்புரி சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கருத்தாடல், முஅத்தீன்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, மார்க்க ஒழுங்கையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்தது.
மொத்தத்தில், இஜாஸாவுடன் இணைந்த அதான் பாடநெறி தொடர்பான இக்கருத்தாடல் நிகழ்வு, சாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதியில் மார்க்க விழிப்புணர்வை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சிகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கலந்து கொண்டவர்களிடையே வெளிப்பட்டது.

0 comments :
Post a Comment