கிழக்கு நட்புபுறவு ஒன்றியம் (Eastern Friendship Organization – EFO) தனது 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் (AGM), புதிய நிர்வாக சபைத் தெரிவு மற்றும் “EFO Star Night” எனும் கலாச்சார நிகழ்வுகளை இணைத்து 2026 மே 02ஆம் திகதி நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அழகாபுரி கடற்கரை விடுதி வளாகத்தில் சிறப்பாக நடத்தியது.
இந்நிகழ்வு, ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றதுடன், பதில் நிர்வாகப் பணிப்பாளர் எம்.எம். உதுமாலெப்பை அவர்களின் நெறிப்படுத்தலிலும், உறுப்பினர் யூ.எல்.எம். அலீம் அவர்களின் தொகுப்பிலும் சிறப்பாக ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வுகளாக EFO கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், EFO கீதம் இசைக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டத்தை நினைவுகூரும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மேலங்கி (T-shirt) அறிமுகப்படுத்தப்பட்டு அங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. வரவேற்புரையை பிரதித் தவிசாளர் எம்.எம். ஜுனைடீன் வழங்கினார்.
மேலும், இறையழைப்பை ஏற்றுக்கொண்ட EFO கௌரவ உறுப்பினர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. இதனை அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் சாய்ந்தமருது கிளை செயலாளர் அஷ் செய்க் எம்.எச். முகம்மது நப்றாஸ் (ரஹ்மானி) நடத்தி வைத்தார்.
பின்னர், தலைமை உரையாற்றிய தவிசாளர் எம்.எம். நஸீர், அமைப்பின் கடந்த கால முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விளக்கினார்.
அவர் தனது உரையில் EFO அமைப்பின் ஆரம்ப காலம் முதல் இன்றைய வளர்ச்சி வரை விரிவாக நினைவுகூர்ந்தார். 1994ஆம் ஆண்டு நண்பர்கள் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு, சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி என்ற அடிப்படையில் உருவாகி, பல தலைமுறைகள் கடந்து தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் அமைப்பை முன்னெடுத்த ஹிதாயத்துல்லா, ஹசன்அலி, முஸாஜித், ஐயூப், உதுமாலெப்பை உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களின் பங்களிப்பு அமைப்பின் வலுவான அடித்தளமாக இருந்ததாகவும் அவர் பாராட்டினார். தாம் மாணவர் காலத்திலேயே இவ்வமைப்புடன் இணைந்திருந்ததை நினைவுகூர்ந்த அவர், இவ்வமைப்பின் வளர்ச்சியில் பல தலைமுறைகளின் பங்களிப்பு உள்ளதைக் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைப்பு எதிர்கொண்ட நிர்வாக சவால்கள் இருந்ததாகவும் காலப்போக்கில் அவைகளை சீரமைத்ததாகவும் தெரிவித்தார்.
அமைப்பின் முக்கிய சொத்தாக விளங்கும் காணி தொடர்பாக அவர் விரிவாக விளக்கினார். முன்பைய நிர்வாகத்தின் காலத்தில் நண்பர்கள் ஒத்துழைப்புடன் 2 ஏக்கர் காணி வாங்கப்பட்டு 14 பங்குகளாகப் பிரிக்கப்பட்டதுடன், அதில் 2 பங்குகள் அமைப்பிற்காக ஒதுக்கப்பட்டதாகவும், இன்றைய நிலவரப்படி அந்த காணியின் மதிப்பு பல கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அமைப்பின் நீண்டகால நிதி வலிமைக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், EFO-வின் எதிர்காலக் கனவாகக் கருதப்படும் கட்டிட நிர்மாணத் திட்டம் தொடர்பாகவும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். மூன்று மாடிகளைக் கொண்ட எல். வடிவ கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், பெரிய மண்டபங்கள், அறைகள், கழிப்பறைகள், ஜிம், பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்கக்கூடிய இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கட்டுமான செலவு, தொழில்நுட்ப சவால்கள் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் தாமதமானதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், இதற்கான ஆரம்ப நிதி சேகரிப்பு முன்னேற்றமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சமூக சேவைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களையும் அவர் விளக்கினார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்குகள் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டதாகவும், அதற்கான நிதி சேகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், சர்வதேச வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கில் 120க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று import/export நடைமுறைகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொழில் தொடக்கம் குறித்து பயிற்சி பெற்றதாகவும், அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கல்வித் துறையில் EFO முன்னெடுத்துள்ள புலமைப்பரிசில் திட்டம் குறித்து பேசுகையில், தற்போது 77 மாணவர்களுக்கு மாதாந்திர உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், வருடாந்தம் சுமார் 27 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த உதவி உண்மையில் மாணவர்களுக்கு பயன் அளிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதற்கென தனிப்பட்ட கண்காணிப்பு முறைமை ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இது உறுப்பினர்களிடையே உறவுகளை வலுப்படுத்தியதாகவும் அவர் கூறினார். உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து, செயலில் ஈடுபடும் உறுப்பினர்களை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய உறுப்பினர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடிப்படை வசதிகள் மேம்பாட்டின் ஒரு பகுதியாக EFO நிலப்பகுதிக்கான வீதி வசதி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், முக்கியமான பகுதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத் திட்டங்களாக தொழில் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்துதல், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல், பெண்களுக்கான சிறு தொழில் வாய்ப்புகள் உருவாக்குதல், இயந்திரங்கள் மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் வழங்குதல் போன்ற பல முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார்.
புதிய நிர்வாகத்திடம் அவர் விடுத்த முக்கிய வேண்டுகோளாக கட்டிடத் திட்டத்தை அவசரமாக முன்னெடுத்து, அடுத்த சில மாதங்களில் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும், உறுப்பினர்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தனது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், தாம் தொடங்கிய முன்னேற்றப் பாதையை புதிய நிர்வாகம் மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வில் கடந்த ஆண்டின் பொதுக்கூட்ட அறிக்கையை பதில் நிர்வாகப் பணிப்பாளர் எம்.எம். உதுமாலெப்பை சமர்ப்பித்து சபை அங்கீகாரத்தைப் பெற்றார்.
அதேபோல், நிதி அறிக்கையை பிரதி நிதிப் பணிப்பாளர் ஏ.சி. முகம்மட் சமர்ப்பித்தார். புலமைப்பரிசில் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் ஐ. அலியார் வழங்கியதுடன், கட்டிட நிர்மாணக் குழுவின் அறிக்கையை எம்.எம். ஜுனைடீன் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றியத்தின் யாப்பு (constitution) திருத்தங்களுக்கு உட்பட்ட பல முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை சபையால் அங்கீகரிக்கப்பட்டன. அங்கத்தினருக்கும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அமைப்பின் வளர்ச்சிக்கான பல பயனுள்ள பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெற்றது.. தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இங்கு உரையாற்றிய முன்னாள் அதிபர் ஐ.கே. ஹசனலி அவர்கள், அமைப்பின் யாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் காலத்திற்கேற்ப சில மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அனுபவத்தின் அடிப்படையில் அமைப்பு மேலும் வலுப்பெற்று முன்னேற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அவர் கடந்த கால நிர்வாக அனுபவங்களை நினைவுகூர்ந்து, EFO வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பழைய நிர்வாகிகள் மற்றும் founder members செய்த பங்களிப்புகளை உயர்வாக பாராட்டினார். அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட வரலாறையும், அந்த காலத்தின் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளுடன் இணைந்த ஆரம்ப முயற்சிகளையும் விளக்கினார்.
அதேபோல், EFOயின் முக்கிய சொத்தாக விளங்கும் காணி வாங்கிய நிகழ்வை விரிவாக நினைவுகூர்ந்து, சிலர் தயக்கம் காட்டியிருந்தாலும் தைரியமான முடிவுகள் மூலம் அந்த நிலம் வாங்கப்பட்டதன் காரணமாக இன்று அமைப்பிற்கு பெரிய சொத்து கிடைத்துள்ளது என குறிப்பிட்டார். சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட சவாலான காலங்களிலும் பல தடைகளை கடந்து அமைப்பை நிலைநிறுத்திய அனுபவங்களையும் பகிர்ந்தார். தற்போதைய தலைவர் நஸீர் அவர்களின் சிறந்த தலைமைத்துவம், கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் அமைப்பின் முன்னேற்றத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை மிக உயர்வாக பாராட்டினார்.
மேலும், புதிய நிர்வாக உறுப்பினர்களையும் உறுப்பினர்களையும் வரவேற்று, அவர்களின் பங்களிப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு அவசியம் என வலியுறுத்தினார். அமைப்பில் ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை, அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை மற்றும் புதிய தலைமுறையின் செயல்பாட்டு பங்கேற்பு ஆகியவை முக்கியமான அடித்தளங்கள் எனவும் கூறினார். தனிப்பட்ட விருப்பமாக, தற்போதைய தலைவர் நஸீர் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருந்து அமைப்பை வழிநடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெயவித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள், முதலில் புதிய உறுப்பினர்களை அமைப்பில் இணைத்ததற்காக EFO நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். பின்னர் தலைவரின் உரையையும் பிற உறுப்பினர்களின் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு EFO-வின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார். 1994 காலப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சுமார் 30 வருட வரலாற்றைக் கொண்ட ஒரு பழமையான சமூக அமைப்பாக இருப்பதால், அதன் வரலாறும் சமூகப் பங்களிப்பும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்த AGM-க்குள் ஒரு சிறப்பு வெளியீடு (publication) தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மேலும் EFO முன்னெடுத்து வரும் கல்வி உதவித் திட்டமான scholarship program மிகவும் பயனுள்ளதெனக் கூறிய அவர், அதன் பெறுபேறுகளை மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். அதேபோல் முன்னர் செயல்பட்டிருந்த சமூக சேவைத் திட்டங்கள்—மருத்துவ முகாம்கள், இரத்ததானம், போதைப்பொருள் விழிப்புணர்வு போன்றவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கான career guidance program ஒன்றை EFO முன்னெடுக்க வேண்டும் என்பதையும் அவர் முக்கியமாக எடுத்துரைத்தார். O/L மற்றும் A/L முடித்த மாணவர்களுக்கு சரியான பாடத்தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதல், தொழில்துறை தேர்வு போன்றவற்றில் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும், பல மாணவர்களுக்கு விண்ணப்ப நிரப்புதல், துறைத் தேர்வு போன்ற அடிப்படை விஷயங்களிலும் உதவி தேவைப்படுகின்றது என்றும் கூறினார். அதேபோல் vocational மற்றும் technical கல்வி வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் திறன் மேம்பாடு போன்றவற்றிலும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இளைஞர்களுக்கு soft skills பயிற்சி அவசியம் எனக் கூறிய அவர், தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல் திறன், தலைமைத்துவம், பிரச்சனை தீர்க்கும் திறன் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான தயாரிப்பு பயிற்சிகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, EFO போன்ற ஒரு வலுவான சமூக அமைப்பு அவசர காலங்கள், பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளிலும் சமூகத்துக்காக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனக் கூறி, அமைப்பின் எதிர்கால சமூகப் பங்களிப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்முனை சாஹிரா கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜபீர் அவர்கள் தனது உரையில், இவ்வமைப்பு ஒரு பிரதேசத்தின் முக்கிய தீர்மான சக்தியாக வளர்ந்திருப்பதை பாராட்டினார். அவர் மருதமுனையில் உள்ள Administration Service Association (MASA) என்ற அமைப்பின் செயற்பாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறி, அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து மாதந்தோறும் திட்டமிட்ட கூட்டங்களை நடத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சி போன்றவற்றை புள்ளிவிவரங்களுடன் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படுவதை விளக்கினார். அந்த அமைப்பு அரசியல் பலத்தை விட நிர்வாகத் திறனை பயன்படுத்தி ஊரின் வளங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பதாகவும், உதாரணமாக வீதி அபிவிருத்தி போன்ற திட்டங்களை திறம்பட கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு, கல்முனை–சாய்ந்தமருது பிரதேசத்திலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த வலுவான அமைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார். பலரிடம் இதைப் பற்றி பேசியிருந்தாலும் இதுவரை முழுமையான அமைப்பு உருவாகாத நிலையை சுட்டிக்காட்டி, “பூனைக்கு மணிகட்டுவது போல” ஒரு சவாலான விடயம் என்றும் கூறினார். இறுதியாக, மூன்று தசாப்தங்களை கடந்தும் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் EFO போன்ற அமைப்பைத் தவிர, இத்தகைய ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேறு எந்த அமைப்பாலும் எளிதில் முடியாது என்ற கருத்தையும் இங்கு வெளியிட்டார்.
இங்கு பல்வறு கருத்துக்களையும் உறுப்பினர்கள் முன்வைத்து உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, புதிய நிர்வாகப் பணிப்பாளர் நன்றியுரை வழங்கியதுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் நிறைவடைந்தன. பின்னர் அனைவருக்கும் இராப்போசனம் வழங்கப்பட்டதுடன் “EFO Star Night” எனும் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உற்சாகமாக இடம்பெற்றன.
EFO – 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு 2026/2027 புதிய நிர்வாக சபை
சிரேஷ்ட ஆலோசகர்கள்:
முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்
முன்னாள் அதிபர் ஐ.கே. ஹசனலி
முகாமைத்துவ சபை:
தவிசாளர்: பொறியியலாளர் எம்.எம். நஸீர்
பிரதித் தவிசாளர்: என்.எம். றிஸ்மீர்
பணிப்பாளர்கள் (Board of Directors):
நிர்வாக பணிப்பாளர்: ஐ. அலியார்
நிதி பணிப்பாளர்: ஏ.சி. முகம்மட்
திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் பணிப்பாளர்: எம்.எம். ஜுனைடீன்
கல்வி பணிப்பாளர்: பேராசிரியர் ஏ. றமீஸ்
சமூக சேவை மற்றும் நலன்புரி பணிப்பாளர்: யூ.கே. முஸாஜித்
விளையாட்டு மற்றும் கலாச்சாரம் பணிப்பாளர்: யூ.எல்.ஏ. அலீம்
ஊடகம் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர்: யூ.கே. கலித்தீன்
பிரதி பணிப்பாளர்கள்:
நிர்வாகம்: எம்.எம். உதுமாலெப்பை
நிதி: எம்.ஏ.சி.எல். நஜீம்
சபை உறுப்பினர்கள்:
ஏ.எல்.ஏ. நாபித்
யூ.எல்.எம். ஹனீபா
எம்.ஐ. ஜபீர்
எம்.எம்.எம். றபீக்
இந்த நிகழ்வு, கிழக்கு நட்புபுறவு ஒன்றியத்தின் எதிர்காலப் பாதையைத் திட்டமிடும் முக்கிய தருணமாக மட்டுமல்லாமல், அதன் உறுப்பினர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் செயற்பாட்டு உற்சாகத்தையும் வெளிப்படுத்திய நினைவுகூரத்தக்க விழாவாக அமைந்தது. அனைத்து உறுப்பினர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டமை இந்நிகழ்வின் சிறப்பை மேலும் உயர்த்தியது.
.png)
0 comments :
Post a Comment