கல்முனை ஸாஹிராக் கல்லூரி கல்வித் துறையைப் போன்று விளையாட்டுத்துறையிலும் தேசிய ரீதியில் முன்னணி வகிப்பது பாராட்டுவதற்குரியதாகும். இன்று அகில இலங்கை கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் மூன்றாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்கு கொண்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரி அரையிறுதிப் போட்டியில் பலாங்கொட ஆனந்த மைத்திரியா மகா வித்தியாலயத்தை மூன்று விக்கட்டுக்களினால் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டிக்கு கல்முனை ஸாஹிராக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டதையிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு பறைசாற்றிய கிரிக்கட் விளையாட்டு இன்று இலங்கையின் பிரதான நகரங்களில் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் கடின பந்தில் கிரிக்கட் விளையாடுவது குறைந்தே காணப்படுகின்றது. கிரிக்கட் துறைக்கு கூடுதலான நிதிகள் தேவைப்படுவதனால் அத்துறையில் நமது இளைஞர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்தாலும் முடியாத விடயமாக உள்ளது.
இருந்தாலும் கடின பந்து கிரிக்கட்டில் முன்னேறலாம் என்கின்ற திடமான நம்பிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் பல கழகங்களும் சில பாடசாலைகளும் இன்று முன்வந்து கிரிக்கட் விளையாடுவது பாராட்டுவதற்குரியதாகும்.
அந்த வகையில் கடின பந்து விளையாடுவதற்கான போதிய வசதிகள் இல்லாத போதும் கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று மூன்றாம் பிரிவு மட்டத்தில் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அடுத்த வருடம் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு இரண்டாம் பிரிவு மட்டத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இது நமது பிரதேசத்திற்குக் கிடைத்த கௌரவமாகும்.
ஸாஹிராக் கல்லூரியின் வரலாற்றில் இதுவும் ஒரு மைல்கல்லாகும். இந்தப் பாடசாலையின் பழைய மணவர் என்ற வகையிலும், இத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றறேன்.
திறமையும்,அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் கொண்ட நமது வீரா்களை பாராட்டுகின்றேன். அத்தோடு இந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம் அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கிரிக்கட் விளையாட்டில் முதலாம் பிரிவு மட்டத்தில் விளையாடுகின்ற ஒரே ஒரு பாடசாலை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியாகும். அந்த வகையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியும் முதலாம் பிரிவு மட்டத்தில் இடம்பிடித்து இலங்கையின் பிரபலமான பாடசாலைகளுடன் விளையாடுகின்ற சந்தர்ப்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
நமது பிரதேச வீரா்களும் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் விளையாட வேண்டும் என்கின்ற அவா நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
இந்த வருடத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நிதிகளை விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியுள்ளேன். அம்பாரை மாவட்டத்திலுள்ள சுமார் 60 விளையாட்டுக் கழகங்கள் தமக்கான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டுக் கழகங்களையும் நமது இளைஞர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு எம்மால் பணிபுரிய முடியாது. அவர்கள்தான் நமது பிராந்தியத்தின் தலைவர்கள்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரி போன்று அம்பாரை மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு பாடசாலையிலாவது கடின பந்து விளையாடுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதுதான் கிரிக்கட்டின் பாரிய வளர்ச்சியாகக் கருதமுடியும்.
0 comments :
Post a Comment