இஸ்ரேல் காஸாவில் குண்டுகளை எறிந்து மேற்கொள்ளும் மேசமான மனிதப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் செயலாளரான நந்தகளுத்தந்ரி விடுத்துள்ள அறிக்கையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பிரதமர் நெத்தன்யாகுவும் அவரது வலதுசாரி ஷியோனிஸவாதிகளும் உலகின் நாலாபுறங்களிலும் இருந்து கிளர்ந்து வரும் எதிர்ப்பினைமதியாது காஸா பிரதேசத்தின் அப்பாவி மக்களை இலக்காகக்கொண்டு பயங்கர விமானக் குண்டு எரிச்சல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக கூறுவதிலிருந்து சியோனிஸ யூதர்களின் இறுமாப்பினைக் காட்டுகிறது.
ஐக்கிய அமெரிக்காவும் அதனைவிட குறைந்த மட்டத்தில் ஐக்கிய இராஜியமும் கைப்பற்றப்பட்ட பலஸ்தீனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானமற்ற மனிதக்கொலைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் டேவிட் கமருனும் தமக்குத் தேவைப்பட்ட இடங்களில் மனித உரிமைகளுக்காக பேசுகிறார்கள். எனினும் இஸ்ரேல் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்டங்களை பகிரங்கமாக மீறும் போதும், இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கும் போதும் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.
இதுவரை பலஸ்தீனில் சிறு பிள்ளைகள் உட்பட 180 இற்கு மேற்பட்டோர் இஸ்ரேலின் விமானத் தாக்குதலினால் கொல்லப்பட்டுள்ளார்கள். வியப்பு என்னவென்றால் மேற்கு நாடுகள் உட்பட எவரும் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமலிருப்பதும் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதுமாகும்.
பலஸ்தீன மக்கள் பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்படும்போதும் அரபு நாடுகள் பலத்த அமைதிகாத்து வருகின்றன. காஸா மற்றும் மேற்குக்கரையில் பலஸ்தீனின் கட்டமைப்பு வகைகள் திட்டமிட்டபடி அழிக்கப்படுதல், இஸ்ரேல் படையினரால் பலஸ்தீன மக்களை வேட்டையாடுதல், பலஸ்தீனர்கள் ஆயிரக்கனக்கானோர் எவ்வித வழக்கு விசாரணையும் இன்றி இஸ்ரேலிய சிறைக்கூடங்களில் சித்திரவதைக்குள்ளாகுதல் சர்வதேச சட்டத்தின் படி குற்றச்செயல்களாகும். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலிய படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டது உலகிற்கு பரபரப்பினை ஏற்படுத்தும் செய்திகளாக இருந்தபோதிலும் இந்தக் கொலைகள் செய்திகளாகவே இல்லை.
காஸாவுக்கு பிரவேசிக்கும் வீதியை பல தசாப்தங்களாக இஸ்ரேல் மூடியேவைத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு எவ்வளவு கோரிக்கைகள் விடுத்தாலும் மேற்குக் கரைக்கும், காஸாவுக்கும் உள்ள வீதியை இஸ்ரேல் திறப்பதேயில்லை.
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஏனைய நாடுகளுக்கு தடைகள் விதித்தாலும் இஸ்ரேலுக்கு அவ்வாறான தடைகளை விதிக்காமல் இருப்பது ஏனென பராக் ஒபாமா மற்றும் டேவிட் கமருன் இடம் கேட்கவேண்டி இருக்கிறது.
பலஸ்தீனுக்கு இராணுவப் படையோ தாக்குதல் விமானங்களோ இல்லை. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள இருப்பது ஆத்மசக்தி மட்டுமே. இதன் காரணமாக இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்த வேண்டும்.
இனவாத இஸ்ரேலை கண்டிப்பதோடு அந்த நாட்டுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள சகலவிதமான தொடர்புகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடமும் மற்றும் உலக மக்களிடமும் கோரிக்கை விடுக்கிறோம்.
நந்தகளுத்தந்ரி
செயலாளர்,
இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம்

0 comments :
Post a Comment