தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்து



நிசப்தம்-
ல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக இடமாற்றங்களை வழங்குவதற்குப் பதிலாக, சுற்றறிக்கைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அரசாங்கம் உடனடியாக கொள்கை ரீதியான நிலையான தீர்வை வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் (19) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சருடன் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சந்தித்ததைப் போன்று, எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று அமைச்சரைச் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பின்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள இடமாற்றங்கள் தற்காலிகமானவை என்றும், அவை நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் தெரிவித்ததாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனினும், முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு மாத்திரமன்றி, சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து முஸ்லிம் ஊழியர்களுக்கும் அவர்களின் கலாசார மற்றும் சமய அடையாளங்களைப் பேணும் வகையில் ஆடை அணிவதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“இச்சீருடை விவகாரத்தின் அடிப்படைப் பிரச்சினை இதுதான். அரசாங்கம் முஸ்லிம்களின் பக்கத்திலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு, சுகாதாரத் துறை உட்பட அரச சேவையின் பொருத்தமான துறைகளில், சுற்றறிக்கைகள் மற்றும் கலாசார, சமய ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆடை அணிவதற்கு தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது என்ற உறுதியான செய்தியை நாம் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இவ்விவகாரம் தொடர்பாக இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்களை அவதானிக்கும்போது, பிரச்சினையை தொடர்ச்சியாக நீடிக்கச் செய்வது நாகரிகமானதல்ல என்றும், அது ஆபத்தான நிலைமையை உருவாக்கக்கூடும் என்றும் ரவூப் ஹக்கீம் எச்சரித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் தான் குறிப்பிட்ட “முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்” என்ற கருத்தையும் அவர் பாராளுமன்றத்தில் விளக்கினார்.

சுகாதார சேவையின் உள்ளூர் நிர்வாக மட்டத்தில் உருவான பிரச்சினையை, அரசின் உயர்மட்டத் தலையீட்டின் ஊடாகவே தீர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் தலையீடு பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைய வேண்டும் என்றார்.

“சுற்றறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கு கொள்கை ரீதியாக முடிவெடுத்துவிட்டோம் என அரசாங்கம் அறிவிப்பது, சில நாட்கள் தாமதமானாலும் தற்போதுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு அவசியமானது” என்றும் அவர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்

2019ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், குறித்த சுற்றறிக்கை சுகாதாரத் துறைக்கும் பொருந்தக்கூடிய மேலதிக சுற்றறிக்கையாகும் எனத் தெரிவித்தார்.

பொதுச் சேவையின் கண்ணியத்தைப் பேணும் வகையில் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறான கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு காதுகளைத் தவிர முகத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஆடை அமைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, குறித்த சுற்றறிக்கையின் உட்பிரிவு 4இன் அடிப்படையில் கலாசார மற்றும் ஆடை வழக்கங்களுக்கு அமைவாக மேலதிக ஆடைகளை அணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

2022ஆம் ஆண்டு இச்சுற்றறிக்கையில் மாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே கல்முனை வைத்தியசாலை நிர்வாகத்தினால் தற்போதைய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பழைய சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்து, அதனைச் செயல்படுத்தினால் இவ்வாறான பாரிய குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன நல்லிணக்க முயற்சிகளைப் பாராட்டிய ரவூப் ஹக்கீம்

கல்முனைப் பகுதியில் ஆங்காங்கே இன முரண்பாடுகள் காணப்பட்டாலும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் கூட்டாக நோன்பு திறப்பதற்கும், ஏனைய இனங்களைச் சேர்ந்த சகோதரர்களுடன் இணைந்து நோன்பு திறப்பதற்கும் நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததை ரவூப் ஹக்கீம் பாராட்டினார்.

அத்துடன், முஸ்லிம்கள் தொழுகை மேற்கொள்வதற்காக தனியான அறை ஒதுக்கப்பட்டிருந்ததையும் அவர் வரவேற்றார்.

“குற்றங்களை மாத்திரம் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்காமல், ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்த வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், சுகாதார ஊழியர்களைப் பயன்படுத்தி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும், செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட விடயங்களாக அமையலாம் என்றார்.

யார் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட, பணியில் இணைந்த ஓரிரு நாட்களிலேயே பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரச சேவையில் நெகிழ்வுத்தன்மை அவசியம்

பொதுச் சேவைக்குள் அனைத்து இன மக்களையும் உள்வாங்கும் வகையில் போதிய நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டுமெனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு சுமார் 32 சதவீதமாகவே காணப்படுவதாகவும், ஆடைத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு இல்லாவிட்டால் இந்த வீதம் மேலும் குறைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது நேபாளத்தை விடக் குறைவான வீதமாகும் என்றும், இலங்கையை விடக் குறைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள பெண் தொழிலாளர்களில் 83 சதவீதமானோர் பௌத்தர்களாகவும், 10.6 சதவீதமானோர் இந்துக்களாகவும், 4.3 சதவீதமானோர் முஸ்லிம்களாகவும் உள்ளதாகத் தெரிவித்த அவர், முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானோர் கல்வித் துறையில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் தற்போது தான் தாதியர் துறைக்குள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதை வைத்திய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அதே ஊழியர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு கடமையின் நிமித்தம் செல்லும்போது, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குள்ளேயே ஹிஜாபைக் கழற்றிவிட்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர் என்றும், இவ்வாறான அச்சம் மற்றும் பீதிக்கு மத்தியில் அவர்கள் பணியாற்றுவது கவலைக்குரிய விடயம் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இறுதியாக, தங்களைச் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளித்த சுகாதார அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், அரசாங்கம் தற்காலிக நடவடிக்கைகளுடன் இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவராமல், உண்மையானதும் நிலையானதுமான தீர்வை வழங்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“சீலைக்கு மேலே சொறிவது” போன்ற தற்காலிக நடவடிக்கைகளுக்குப் பதிலாக, பிரச்சினையின் மூலக்காரணத்தைத் தீர்க்கும் வகையில் சுற்றறிக்கைகளில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, கொள்கை ரீதியான நிரந்தரத் தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்து ரவூப் ஹக்கீம் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :