சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப்பண்பியல் துறைகளின் அறிவுடன் செயற்கை நுண்ணறிவு (AI), Data Science, Machine Learning, Coding போன்ற நவீன தொழில்நுட்பங்களை இணைத்து புதிய அறிவுத் தளத்தை உருவாக்குவதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில், தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்புடன் “Vibe Coding” உள்ளுணர்வு நிரலாக்கல் பயிற்சிப் பட்டறை 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வியாழக்கிழமை தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது.
இதன் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில், புதிய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப கலை மற்றும் கலாசார பீடமும் தன்னைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய உலகம் பன்மைத்துவக் கல்வியை நோக்கி வேகமாக நகர்கிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுகளை ஒன்றோடொன்று இணைத்து புதிய அறிவையும் ஆய்வு முறைகளையும் உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதற்கேற்ப எமது பீடமும் மாற்றமடைய வேண்டும்” என்றார்.
தொழில்நுட்ப அறிவு என்பது தகவல் தொழில்நுட்பம் அல்லது Technology துறைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்ட அவர், சமூக விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரத் துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்தார்.
“Artificial Intelligence மற்றும் Data Science ஆகியவை இன்றைய உலகில் ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன. Machine Learning, Robotics உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. AI-யின் புதிய கருவிகள் மனித வாழ்க்கையையும் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளையும் இலகுபடுத்துகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை சமூக விஞ்ஞான மாணவர்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பதே எம்முன் உள்ள முக்கிய சவாலாகும்” என அவர் குறிப்பிட்டார்.
வெறுமனே அறிவைப் பெற்றுக்கொள்வது மாத்திரம் போதாது என்றும், ஏற்கனவே காணப்படும் அறிவுத் தொகுதிக்கு புதிய பங்களிப்புகளை வழங்கும் வகையில் மாணவர்கள் தமது அறிவையும் தொழில்நுட்பத் திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் எம். எம். பாஸில் வலியுறுத்தினார்.
“சமூக விஞ்ஞானத்தையும் Machine Learning-ஐயும் எவ்வாறு இணைக்க முடியும்? Coding, AI மற்றும் Data Science ஆகியவற்றை எமது சமூக விஞ்ஞான ஆய்வுகளுடன் எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இத்தகைய பயிற்சிகள் அமைகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு புதிய தலைமுறை நிரலாக்க அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட Vibe Coding பயிற்சிப் பட்டறையில், தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் எம். எஸ். எஸ். ராஸித் வளவாளராகக் கலந்து கொண்டார்.
அவர் Vibe Coding என்ற புதிய கருத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மென்பொருள் மற்றும் இணையப் பயன்பாடுகளை உருவாக்கும் முறைகள், Prompt Engineering நுட்பங்கள் மற்றும் நவீன நிரலாக்கப் போக்குகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களையும் செய்முறைப் பயிற்சிகளையும் வழங்கினார்.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் கலாநிதி சி. எம். எம். மன்சூர், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மனிதப்பண்பியல் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எம். ஏ. எம். பௌசர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு, இவ்வாறான தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றதுடன், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நிரலாக்கம் மேற்கொள்ளும் நவீன அணுகுமுறைகள் தொடர்பான பயனுள்ள அறிவையும் நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மாணவர்களுக்கு கிடைத்துள்ள இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பேராசிரியர் எம். எம். பாஸில், Coding மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“இது ஒரு அரிய வாய்ப்பு. மாணவர்கள் இதனை மிகுந்த கவனத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஆய்வு மற்றும் தேடல் நடவடிக்கைகளுக்கு மென்பொருட்களை எவ்வாறு இலகுவாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும்” என அவர் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடம் தேசிய ரீதியில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பதற்கு அதன் பல்துறை அணுகுமுறையும் முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்த அவர், அந்த அடையாளத்தை எதிர்காலத்திலும் மாணவர்கள் பாதுகாத்து மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய வகையில் அறிவு, ஆய்வு, Coding, AI மற்றும் தொழில்நுட்பத் திறன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“Arts என்றாலே அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். எமது மாணவர்களால் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும். சமூக விஞ்ஞான அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து புதிய மாற்றங்களை உருவாக்கும் தலைமுறையாக நீங்கள் உருவாக வேண்டும்” என பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் மேலும் தெரிவித்தார்.
Vibe Coding பயிற்சிப் பட்டறையானது, கலை மற்றும் கலாசாரத் துறைகளின் பாரம்பரிய அறிவுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை இணைத்து, எதிர்கால ஆய்வு மற்றும் தொழில் உலகிற்கு தயாரான புதிய தலைமுறையை உருவாக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னெடுப்பாக அமைந்தது.


0 comments :
Post a Comment