அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தருமான சலீம் றமீஸ் அவர்களின் நான்காவது புதல்வரான றமீஸ் றிஹாம் அஹமத், புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து அல்-ஹாபிழ் பட்டத்தைப் பெற்று தனது குடும்பத்திற்கும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர்.எம். மன்சூர் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் 2026.08.15 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே றிஹாம் அஹமத் அல்-ஹாபிழ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றிஹாம் அஹமத், தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் தரம் 01 முதல் தரம் 06 வரை தொடர்ந்தார்.
இளம் வயதிலேயே மார்க்கக் கல்வி மற்றும் புனித அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது முழுமையான விருப்பத்தின் பேரில் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகி, 2022 ஜனவரி 02ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் ஹிப்ழ் பிரிவில் இணைந்தார்.
அங்கு அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் புனித அல்குர்ஆனை மனனம் செய்து, 2025 ஜனவரி 09ஆம் திகதி அல்-ஹாபிழாக தனது ஹிப்ழ் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்க்க அறிவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அதே கல்லூரியில் 2025 ஜனவரி 25ஆம் திகதி ஆலிம் கற்கைநெறியில் இணைந்து, இன்றுவரை தனது இஸ்லாமியக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார்.
கல்வி, மார்க்கம் மற்றும் ஒழுக்க விழுமியங்களை ஒருங்கிணைத்து தனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் நோக்கில் பயணிக்கும் றிஹாம் அஹமத்தின் இந்தச் சாதனை, அவரது பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அட்டாளைச்சேனை சமூகத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஊடகத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் அவரது தந்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் றமீஸ் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கமும், கல்லூரி நிர்வாகம் மற்றும் உஸ்தாத்மார்களின் வழிகாட்டுதலும் றிஹாம் அஹமத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன.
அல்குர்ஆனை மனனம் செய்ததுடன், ஆலிம் கல்வியையும் தொடர்ந்து வரும் றிஹாம் அஹமத், எதிர்காலத்தில் மார்க்க அறிவிலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும்.
அல்-ஹாபிழ் பட்டம் பெற்ற றிஹாம் அஹமத்துக்கு இம்போர்ட் மிரர் ஊடகவலையமைப்பு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.


0 comments :
Post a Comment