கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்டு வந்த இலங்கை நாட்டுக் கஞ்சா செடிகளை கல்முனை தலைமையகப் பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380) மற்றும் இஸ்மத் (88503) ஆகியோருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை பொலிஸார் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, குறித்த வீட்டின் நான்காம் மாடியில் அமைந்துள்ள மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு வந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மொட்டை மாடியில் முறையான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவது போன்று கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர், காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு உள்ளிட்ட சிற்றுண்டிகளை விற்பனை செய்வதாகக் கூறிக்கொண்டு, அதன் போர்வையில் இலங்கை நாட்டுக் கஞ்சாவையும் இரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின்போது மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றி, அவற்றைப் பிடுங்கி கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சியின் தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான லக்ஸ்மன் (24380), சமீர (61949), ஆரிப்தீன் (64940), மனோஜ் (87274), ராஜபக்ஸ (87987), பொலிஸ் உத்தியோகத்தர்களான வாசுல (35808), விஜிதரன் (90954) மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க (10560) ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கஞ்சா விற்பனையுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

0 comments :
Post a Comment