இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் தெரிவின் அடிப்படையில், ஈரானில் வாழும் இலங்கை சமூகத்தின் தலைவராக டாக்டர் பஹ்ருதீன் முஹம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பஷிஹா அஸ்மி கடந்த 7ஆம் திகதி சந்தித்திருந்தார். இதன்போதே ஈரானில் வாழும் இலங்கை சமூகத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூக அமைப்பின் தலைமையத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட் இடைக்காலத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு 2027ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், இலங்கை சமூகத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பிலும் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட், தனது பட்டப்படிப்பு முதல் கலாநிதிப் பட்டப்படிப்பு வரையான உயர்கல்வியை ஈரானில் மேற்கொண்டுள்ளார்.
தெஹ்ரானில் உள்ள கட்டார், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், டென்மார்க், இத்தாலி, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் போஸ்னியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்களிலும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ், சிங்களம், ஆங்கிலம், பாரசீகம், துருக்கி, அரபு மற்றும் உருது ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட், பல்வேறு நாடுகளுடனான இராஜதந்திர மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதற்கான சிறந்த அனுபவத்தையும் கொண்டுள்ளார்.
மறைந்த துணைப் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் அவர்களின் இரண்டாவது புதல்வரான கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட்டின் இந்நியமனம் ஈரானில் வாழும் இலங்கை சமூகத்துக்கும், இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நியமனத்தை முன்னிட்டு கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட்டுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




0 comments :
Post a Comment