கணித விஞ்ஞானத் திணைக்களத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திணைக்களத் தலைவர் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ தலைமை தாங்கினார். பிரயோக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம். நளீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்வின் வரவேற்புரையை விரிவுரையாளர் யூ.எல்.எம். அல்தாப் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சிரேஷ்ட பேராசிரியர் ஏ. ஜௌபர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் கே. கொமதிராஜ், பேராசிரியர் எச்.எம்.எம். நளீர் மற்றும் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ ஆகியோர் எம்.ஏ. றஹீம் அவர்களின் உயர்ந்த பண்புகள், மனிதநேயம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அவர் ஆற்றிய நீண்டகால மகத்தான சேவையைப் பாராட்டிப் பேசினர்.
அத்துடன், மாணவர்களுடனான அவரது சிறந்த அணுகுமுறை மற்றும் தனித்துவமான கற்பித்தல் முறையின் சிறப்பம்சங்களும் உரைகளில் சுட்டிக்காட்டப்பட்டன. அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு நிறைந்ததாக அமைய வேண்டும் என நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் இதயபூர்வமாக வாழ்த்தினர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, விரிவுரையாளர் எம்.எஸ். ஹாலிஷா அவர்களால் பிரியாவிடை வாழ்த்துப்பா வாசித்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஓய்வுபெறும் ஜனாப். எம்.ஏ. றஹீம் அவர்களுக்கு சக ஊழியர்களால் சிறப்பு ஞாபகச் சின்னமும் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
விழாவின் நாயகனான எம்.ஏ. றஹீம் தனது ஏற்புரையில், பல்கலைக்கழகத்தில் 25 வருட கால சேவையின் போது பெற்ற அனுபவங்களையும் நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். தனது பிரியாவிடை நிகழ்வில் குடும்பத்தினரையும் இணைத்துக்கொண்டதற்கும், நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த சக ஊழியர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவில் விரிவுரையாளர் எம். டி.ஏ.டி.எம். குமாரி நன்றியுரை நிகழ்த்தினார்.



0 comments :
Post a Comment