இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி கருத்தில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களிடம் ஹிஜாப் அணிந்து பணிக்கு வர முடியாது என நிர்வாக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் அவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கான உரிமையை வலியுறுத்தி குறித்த முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடாமல், வைத்தியசாலையின் சீருடை அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் சிலர் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அனைவரும் சமம், இனப் பாகுபாடு வேண்டாம்” என்ற கோஷங்கள் முற்போக்கானவையாகத் தோன்றினாலும், வரலாற்றில் சில சந்தர்ப்பங்களில் அவையே ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையை மறைப்பதற்கோ அல்லது நியாயப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஸ்வஸ்திகா அருளிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் விவசாயிகள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் காணி மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது காணிகளை இழந்த தமிழ் விவசாயிகள் தங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தபோது, “அனைத்து விவசாயிகளும் சமமானவர்கள்; தமிழர், சிங்களவர் என இன ரீதியாகப் பிரித்துப் பேச வேண்டாம்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு சமூகத்தின் மீது இன ரீதியான ஒடுக்குமுறை இடம்பெற்ற பின்னர், அந்த ஒடுக்குமுறையைப் பற்றி பேசும் சமூகத்திடம் “இனத்தைப் பற்றி பேச வேண்டாம், அனைவரும் சமம்” எனக் கூறுவது, நடைமுறையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சமூகத்தின் குரலை பலவீனப்படுத்தும் வாதமாக மாறக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான பிரச்சினையிலும், முஸ்லிம் பெண்களின் ஆடைத் தேர்வு மற்றும் மத அடையாளம் தொடர்பான உரிமையை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் ஆடை சுதந்திரத்தை ஆண் அதிகாரிகள் கட்டுப்படுத்துவது ஏற்க முடியாத விடயம் எனக் கூறிய அவர், அதற்கு எதிராக பெண்களே குரல் கொடுக்க வேண்டிய நிலையில், அதே பெண்கள் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் அணியும் உரிமைக்கு எதிராக நிற்பது கவலைக்குரிய முரண்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பெண்களாகிய நாமே குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக இன ரீதியான ஒரு வாதத்தை முன்வைத்து அதே பெண்களின் ஆடை உரிமையை கேள்விக்குள்ளாக்குவது கவலைக்குரியது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியமைத்தமை உண்மையான தீர்வாக அமையாது எனவும் ஸ்வஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை நிர்வாக ரீதியாகப் பிரிக்கும் நிலையை உருவாக்கக்கூடும் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
“இரண்டு சமூகங்களையும் பிரித்து வைத்திருப்பது எமது வெற்றி அல்ல. நாளை ஒரு சமூகத்தின் மீது ஒடுக்குமுறை இடம்பெறும்போது மற்றொரு சமூகத்தின் ஆதரவு எமக்கு தேவைப்படும். அவ்வாறிருக்க, இன்று முஸ்லிம் சகோதரிகளின் அடிப்படை உரிமை தொடர்பான பிரச்சினையில் நாம் எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பிலும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தனித்தனியாகப் பிரிந்து நிற்பதை விட, தங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர ஆதரவையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமூகத்திற்கு எதிராக ஒடுக்குமுறை இடம்பெறும் போது மற்றொரு சமூகத்தின் ஆதரவை நாட வேண்டிய சூழல் உருவாகும் நிலையில், இன்றைய சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை பாதிக்கக்கூடியதாக மாறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களையும் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் ஹிஜாப் அணிந்து தமது பணியை மேற்கொள்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வரும் உறவுக்கு இவ்விவகாரம் ஒரு பெரும் வடுவாக மாறுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட தரப்புகள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என சமூக செயற்பாட்டாளர் ஸ்வஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment