இலங்கையில் முதன்முறையாக NASSCOM ‘DISHA’ திட்டம் அறிமுகம் – இந்தியா–இலங்கை தொழில்நுட்ப கூட்டாண்மைக்கு புதிய மைல்கல்



ஹஸ்பர் ஏ.எச்.
ந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னணி வர்த்தக அமைப்பான NASSCOM-இன் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார் தலைமையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவொன்று, 2026 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 16 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கையின் தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (Tech SMEs) NASSCOM-இன் முக்கிய வழிகாட்டல் திட்டமான ‘DISHA’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் முதல் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

NASSCOM SME கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டுள்ள DISHA திட்டம், தொழில்நுட்பத் துறையில் இயங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மூலோபாய வணிக வழிகாட்டல், நிறுவன வளர்ச்சிக்கான திசைநெறிகள் மற்றும் நடைமுறை சார்ந்த வளர்ச்சி ஆலோசனைகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட, அதிக தாக்கமிக்க முன்முயற்சியாகும்.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகர் டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, அரசின் உயரதிகாரிகள், முன்னணி வர்த்தகத் தலைவர்கள், தொழில்நுட்ப வலையமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய NASSCOM தலைவர் ராஜேஷ் நம்பியார், இந்தியா–இலங்கை தொழில்நுட்ப கூட்டாண்மையின் வலிமையையும், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இரு நாடுகளுக்கும் உள்ள பரந்த வாய்ப்புகளையும் வலியுறுத்தினார்.

இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, இந்தியாவுடன் வலுவான தொழில்நுட்ப கூட்டாண்மையை உருவாக்குவதில் இலங்கையின் தொழில்துறை தலைவர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இலங்கையின் தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக DISHA திட்டத்தை அறிமுகப்படுத்திய NASSCOM-இன் முயற்சியை வரவேற்றதுடன், இக்கூட்டாண்மைக்கு இலங்கை அரசின் முழுமையான ஆதரவு இருப்பதையும் உறுதியளித்தார்.

அதேவேளை, NASSCOM SME கவுன்சிலின் தலைவர் மௌலிக் பன்சாலி, DISHA திட்டத்தின் நோக்கம், அதன் செயல்முறை மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து “தொழில்நுட்பம், கூட்டாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் WSO2 நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சஞ்சீவ வீரவர்ண, Hatch நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் ஜீவன் ஞானம், InfoBeans Technologies நிறுவனத்தின் இணை நிறுவனர் அவிநாஷ் சேதி, Metacube Software நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி பரிஜாத் அகர்வால், Integra Software Services நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீராம் சுப்பிரமண்யா ஆகியோர் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலை PickMe நிறுவனத்தின் நிறுவனர் ஜிஃப்ரி ஸுல்ஃபர் வழிநடத்தினார்.

DISHA வழிகாட்டல் திட்டத்தின் முதல் கட்டத்திற்காக இலங்கையிலிருந்து 48 தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. கலந்துரையாடலைத் தொடர்ந்து, தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்காக NASSCOM வழிகாட்டுநர்களினால் நேரடி ஆலோசனை அமர்வுகளும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளில் இந்தியா–இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :