தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விப் பயணத்தில் இந்தியாவுடன் புதிய அத்தியாயம்



மாணவர்–ஆசிரியர் பரிமாற்றம், புலமைப்பரிசில் மற்றும் கூட்டு ஆய்வுகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்
ந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால கல்வி மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரி (Sandeep Chaudhary), தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், இரு தரப்பினருக்கும் இடையிலான தற்போதைய கல்விசார் தொடர்புகள், எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குப் பயனளிக்கக்கூடிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி யூ.எல். செய்னுடீன் மற்றும் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஆகியோரும்

கலந்துரையாடலின்போது, இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, உயர்கல்வி ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கல்வியாளர் மற்றும் பேராசிரியர் பரிமாற்றம், புலமைப்பரிசில் வாய்ப்புகள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சர்வதேச அளவிலான புதிய அனுபவங்களையும் அறிவுப் பரிமாற்ற வாய்ப்புகளையும் உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவின் முதன்மைச் செயலாளர். சந்தீப் சௌத்ரி, இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மைகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான நேரடி தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பரிமாற்றத் திட்டங்கள், புலமைப்பரிசில்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்களுடன் உறவை வலுப்படுத்த தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தயார்

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் கல்விசார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அதன் ஆர்வத்திற்கும் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய சர்வதேச கல்விசார் கூட்டாண்மைகள் மூலம், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய கற்றல், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பல்கலைக்கழகத்தின் சர்வதேசமயமாக்கல் செயற்பாடுகளை வலுப்படுத்துவதிலும், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதிலும் இத்தகைய ஒத்துழைப்புகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் சுமுகமானதும் நட்புறவு மிக்கதுமான சூழலில் நிறைவடைந்தது.

சந்திப்பின் இறுதியில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால நட்புறவின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த விஜயம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கல்விசார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்ததுடன், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்காலத்தில் புதிய சர்வதேச வாய்ப்புகளை உருவாக்கும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்திற்கான முக்கிய அடித்தளமாக இக்கலந்துரையாடல் அமைந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :