கல்முனை பொதுச் சந்தையில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை – ஜூலை 31 முதல் அமுல்



அஸ்லம் எஸ். மௌலானா-
ல்முனை மாநகர பொதுச் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கும், நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்குமான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ. லசந்த களுவாராச்சி, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.ஆர். விஜயரத்ன, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச். றிஸ்வின், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்ஸன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சந்தை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது பொதுச் சந்தையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகள் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

முக்கியமாக, சந்தையைச் சூழவுள்ள வீதிகளில் மேற்கொள்ளப்படும் அங்காடி மற்றும் வீதியோர வியாபாரங்கள் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுவதாக மாநகர ஆணையாளர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து பொதுமக்களிடமிருந்தும் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநகர சபை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டால், வீதியோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வர்த்தகர்கள் தாமாக முன்வந்து வீதியோர வியாபாரங்களை நிறுத்தி, சந்தைக்குள் ஒழுங்காக வியாபாரம் மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தினார்.

இதன்படி, எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் அனைத்து வீதியோர வியாபார நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், வீதிகளில் இயங்கிவரும் அனைத்து அங்காடி வியாபாரங்களும் சந்தைப் பகுதிக்குள் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் வர்த்தகர்களின் இணக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர சபையும் சந்தை வர்த்தக சங்கமும் இணைந்து சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சந்தை இயங்கும் நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு சந்தை வர்த்தக சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணக்கம் தெரிவித்தார்.

இதனுடன், மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தரையில் அல்லது குறைந்த உயரத்தில் வைத்து விற்பனை செய்வதை முற்றாகத் தவிர்த்து, குறைந்தது மூன்று அடி உயரமுள்ள தட்டிகளில் வைத்தே விற்பனை செய்ய வேண்டும் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச். றிஸ்வின் அறிவுறுத்தினார்.

அதேவேளை, மாநகர சபையின் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்ற வர்த்தகர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், சந்தையின் இரவுநேர பாதுகாப்பை வலுப்படுத்துதல், மலசலகூடங்களை தொடர்ச்சியாக சுத்தம் செய்தல், கடையறைகளின் திருத்தப் பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட வர்த்தகர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பிலும் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கவனம் செலுத்தியதுடன், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :