இந்த இணையவழி கலந்துரையாடலில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், துருக்கி, போலந்து, ஆஸ்திரியா, ருமேனியா, ரஷ்ய கூட்டாட்சி, சைப்ரஸ், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளைப் பொறுப்பேற்றுள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு பணியகங்களின் தலைவர்கள் இணைந்திருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய கௌரவ அருண் ஹேமச்சந்திர, இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களே Sri Lanka Expo 2027-ன் சர்வதேச வெற்றியை உறுதிப்படுத்தும் முன்னணி இணைப்புப் பாலமாக செயல்பட வேண்டியுள்ளன என்று வலியுறுத்தினார்.
நம்பகமான சர்வதேச கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நீண்டகால வர்த்தகக் கூட்டாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை இலங்கை எக்ஸ்போ 2027-இல் பங்கேற்கச் செய்வதில் வெளிநாட்டு தூதரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
மேலும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது என்றும், இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உண்மையான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தரமான சர்வதேச பங்காளிகளை ஈர்ப்பதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளில் வேகமாக மாறிவரும் வர்த்தகத் தரநிலைகள் மற்றும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மறுசுழற்சி (Recycling), சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி, ஒழுக்கமான தொழிலாளர் நடைமுறைகள், பொருட்களின் மூலாதாரத்தை உறுதிப்படுத்தும் Traceability, நிலைத்தன்மை கொண்ட பொதியிடல் (Sustainable Packaging) மற்றும் பொறுப்பான விநியோகச் சங்கிலி (Responsible Supply Chain) போன்ற அம்சங்களுக்கு Sri Lanka Expo 2027-இல் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் (SMEs) தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான வலுவான தளமாக Sri Lanka Expo 2027 அமைய வேண்டும் என்றும், இலங்கையை நம்பகமான, புதுமைத்திறன் மிக்க, ஒழுக்கமான மற்றும் போட்டித்திறன் வாய்ந்த வர்த்தகப் பங்காளியாக உலக அரங்கில் நிலைநிறுத்தும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைய வேண்டும் என்றும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.














0 comments :
Post a Comment