அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் ஏற்பாட்டில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பத்து நாள் தெலுங்கு மொழிப் பயிற்சிப் பட்டறை, நேற்று (30.08.2026) சிறப்பாக நிறைவடைந்தது.
கொழும்பு – 14, ஸ்ரேஸ் வீதியில் அமைந்துள்ள மினி அப்பலோ வைத்தியசாலையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு, மினி அப்பலோ வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் W.U. நாயுடு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் தலைவர் எம். அன்பழகன், புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இலங்கையில் தெலுங்கு மொழியின் பயன்பாட்டையும், மொழி அறிவையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில், தெலுங்கு மொழியின் அடிப்படை அறிவு, வாசிப்பு, எழுத்து, உரையாடல் மற்றும் மொழிப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த சுரவரம் பிரதாப்ரெட்டி தெலுங்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தெலுங்கு தொண்டர் ஆசிரியர் ஏரா நாயுடு ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு தொடர்ச்சியாக பத்து நாட்களும் பயிற்சிகளை வழங்கினர்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பங்கேற்பாளர்களுக்கு இறுதி நாள் நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேவேளை, தெலுங்கு மொழி பயிற்சியை சிறப்பாக முன்னெடுத்த வளவாளர்களான ஸ்ரீனிவாசன் மற்றும் ஏரா நாயுடு ஆகியோருக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றியோர், இலங்கையில் தெலுங்கு மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் இவ்வாறான மொழிப் பயிற்சிப் பட்டறைகள் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், எதிர்காலத்திலும் தெலுங்கு மொழியின் வளர்ச்சியை முன்னிறுத்தி தொடர்ச்சியான பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பத்து நாட்களாக இடம்பெற்ற இப்பயிற்சிப் பட்டறை, பங்கேற்பாளர்களின் ஆர்வத்துடனும் சிறந்த பங்களிப்புடனும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments :
Post a Comment