புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியச் சந்திப்பு நிகழ்வு, எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவின் நல்லாசியுடன், மகளிர் அணித் தலைவியும் எழுத்தாளருமான திருமதி சிவகௌரி (சுடரி) தலைமையில், வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்கா வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள், அவர்களின் சமூகப் பின்னணிகள் மற்றும் பிரதேச ரீதியான வாழ்க்கைச் சூழல்களை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு பதிவு செய்கின்றன என்பது தொடர்பாக இச்சந்திப்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியாவின் மூத்த இலக்கியவாதியான தமிழ்மணி அகளங்கனின் ‘முற்றத்துக்கரடி’ சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக வனிதா சேனாதிராசாவும், புலம்பெயர் எழுத்தாளர் குடத்தனை உதயனின் ‘அகதியின் நாட்குறிப்பு’ நூல் தொடர்பாக லிசாந்தினி கிருஷ்ணன் ராஜாவும் கருத்துரைகளை வழங்கினர்.
குறித்த நூல்களில் வெளிப்படும் வாழ்வியல் அனுபவங்கள், சமூகப் பார்வைகள், மனித உறவுகள் மற்றும் காலத்தின் பதிவுகள் தொடர்பாக கருத்துரையாளர்கள் தமது பார்வைகளை முன்வைத்ததுடன், நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் சமூகமளித்திருந்த மூத்த இலக்கியவாதி தமிழ்மணி அகளங்கன், தமது படைப்புகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிறப்பான பதிலுரையையும் வழங்கினார்.
புதிய அலை கலை வட்டம் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி, நிகழ்வை சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.
சுடரிக்கு பாராட்டுச் சான்றிதழ்
இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணித் தலைவியும் எழுத்தாளருமான சுடரி அவர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பாராட்டி, அகில இலங்கை சற்சங்க சபையினரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்வேறு பிரதேசங்களின் இலக்கியங்கள் உள்வாங்கப்படும்
இலக்கியச் சந்திப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்னிலங்கை உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுடன், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் தமிழ் மொழி நூல்களும் இச்சந்திப்புகளில் உள்வாங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.
அத்துடன், வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பேசும் வாழ்வியல் அம்சங்கள், சமூக அனுபவங்கள் மற்றும் பிரதேச அடையாளங்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே இந்த இலக்கியச் சந்திப்பின் பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இலக்கியச் சந்திப்பு
இலக்கிய ஆர்வலர்களுக்கான தொடர்ச்சியான களமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்கா வளாகத்தில் இலக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரும் பங்கேற்கக்கூடிய திறந்த களமாக இது அமையவுள்ளதால், இலங்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு புதிய வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்புகளில் குறிப்பிட்ட நூல்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்க விரும்புவோர், எந்த நூல் தொடர்பாக, எந்தக் காலப்பகுதியில் கருத்துரை வழங்க விரும்புகின்றனர் என்ற தகவலை முன்கூட்டியே ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கினால், அதற்கான நேரம் ஒதுக்கித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கருத்துரைக்குத் தெரிவு செய்யப்படும் நூல்கள் இலங்கையர்களால் எழுதப்பட்டு தமிழ் மொழியில் வெளிவந்த நூல்களாக இருக்க வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு, வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இலக்கியச் சந்திப்பு, பிரதேச எல்லைகளைக் கடந்து தமிழ் இலக்கியத்தின் பல்வேறு குரல்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் தொடர்ச்சியான இலக்கியப் பரிமாற்றக் களமாக உருவெடுத்து வருகிறது.









0 comments :
Post a Comment