நிதி அல்ல, எமக்கு நீதியே முதன்மையானது






காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார் – அம்பாறையில் செல்வராணி காரசாரம்; எம்.பி. கோடிஸ்வரனும் பங்கேற்பு

பாறுக் ஷிஹான்-

“எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவைதான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது. நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி கிடைத்த பின்னரே நாங்கள் நிதி குறித்து சிந்திப்போம்” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல.

இலங்கை அரசாங்கம் எங்களை எவ்வாறாவது தனது உள்நாட்டுப் பொறிமுறைக்குள் கொண்டு வந்து, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கின்றது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சில நாடுகளில் 30, 40 வருடங்களுக்குப் பின்னரே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம்.

எமது இலக்கை அடைவதற்கு இன்னும் 15 முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்றால், நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்.

இன்று செம்மணியில் 650-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. எமது உறவுகளை காணாமல் ஆக்கியது இந்த இலங்கை அரசுதான்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வலி எமக்குத் தெரியும்; நீதியைப் பெற்றுத் தருவோம்’ என்று கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், ‘எனது இராணுவத்தினரை என்னால் காட்டிக்கொடுக்க முடியாது’ என ஜனாதிபதி கூறிவிட்டார்” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது, எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட மாநாடு தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இவ்விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :