ஏ.எஸ்.எம். அர்ஹம்-
இஸ்லாமிய புத்தாண்டான முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு உடனடி கவனம் செலுத்திய கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், தனது மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக சர்வதேச உதவி அமைப்புகளையும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் எமது பகுதிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக, YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் மாலைதீவைத் தளமாகக் கொண்டு செயற்படும் Neurodiversity Association – Male அமைப்பின் துணைத் தலைவி அமினத் அஸீமா (Aminath Azeema) அவர்கள் கல்முனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் பாடசாலையின் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மகஜர், பாடசாலை நிர்வாகத்தின் சார்பில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில், விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்நோக்கும் கல்விசார் சவால்கள், கற்றல் உபகரணத் தேவைகள், வசதிகள் மேம்பாடு மற்றும் அவர்களது எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாணவர்களின் நிலைமைகளை நேரடியாக அறிந்துகொண்ட மாலைதீவு பிரதிநிதிகள், அவர்களுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூர் சமூகங்களின் தேவைகளை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுடன் இணைத்து செயற்படுத்துவதன் மூலம் பல்வேறு நலத்திட்ட வாய்ப்புகளை உருவாக்கி வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், குறிப்பாக விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இந்த விஜயம், கிழக்கு மாகாணத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி மற்றும் நலன்புரி சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியமான ஆரம்ப கட்டமாகப் பார்க்கப்படுகின்றது.





0 comments :
Post a Comment