நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபையின் 04வது சபையின் 12வது மாதாந்த அமர்வு இன்று (16) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிலையில், நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை காரணமாக சபையில் கடும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் வழமையான நிர்வாக நடவடிக்கைகளுடன் அமைதியாகத் தொடங்கிய கூட்டம், பின்னர் அபிவிருத்தித் திட்டங்கள், வள ஒதுக்கீடுகள் மற்றும் சமூக உணர்வுகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்களுக்கு வழிவகுத்தது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கடந்த கூட்டத்தின் அறிக்கையும் ஏகமனதாக உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட டித்வா வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு–07 பகுதியில் அமைந்துள்ள திருமால்முக வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எழுந்து, அபிவிருத்தித் திட்டங்கள் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை புறக்கணிக்கும் வகையில் அமுல்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
முஸ்லிம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளுக்கே திட்டங்கள் ஒதுக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள், திட்ட ஒதுக்கீடுகள் தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் அரச நிறுவனங்களின் அனுமதிகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
இதன்பின்னர் பல நிர்வாக பிரேரணைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன. மீளளிக்கப்படாத முத்திரை வரி தொகைகளைப் பெற்றுக்கொள்வது, புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கை நடத்துவது மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வது உள்ளிட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையில், சபையின் JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்வதற்கான பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதையடுத்து, மேலதிக விளக்கங்களுக்காக அது ஒத்திவைக்கப்பட்டது.
சபையை சூடேற்றிய பள்ளிவாசல் காணி வழக்கு
கூட்டத்தின் உச்சக்கட்ட பரபரப்பாக அமைந்தது பள்ளிவாசல் காணி வழக்கு தொடர்பான விவாதமாகும்.
குறித்த வழக்கை முன்னெடுத்து வரும் சபையின் சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டவுடன், முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
வழக்கின் உணர்வுபூர்வ தன்மையையும் சமூகங்களுக்கு இடையிலான தாக்கத்தையும் கருத்தில் கொள்ளாமல் சட்டச் செலவினத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் வாதிட்டனர். இதனால் சபையில் கடும் வாக்குவாதங்கள் வெடித்ததுடன், உறுப்பினர்கள் இடையே பலமுறை கருத்து மோதல்களும் ஏற்பட்டன.
நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உருவானதால், தவிசாளர் கூட்டத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு
மீண்டும் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, குறித்த பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விட தவிசாளர் உத்தரவிட்டார்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்க மறுத்ததுடன், தமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மீதமிருந்த உறுப்பினர்களுடன் குழுநிலை விவாதம் நடத்தப்பட்டு, பிரேரணையின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. பின்னர் வெளிநடப்பு செய்த உறுப்பினர்களும் மீண்டும் சபையில் இணைந்தனர்.
எதிர்ப்புக்கு மத்தியில் தவிசாளர் பின்வாங்கல்
உறுப்பினர்கள் முன்வைத்த ஆட்சேபனைகளையும் விவகாரத்தின் உணர்வுபூர்வ தன்மையையும் கருத்தில் கொண்டு, சட்டத்தரணியின் கொடுப்பனவை ரூபா 10,000 ஆக உயர்த்தும் பிரேரணையை தவிசாளர் இறுதியில் வாபஸ் பெற்றார்.
இதனால் சபையில் நிலவிய பதற்றம் ஓரளவு தணிந்ததுடன், மேலும் தீவிரமடையக்கூடிய மோதல் தவிர்க்கப்பட்டது.
கண்ணகி அம்மன் ஆலயக் காணிக்கும் அனுமதி
இதேவேளை, காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் தகனசாலை அமைப்பதற்கும், புதிய சட்டபூர்வ குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 30 ஆண்டுகளுக்கு அந்தக் காணியைப் பயன்படுத்துவதற்கும் சபை அனுமதி வழங்கியது.
அரசியல் மற்றும் சமூக ரீதியில் முக்கியத்துவம் பெறும் விவகாரம்
மொத்தத்தில், காரைதீவு பிரதேச சபையின் இந்த மாதாந்த அமர்வு பல நிர்வாக மற்றும் அபிவிருத்தித் தீர்மானங்களை எடுத்திருந்தாலும், பள்ளிவாசல் காணி வழக்கை மையமாகக் கொண்ட விவாதம், வெளிநடப்பு மற்றும் பின்னர் பிரேரணை வாபஸ் பெறப்பட்டமை ஆகியவை கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக மாறின.
பிரதேச அரசியல் மற்றும் சமூக உறவுகளில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரம், எதிர்கால சபை அமர்வுகளிலும் முக்கிய கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment