கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்கும் விழா பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களின் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வையும், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நிகழ்வின் பிரதம பேச்சாளராக சாய்ந்தமருது முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம், அல்-ஹாபிழ் அல்-ஆலிம் உஸாமா பரீட் (ஸஹ்தி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில், ஹிஜ்ரி ஆண்டின் ஆரம்பமான முஹர்ரம் மாதத்தின் வரலாற்றுப் பின்னணி, நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்தின் முக்கியத்துவம், இஸ்லாமிய புத்தாண்டின் ஆன்மீகப் பெறுமதி மற்றும் இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் தங்களது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விசேட அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், கிழக்கு மாகாண கணனி தகவல் தொழில்நுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல். நூருல் ஹுதா உமர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கல்வியுடன் ஒழுக்கம், தொழில்நுட்ப அறிவுடன் மார்க்கப் பண்புகள் ஆகியவை இணைந்து வளர வேண்டும் என்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதீம், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் பங்கேற்புடன் குர்ஆன் ஓதல், இஸ்லாமிய பாடல்கள், கவிதை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின. அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற கணித வினா-விடைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கல்வித் திறமைகள், படைப்பாற்றல்கள் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றதுடன், புதிய ஹிஜ்ரி ஆண்டை உற்சாகத்துடனும் ஆன்மீக உணர்வுடனும் வரவேற்கும் அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.

0 comments :
Post a Comment