தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிதி நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு



லங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “Financial Consumer Protection” (நிதி நுகர்வோர் பாதுகாப்பு) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026 ஜூன் 17 ஆம் திகதி கலை மற்றும் கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னதாக, இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைதீன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் (கலாநிதி) எம்.எம். பாஸில், பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பதில் தலைவர் எம்.என்.எப். வசீமா, இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களிடையே நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதன் அவசியம், நவீன நிதிச் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல், நிதி மோசடிகளைத் தவிர்ப்பது மற்றும் நிதி நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மேலும், பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான கல்வி மற்றும் விழிப்புணர்வு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கலை மற்றும் கலாசார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பதில் தலைவரான எம்.என்.எப். வசீமா வரவேற்புரையாற்றினார். ஆரம்ப உரையை கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் (கலாநிதி) எம்.எம். பாஸில் நிகழ்த்தினார்.

இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரனின் வழிகாட்டலின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் முகாமையாளர் டி. சஞ்சீவன் பிரதான வளவாளராக கலந்து கொண்டு, நிதி நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விரிவான விழிப்புணர்வு அமர்வை நடாத்தினார்.

அமர்வின் போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய நுகர்வோர் உரிமைகள், டிஜிட்டல் வங்கி சேவைகளின் பாதுகாப்பான பயன்பாடு, இணையவழி நிதி மோசடிகளை இனங்காணும் முறைகள், நிதி குறைதீர் நடைமுறைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நுகர்வோர் பாதுகாப்பு கட்டமைப்புகள் தொடர்பாக மாணவர்களுக்கும் கல்விசார் சமூகத்தினருக்கும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பொருளியல் பேராசிரியர் பேராசிரியர் கலாநிதி ஏ.ஏ.எம். நுபைல், சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.சி.எம். ஹனாஸ், கலிதீன் பாத்திமா ரினோஷா, ஏ. பாத்திமா தஹாரா உள்ளிட்ட கல்வியியலாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பெருமளவிலான மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே நிதி கல்வியறிவையும் நிதி விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்கான பயனுள்ள முயற்சியாக அமைந்தது.

நிகழ்வின் நிறைவில் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் யு.எல்.எம். மில்ஹானா நன்றியுரை வழங்கினார்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :