"நான் நிரபராதி எனில், குற்றச்சாட்டுகளுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?" என்ற கேள்வி மீண்டும் சமூக விவாதமாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்த்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்த்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் ஒரு பகுதியாக கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்திருந்தது. அந்தச் சூழ்நிலையிலேயே இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் முன்கூட்டிய நீதிமன்றப் பாதுகாப்பும்
சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு விரைவில் பிணை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், நீண்டகால தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் மாதக்கணக்கில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட முடியும்.
இந்த காரணத்தினாலேயே, கைது நடவடிக்கைக்கு முன்னரே நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறும் நடைமுறை சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு நபர், தமக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இன்றி அல்லது அரசியல் பழிவாங்கல் நோக்கில் கைது செய்யப்படலாம் என நம்பினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்து சட்டப் பாதுகாப்பைப் பெற முடியும். இத்தகைய மனுக்கள், விசாரணை அமைப்புகள் நீதிமன்றத்தின் அல்லது சட்டமா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.
ஆனால் ஏன் இந்த அச்சம்?
இங்கேதான் பொதுமக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி எழுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றச் செயலிலும் தமக்கு பங்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாக நம்புகின்றார் எனில், கைது நடவடிக்கையைத் தடுக்கும் வகையிலான இந்த மனுவை ஏன் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது?
நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் உயர்ந்த பதவிகளை வகித்த ஒருவர், சட்ட அமுலாக்க அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொள்ளாமல் முன்கூட்டியே நீதிமன்றப் பாதுகாப்பை நாடுவது பல்வேறு சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரும் சில சிவில் சமூக அமைப்புகளும், "நிரபராதிகள் விசாரணைக்கு அஞ்ச வேண்டியதில்லை" என்ற வாதத்தை முன்வைத்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
உண்மையை அறியும் போராட்டம் தொடர்கிறது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னரே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதா? தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள் யார்? பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் வலுவாகவே உள்ளது.
இந்த தாக்குதலின் உண்மையான பின்னணியை வெளிக்கொணரவும், பொறுப்புக்கூற வேண்டிய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தவும் தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்திருந்தது. அதன்படி, பாதுகாப்புத் துறையின் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் தற்போது வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கத்தோலிக்க திருச்சபை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிவில் அமைப்புகள், இந்த விசாரணைகள் எந்தவித அரசியல் அழுத்தங்களுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், உண்மையை மறைக்கும் எந்த முயற்சியும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், அதிகாரம், பதவி அல்லது செல்வாக்கு என்பவற்றைக் கடந்து அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் போன்ற நாட்டையே உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் தொடர்பாக முழுமையான உண்மையை வெளிக்கொணர்வது நீதிக்கான தேவையாக மட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களின் மனநிறைவிற்கும் சமூக நம்பிக்கையை மீட்டெடுப்பதற்குமான அடிப்படைப் பொறுப்பாகவும் அமைகிறது.
எனவே, இந்த விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதையே மக்கள் இன்று கவனித்து வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை நடைமுறையில் நிரூபிப்பதே அரசாங்கத்தின் மிகப் பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் அதன் நம்பகத்தன்மைக்கான சோதனையாகவும் அமைந்துள்ளது.
.png)
0 comments :
Post a Comment